மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
குறைந்த வளர்ச்சி மற்றும் நிதியியல் பாதிப்புகளின் காரணமாக, 2012 இல் நடந்ததைப் போல, யூரோ மண்டலம் மீண்டும் ஓர் அரசுக் கடன் (sovereign debt) நெருக்கடியில் மூழ்கக்கூடும் என்று ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எச்சரிக்கை விடுத்துள்ளது.
2012 ஆம் ஆண்டின் நெருக்கடியானது, அப்போதைய ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ திராஹி (Mario Draghi), ஐரோப்பிய நிதி அமைப்பையும் ஒற்றை நாணயத்தையும் காப்பாற்ற “எது தேவையோ அதைச் செய்வேன்” என்று உறுதியளித்தபோது தவிர்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஐரோப்பிய மற்றும் உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள சூழலில், மத்திய வங்கியின் உத்தரவாதங்கள் மட்டும் இனி போதுமானதாக இருக்காது.
புதனன்று (20-11-2024) வெளியிடப்பட்ட ஐரோப்பிய மத்திய வங்கியின் வருடாந்தர நிதியியல் நிலைத்தன்மை பற்றிய மதிப்பாய்வில் ஒரு புதிய நெருக்கடி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையால் குறிக்கப்பட்ட மோசமான சர்வதேச நிலைமைகளின் கீழ், “அரசுக் கடன் நிலைத்தன்மை மீதான சந்தை கவலைகள்” மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறை அது சுட்டிக்காட்டியுள்ளது.
“யூரோ மண்டல வளர்ச்சிக்கான சுழற்சி தடைகள், குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் யூரோ மண்டல பொருளாதாரம் முழுவதும் வளர்ச்சிக்கான பலவீனமான ஆற்றல் ஆகியவற்றின் கட்டமைப்பு பிரச்சினைகளை அதிகரிக்கின்றன,” என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.
திங்களன்று (18-11-2024), இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட பரிசீலனையை தெளிவாக அடித்தளமாகக் கொண்டு, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் பாரிசில் வழங்கிய ஓர் உரையில், மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைக்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களின் விடையிறுப்பு தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு ஆழமடைந்து வரும் தாக்குதலாக இருக்கப்போகிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
உற்பத்தித்திறனில் அதிகரிப்பு இல்லையென்றால், யூரோ நாடுகள் “குறைந்த வரி வருவாய்களாலும் மற்றும் அதிக கடன் விகிதங்களினாலும் எதிர்கால” அபாயத்தை எதிர்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார், இதன் அர்த்தம் “சமூக செலவினங்களுக்கான ஆதாரவளங்கள் குறைக்கப்படும்” என்பதாகும்.
உண்மையில், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், குறிப்பாக வாகனத் தொழில்துறையில், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான உலகளாவிய போட்டியில் சிக்கியுள்ள நிலையில், ஏற்கனவே தொழிற்சாலைகளை மூடுவதன் மூலமும், பெருமளவில் வேலை இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் மீண்டும் வருவதாலும், சுங்கவரி உயர்வுகள் மற்றும் வர்த்தகப் போர் குறித்த அவரது அச்சுறுத்தல்கள் பொருளாதாரத்திற்கு எத்தகைய விளைவுகளைக் கொடுக்கும் என்பதாலும் ஐரோப்பிய அரசியல் அமைப்பு உலுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுங்கவரிப் பிரச்சினையை லகார்ட் நேரடியாகக் குறிப்பிடவில்லை, ஆனால் “புவிசார் அரசியல் நிலைக்கான, போட்டி முகாம்களாகச் சிதறிக் கிடக்கின்றன, அங்கே சுதந்திர வர்த்தகத்திற்கான அணுகுமுறைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன” என்பதை வலியுறுத்தினார்.
