மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வாஷிங்டன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் கண்ட வர்த்தக உடன்படிக்கையின் “பங்காளிகள்” “சட்டவிரோத வெளிநாட்டினர்” மற்றும் “போதைப்பொருட்களால்” அமெரிக்கா மீதான “படையெடுப்பை” நிறுத்தாவிட்டால், ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் “முதல் நாளிலிருந்து” அனைத்து கனேடிய மற்றும் மெக்சிகன் தயாரிப்புகள் மீதும் 25 சதவீத வரியை விதிப்பதாக சூளுரைத்துள்ளார்.
ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக, இதேபோன்ற அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இந்த விஷயத்தில் சீனாவுக்கு வரி 35 சதவீதமாக இருக்கும்.
ட்ரம்ப், இந்த வர்த்தகப் போர் நடவடிக்கைகளைத் திணிப்பதானது, வட அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும். மேலும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ மூலோபாயத் தாக்குதலை வியத்தகு முறையில் தீவிரப்படுத்துவது பற்றி கூறவேண்டியதே இல்லை.
அவரது வர்த்தகப் போர் இலக்குகள் தங்கள் சொந்த வரிவிதிப்பு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் பதிலளிக்க நிர்பந்திக்கப்படும். இது பெரும் மந்தநிலையில் வெடித்த மற்றும் இரண்டாம் உலகப் போரைத் தூண்டுவதற்கு உதவியது போன்ற ஒரு வர்த்தகப் போரில் உலகை விரைவாக மூழ்கடிக்கும்.
ட்ரம்பின் வர்த்தகப் போரில், தற்போது குறுக்கு வழியில் உள்ள நாடுகள் அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளாக உள்ளன. 2023 இல், இந்த நாடுகள் அமெரிக்க இறக்குமதிகளில் 1.32 டாலர் டிரில்லியனுக்கும் அதிகமாக இருந்தன. இது அனைத்து அமெரிக்க இறக்குமதிகளிலும் சுமார் 45 சதவீதமாகும். (மெக்ஸிகோ 16 சதவீத பங்கையும், கனடா 15 சதவீத பங்கையும், சீனா 14 சதவீதத்தையும் கொண்டுள்ளது) கடந்த ஆண்டு அமெரிக்க ஏற்றுமதிகளில் 820 பில்லியன் டாலருக்கும் (41 சதவீதம்) அதிகமாக அவை கொண்டிருந்தன, இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சென்ற பங்கை விட இரு மடங்காகும்.
இந்த புள்ளிவிபரங்கள், கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகியவை எந்தளவுக்கு பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதையும், மேலும் இந்த மூன்று நாடுகளிலும் உற்பத்திச் சங்கிலிகள், தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் நுகர்வோர் விலைகள் ஆகியவற்றில் சுங்க வரிகளை சுமத்துவது, உடனடியாக மற்றும் பாரியளவில் சீர்குலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மட்டுமே எடுத்துக்காட்டத் தொடங்குகின்றன.
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரண்டிற்கும், அமெரிக்கா மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் முக்கால்வாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவிற்குச் செல்கின்றன. மெக்சிகோவைப் பொறுத்தவரை இந்த சதவீதம் இன்னும் அதிகமாக உள்ளது.
USMCA (அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் மற்றும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான NAFTA இன் தொடர்ச்சி) மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறி, தண்டிக்கும் சுங்கவரிகளைத் திணிக்க அச்சுறுத்துவதில், ட்ரம்ப், அனைத்து சட்ட கட்டுப்பாடுகளையும் வேண்டுமென்றே புறக்கணித்து, “மூலோபாய போட்டியாளர்கள்” மற்றும் அமெரிக்காவின் வெளிவேட கூட்டாளிகள் மற்றும் “பங்காளிகள்” ஆகிய இருவருக்கும் எதிராக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நலன்களை ஈவிரக்கமின்றி பின்தொடரவிருப்பதாக உலகிற்கு சமிக்ஞை செய்கிறார்.