ஐரோப்பா குறிப்பாக வர்த்தகப் போரின் விளைவுகளுக்கு ஆளாகக்கூடிய நிலையில் உள்ளது, ஏனெனில் அது “மற்றய பொருளாதாரங்களை விட அதிக திறந்த நிலையில் உள்ளது”. கண்டத்தின் பொருளாதார உற்பத்தியில் பாதிக்கும் மேல் வர்த்தகத்தைச் சார்ந்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களில், சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஐரோப்பாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்தங்கிய நிலை மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களில் பின்னடைவு காரணமாக பிரச்சினைகள் மேலும் சிக்கலாகியுள்ளன. “உலகின் முன்னணி 50 தொழில்நுட்ப நிறுவனங்களில் நான்கு மட்டுமே ஐரோப்பாவைச் சேர்ந்தவை” என்று லகார்ட் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பா, “மாறிவரும் புவிசார் அரசியல் சூழலுக்கு விரைவாகத் தகவமைத்துக் கொள்ளவும், போட்டித்தன்மை மற்றும் புதுமையாக்கத்தில் இழந்த தளத்தை மீண்டும் பெறவேண்டியதும்” அவசியம் என்று அவர் தொடர்ந்து கூறினார்.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ், பொருளாதார “ஆரோக்கியம்” என்பது மக்களின் நலவாழ்வால் அல்ல, மாறாக இறுதி இலாபத்தால் தீர்மானிக்கப்படுகிறது. “இழந்த நிலையை” மீட்டெடுப்பது என்பது தவிர்க்க முடியாமல் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தீவிர சுரண்டலை குறிக்கிறது. இதற்கு தொழில்நுட்பம் மற்றும் பிற வழிமுறைகளைப் பயன்படுத்தி இலாபங்களை அதிகரிப்பதுடன், தொழிலாளர்களின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதலும் இணைந்துள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் மதிப்பாய்வு, ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முந்தைய நெருக்கடிக்குப் பின்னர், குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவரும் நிதியியல் பாதிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கும், ஒப்பீட்டளவில் சிறிய நிகழ்வுகளாகத் தோன்றக்கூடியவை எவ்வாறு பெரும் பின்விளைவுகளைக் கொண்டிருக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டுக் காட்ட கணிசமான இடத்தை ஒதுக்கியிருக்கிறது.
அமெரிக்க வேலைவாய்ப்பானது எண்ணிக்கையில் எதிர்பார்த்ததை விட குறைவான அதிகரிப்பு மற்றும் ஜப்பானிய நாணயக் கொள்கையின் இறுக்கம் ஆகியவை “பேரியல் பொருளாதாரத் தரவு (macroeconomic data) அதிர்ச்சிகளுக்கு அதிக உணர்திறனைக் காட்டுவதோடு, எதிர்காலத்தில் அதிக ஏற்ற இறக்கங்களுக்கான சாத்தியத்தையும் அதிகரிக்கின்றன” என்பதை சுட்டிக்காட்டியதாக ஜூலை மாதத்தில் ஏற்பட்ட உலகளாவிய குழப்பத்தை ஓர் உதாரணமாக அது குறிப்பிட்டது.
“பங்கு மற்றும் பெருநிறுவன பத்திர சந்தைகளில் நீட்டிக்கப்பட்ட மதிப்பீடுகள்” என்று அது குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி, நிதியியல் நிலைத்தன்மை அபாயங்களுக்கான பல ஆதாரங்களை அந்தத் மதிப்பாய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது, அதாவது ஊகங்களால் ஊக்குவிக்கப்பட்ட நிதிச் சொத்துக்களின் சந்தை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அபாயங்கள் “வங்கி அல்லாத பணப்புழக்கம் மற்றும் அந்நிய பாதிப்பு ஆகியவற்றால் அதிகரிக்கப்படலாம்.”
சந்தை நிலைமைகள் குழப்பமடையும்போது, “திடீர் பணத் தேவை” எழும் சூழலில், ஊக வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் எதிர்பாராத உண்மைகளை எதிர்கொள்ளக்கூடும். அவற்றின் நிதிச் சொத்துக்களின் உண்மை மதிப்பு எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதையும், கையிருப்பு பணம் போதுமானதாக இல்லாததையும், மற்றும் அவை நம்பியிருந்த கடன் வசதிகள் உண்மையில் அவ்வளவு பாதுகாப்பானவை அல்ல என்பதையும் திடீரென உணரக்கூடும்.
மேலும் சிக்கல்கள், நிதி நிறுவனங்களைக் கடந்து அரசாங்கங்கள் வரை நீண்டுள்ளன.
“அதிகரித்த கொள்கை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமின்மை, பலவீனமான நிதி அடிப்படைகள் மற்றும் மந்தமான நீண்டகால வளர்ச்சிப் போக்கு ஆகியவை சில யூரோ மண்டல நாடுகளில் அரசாங்கக் கடனின் நிலைத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகின்றன” என்று அந்த ஆய்வறிக்கை எச்சரித்தது.
நிதி நிலைத்தன்மை அறிக்கையானது மற்றொரு முக்கிய அபாயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது: பெருநிறுவனங்கள் மற்றும் குடும்பத் துறைகளின் சில பிரிவுகளில் “கடன் இடர் கவலைகள்” அதிகரித்துள்ளன. இந்நிலையானது “வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் சொத்துத் தர கவலைகளுக்கு” வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கிறது.
அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை விரிவாக விளக்கும்போது, அந்த அறிக்கை போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் அனைத்து அரசியல் பொறிமுறைகளின் சீர்குலைவைக் குறிப்பிட்டது. இந்நிலை வலதுசாரி ஜனரஞ்சகவாத சக்திகளுக்கும், ஏன் வெளிப்படையான பாசிச குழுக்களுக்கும் கூட ஆதரவு அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது.
இது போன்ற அறிக்கைகளின் மயக்க மொழியைப் பயன்படுத்தி, கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியல் பிளவுகள் “நிலையான அரசாங்க நிலைமைகளை உருவாக்குவதற்கு மிகவும் சவாலானதாக மாற்றியிருக்கிறது” என்று அது தெரிவித்திருக்கிறது, இது “முக்கிய நிதி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மீது உடன்பாடு காண்பதில்” தாமதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது [சங்கேத வார்த்தைகளில் கூறூவதானால் இது சமூக சேவைகள் செலவினங்கள் மீதான தாக்குதலைக் குறிக்கிறது].
மேலும், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையானது “குறிப்பாகப் பொதுக்கடன் அளவுகள் அதிகமாக இருக்கும் நாடுகளுக்குச் சவாலாக இருக்கலாம், இது பாதகமான பாதிப்புகள் ஏற்பட்டால் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட நிதிக்கான இடத்தைக் பெற்றிருக்கிறது.
வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியிருந்தன, ஆனால் இது கடன் பிரச்சினைகள் தளர்த்தப்படுவதை குறிக்கவில்லை, ஏனென்றால் மதிப்பாய்வு குறிப்பிட்டதைப் போல, “முதிர்ச்சியடையும் கடன் நிலுவையில் உள்ள கடனைவிட அதிக வட்டி விகிதங்களில் நீட்டித்திருப்பதால் அரசுக்கடன் சேவை செலவுகள் எதிர்காலத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
சமூக செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய மத்திய வங்கி நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் “கட்டமைப்புச் சவால்களுக்கு” அதிகரிக்கப்பட்ட செலவினங்களுக்கு இடமளிக்க நடப்புச் செலவினங்கள் மீது “அதிக கட்டுப்பாடு” தேவை என்று அது அழைப்பு விடுத்திருக்கிறது.
அதிக நிதி செலவுகள் மற்றும் பலவீனமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை பெருநிறுவன இருப்புநிலைக் குறிப்புகளை, குறிப்பாக ரியல் எஸ்டேட் வணிகம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் (SMEs) தொடர்ந்து பாதிக்கும் என்று ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எச்சரித்துள்ளது.
“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் சேவை திறனானது பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலை மற்றும் அதிக கடன் செலவுகள் ஆகியவற்றால் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியதாகத் இருக்கிறது,” என்று அது கூறியுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி அரசாங்கங்களுக்கு நேரடியான கொள்கை பரிந்துரைகளை வழங்கவில்லை, ஆனால் அது நிதி மூலதனத்தின் பிரதான குரல்களில் ஒன்றாகவும் மற்றும் அதன் அறிக்கை ஒரு தெளிவான செய்தியாகவும் வழங்கியிருக்கிறது. இது இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது, 2012ல் முழு நிதியியல் அமைப்புமுறையின் நெருக்கடிக்கு இட்டுச் சென்ற நிலைமைகள் இன்னும் நீங்கிவிடவில்லை, மாறாகப் பல வழிகளில் மோசமடைந்துள்ளன.
இந்த ஆய்வறிக்கை இரண்டு முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறது. முதலாவதாக, தற்போதைய நெருக்கடி நிலை மேலும் தீவிரமடைந்து வருகிறது. இரண்டாவதாக, இந்த வளர்ந்து வரும் நெருக்கடி தொழிலாளர்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. “புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பிளவுகள்” என்ற பெயரில், இது போர்ச் சூழலுக்கான அடித்தளத்தை அமைக்கிறது. இதன் விளைவாக, இராணுவ செலவினங்களுக்கு இன்னும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.