ட்ரம்ப் திங்களன்று பிற்பகல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “போதை மருந்துகள், குறிப்பாக ஃபெண்டானைல், மற்றும் அனைத்து சட்டவிரோத வெளிநாட்டினரும் நமது நாட்டின் மீதான இந்த படையெடுப்பை நிறுத்தும் வரையில் இந்த வரிவிதிப்பு நடைமுறையில் இருக்கும்!” என்று அறிவித்தார்.
கனடா பல விடயங்களில் வாஷிங்டனின் மிக நெருக்கமான ஏகாதிபத்திய கூட்டாளி ஆகும். இருப்பினும், ட்ரம்ப் தனது Truth என்ற சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட ஒரு இடுகையின் மூலம் மெக்சிகோவின் பொருளாதாரத்தை வீழ்த்துவதாக வெளிப்படையாக அச்சுறுத்தினார்.
ட்ரம்ப் அவரது USMCA கூட்டாளிகளை வர்த்தகப் போரைக் கொண்டு அச்சுறுத்துவதன் மூலமாக, வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஆதார வளங்களை அணுகுவது ஆகியவற்றின் மீது சலுகைகளைப் பறிக்க முனைந்து வருகிறார். இவை, செல்வவளத்தை அதிகரிக்கும் மற்றும் அமெரிக்க முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுவின் புவிசார் மூலோபாய நிலையை பலப்படுத்தும். ட்ரம்பும் அவரது “அமெரிக்கா முதல்” கோஷத்தின் கூட்டாளிகளும், ஒட்டாவா மற்றும் மெக்சிகோ சிட்டியை அச்சுறுத்தி தங்கள் எல்லைப் “பாதுகாப்பு” மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை, வாஷிங்டனின் நோக்கங்கள் மற்றும் நலன்களுக்கு ஏற்றவாறு கொண்டு வர விரும்புகிறார்கள். மேலும் கனடாவைப் பொறுத்தவரையில் எதிர்கால இராணுவச் செலவினங்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன்களை அதிகமாகச் செலுத்த வேண்டும்.
ட்ரம்ப் தனது வர்த்தகப் போர் அச்சுறுத்தலை “அன்னிய படையெடுப்பு” மீதான தனது வெறித்தனமான கண்டனங்களுடன் இணைத்திருப்பது, அவருக்கு வரிகளை விதிக்க ஒரு போலியான போலி-சட்ட சாக்குப்போக்கை வழங்குவதற்கும், வர்த்தக சட்டத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு விதிகளை மேற்கோள் காட்டுவதற்கும் ஒரு வழிமுறை மட்டுமல்ல. அது, அவரது முதல் நிர்வாகத்திற்கு முன்பு, எப்போதாவது அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருந்தது.
அவர் ஒட்டாவா மற்றும் மெக்ஸிகோ நகரத்தை புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போருக்கு அரசியல் மற்றும் தளவாட ஆதரவை வழங்குமாறு கட்டாயப்படுத்த விரும்புகிறார். முதல் நாளிலிருந்தே அவரது நிர்வாகம், பல தசாப்தங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மில்லியன் கணக்கான “சட்டவிரோத” புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தும் குறிக்கோளை கட்டவிழ்த்துவிட உத்தேசித்துள்ளது.
இந்த குடியேற்ற எதிர்ப்பு சூனிய வேட்டையானது, ட்ரம்பின் முழு பாசிச நிகழ்ச்சி நிரலுக்கும் மையமாக இருக்கிறது. 2 டிரில்லியன் டாலர் பட்ஜெட் வெட்டுக்கள், பெருவணிகங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கான வரிக் குறைப்புக்கள் மற்றும் மூலதனத்தின் மீதான அனைத்து ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளையும் அகற்றுவது உட்பட ஒரு சமூக எதிர்ப்புரட்சிக்கான திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் செயல்படுத்தும்போது, அது தவிர்க்க முடியாமல் போராட்டமாக வெடிக்கும். இந்த போராட்ட எதிர்ப்புகளை ஒடுக்க அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தேசிய காவலர் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான சாக்குப்போக்காக குடியேற்ற எதிர்ப்பு சேவையாற்றும்.
ட்ரம்பும் அவரது ஆலோசகர்ககளும், புலம்பெயர்ந்தோர் மீதான போரை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவும், வட அமெரிக்கா, இராணுவமயமாக்கப்பட்ட வெளிப்புற மற்றும் உள் எல்லைகளை உருவாக்குவதற்கான அவர்களின் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நெம்புகோலாகவும் தெளிவாகக் காண்கிறார்கள். மேலும் இது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிராகவும், ட்ரம்பின் வார்த்தைகளில் கூறுவதானால், “உள்நாட்டில் உள்ள எதிரிக்கு”, அதாவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டுள்ளது.
2017 இல் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த ட்ரம்ப், NAFTA வை முழுவதுமாக அழிக்கப்போவதாக மிரட்டினார். பின்னர், ஒட்டாவா மற்றும் மெக்சிகோ சிட்டி உடனான விளிம்புநிலை பேச்சுவார்த்தைகள் மூலம், அவர் முதலில் சீனாவிற்கு எதிராக USMCA ஆக மறுவடிவமைத்தார். இது, அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் மிகவும் வெளிப்படையாகவும், வர்த்தகப் போரை நடத்துவதில் மிகவும் வெளிப்படையாகவும் இருக்கும் ஒரு வணிகக் கூட்டமைப்பாகும். ஆனால், ஐரோப்பா, ஜப்பான் மற்றும் பிற சக்திகளுக்கு எதிராகவும் இதனை அவர் செய்தார்.
ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல் கனடாவின் தாராளவாத அரசாங்கத்தையும் ஒட்டுமொத்த முதலாளித்துவ உயரடுக்கையும் பீதியடையச் செய்துள்ளது. கடந்த திங்களன்று மாலை, கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ட்ரம்பை சமாதானப்படுத்த தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரது உதவியாளர்கள் இதனை ஒரு “நல்ல” உரையாடல் என்று கருதினார். மேலும், நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் செவ்வாய்கிழமை மாலை நடைபெறவுள்ளதுடன், பிரதமர் மற்றும் பத்து மாகாண முதலமைச்சர்களின் சந்திப்பு புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கனடாவின் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அமெரிக்க பங்காளிகள் மற்றும் போட்டியாளர்களால் அதன் மீது திணிக்கப்பட்டு வரும் அதிகரித்த அழுத்தத்திற்கு அதன் விடையிறுப்பானது, உள்நாட்டிலும் மற்றும் உலக அரங்கிலும் அதன் சூறையாடும் நலன்களைப் பின்தொடர்வதிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாக தாக்குவதிலும் கவனத்தை குவிக்கும்.
செவ்வாயன்று, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெபிளாங்க் (Dominic LeBlanc), கனடா அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடனான அதன் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் என்றும், RCMP மற்றும் எல்லை பாதுகாப்பு முகமைக்கு அதிக ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்கள் உட்பட கூடுதல் வளங்களை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ட்ரம்பின் சமீபத்திய அச்சுறுத்தல்களுக்கு முன்னரே கூட, நிதியியல் உயரடுக்கின் பாரம்பரிய குரலான குளோப் அன்ட் மெயில் (Globe and Mail) குறிப்பிட்டதைப் போல, கனடா “ட்ரம்பின் சுவர்களுக்குப் பின்னால்” இருப்பதை உறுதிப்படுத்தவும், “போட்டித்தன்மையுடன்” இருப்பதை உறுதிப்படுத்தவும், வலதை நோக்கிய ஒரு தீவிர திருப்பத்தின் அவசியத்தை கனேடிய ஆளும் வர்க்கம் உச்சரித்திருந்தது. இந்த வர்க்கப் போர் திட்டநிரலில், சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, குறைந்தபட்சம் ட்ரம்ப் செய்ததற்கு சமமாக பெருநிறுவனங்களுக்கு வரி குறைப்புக்கள், அடுத்த நான்காண்டுகளுக்குள் இராணுவ செலவுகளை இரட்டிப்பாக்குவது, மற்றும் வாஷிங்டனுக்கு “உதவக்கூடிய” ஏனைய நடவடிக்கைகள் என்பன முடுக்கிவிடப்படும்.
முன்னணி கனேடிய அரசியல்வாதிகளும், மெக்சிகோவின் செலவில் ட்ரம்புடன் ஒரு தனி இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நாடுமாறு கனடாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். வட அமெரிக்க சந்தையில் சீனா ஊடுருவுவதற்கு மெக்சிகோ ஒரு “கொல்லைப்புறமாக” இருந்து சேவையாற்றி வருவதாக, கனடா தாராளவாத அமைச்சர்களிடம் இருந்து கோபமான கண்டனங்களும் இதனுடன் சேர்ந்துள்ளன.
மெக்சிகோ நகரில், ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தலுக்கான எதிர்வினையும் இதேபோன்று பீதியடைந்துள்ளது. மெக்சிகோ ஏற்கனவே வாஷிங்டனின் கட்டளையை நிறைவேற்றி வருவதாக மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) வேண்டுகோள் விடுத்துள்ளார். சீன இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதற்கான அவரது அரசாங்கத்தின் முயற்சிகள், நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்கு வருவதைத் தடுக்க துருப்புகளை நிலைநிறுத்துதல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது ஆகியவற்றை விரக்தியுடன் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள், அனைவரது வேலைகள் மற்றும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும், உலகை மறுபங்கீடு செய்வதற்கும் சூறையாடுவதற்குமான ஒரு உந்துதலில் அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் தூண்டிவிட்டுள்ள போர்களுக்கு எதிராகவும், அனைவரது வேலைகள் மற்றும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும், வட அமெரிக்காவிலுள்ள இரட்டை ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் மெக்சிக்கன் முதலாளித்துவ வாடிக்கையாளர்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும்.
வட அமெரிக்காவின் போட்டி ஆளும் வர்க்கங்களுக்கு இடையே எத்தகைய மோதல்கள் இருந்தாலும், முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் முனைவில் அவை ஒன்றுபட்டு நிற்கின்றன.
தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கும் அதன் போராடும் ஐக்கியத்தை உருவாக்குவதற்கும், அமெரிக்காவில் AFL-CIO மற்றும் UAW தொழிற்சங்கங்களில் இருந்து கனடாவில் CLC மற்றும் Unifor வரையில் பிற்போக்குத்தனமான தேசிய-அடிப்படையிலான தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டம் அவசியமாகும். இவை, “கனேடிய” மற்றும் “அமெரிக்க” வேலைகளைப் பாதுகாப்பதற்கான பிற்போக்குத்தனமான பிரச்சாரங்களைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை தேசிய ரீதியில் திட்டமிட்டு பிளவுபடுத்தி வருகின்றன. மேலும், ஏகாதிபத்தியத்தின் போர் திட்டங்களுக்குள் முழுமையாக தம்மை ஒருங்கிணைந்துள்ளன.
ட்ரம்ப், ட்ரூடோ, கியூபெக் இனப் பேரினவாதிகள் அல்லது மெக்சிகன் அதிகாரிகளாயினும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பலிகடா ஆக்குவதை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கும் வகையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை தொழிலாளர்கள் அவசரமாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அவசியமானது. உலக முதலாளித்துவம் வர்த்தகப் போரிலும், போட்டிப் பேரினவாத சக்திகள் போரின் சாக்கடை குழியிலும் இறங்கியுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட அதிகமாக “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற தொழிலாள வர்க்கத்தின் கோஷம், அதன் சுலோகமாக இருக்க வேண்டும்.