முன்னோக்கு

லெபனானில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்தமும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க உந்துதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே 60 நாள் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் வெள்ளை மாளிகையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறிவித்தார். ஈரானுடன் பிராந்தியந் தழுவிய மோதலை தீவிரப்படுத்துவதற்கு களம் அமைக்கும் நோக்கில், இந்த உடன்பாடு, அதிவலது சியோனிச ஆட்சி கடந்த இரண்டு மாதங்களாக தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் மீதான அதன் தாக்குதலில் 4,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றதற்கும், ஹிஸ்புல்லாவின் தலைமையை பெருமளவில் துடைத்தெறிந்ததற்கும் பின்னர் வருகிறது.

தெற்கு லெபனானின் மாரகே கிராமத்தில் அழிக்கப்பட்ட கட்டிடத்திற்கு அருகில் கடந்த இரண்டு மாதங்களில் இஸ்ரேலிய துருப்புக்களுக்கு எதிரான சண்டையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா போராளிகளின் சவப்பெட்டிகளை துக்கம் அனுசரிப்பவர்கள் சுமந்து செல்கின்றனர். நவம்பர் 29, 2024 வெள்ளிக்கிழமை [AP Photo/Hussein Malla]

போர்நிறுத்த ஒப்பந்தம் வெளிப்படுத்தப்பட்ட விதம், அதன் நிபந்தனைகள் வாஷிங்டனால் இரு தரப்பினர் மீதும் விளைபயனுள்ள வகையில் திணிக்கப்படுகின்றன என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. நெதன்யாகுவின் பாசிச ஆட்சியும், ஹிஸ்புல்லாவும் தாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டியிருப்பதாக பகிரங்கமாக அறிவிப்பதற்குப் பதிலாக, ஒரு மோதலில் போர்நிறுத்தங்கள் முடிவுக்கு வரும்போது ஒரு வழமையான நடைமுறையாக, அந்த ஏற்பாட்டின் அளவுருக்கள் ரோஜா தோட்டத்தில் இருந்து பைடெனால் மட்டுமே வழங்கப்பட்டன. இஸ்ரேலிய மற்றும் லெபனிய அரசாங்கங்கள் வாஷிங்டனின் “முன்மொழிவை” “ஏற்றுக்கொண்டதாக” ஜனாதிபதி அறிவித்தார். அதன்படி லிட்டானி ஆற்றின் தெற்கிலிருந்து ஹிஸ்புல்லா தனது படைகளை திரும்பப் பெறுவதையும், அடுத்த 60 நாட்களில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் “படிப்படியாக” தனது இராணுவத்தை திரும்பப் பெறுவதையும் பார்க்கும் வாஷிங்டனின் முன்மொழிவை இஸ்ரேலிய மற்றும் லெபனான் அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அறிவித்தார். வாஷிங்டன் ஹிஸ்புல்லாவை ஒரு “பயங்கரவாத அமைப்பு” என்றும், அதனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டிருப்பதால், இந்த உடன்பாட்டில் சம்பிரதாயபூர்வ தரப்பாகக் கூட ஹிஸ்புல்லா இருக்கவில்லை.

பைடெனின் கருத்துக்கள், “சமாதானத்தை” நோக்கிய ஒரு அடியைக் குறிப்பதற்குப் பதிலாக, ஈரானிய ஆட்சியைக் கவிழ்க்க வாஷிங்டனின் இடைவிடாத உந்துதலைத் தீவிரப்படுத்துவதற்கான களத்தை அமைப்பது பற்றிய முடிவுதான் என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன.

“இஸ்ரேல் போர்க்களத்தில் தைரியமாக உள்ளது” என்று பைடென் அறிவித்தார். “ஈரானும் அதன் பினாமிகளும் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். இப்போது இஸ்ரேல் ஈரான் மற்றும் அதன் பினாமிகளுக்கு எதிரான தந்திரோபாய வெற்றிகளையும், இஸ்ரேலின் நீண்டகால இருப்பை பாதுகாப்பதையும் மற்றும் அப்பிராந்தியத்தில் ஒரு பரந்த அமைதி மற்றும் செழிப்பை முன்னெடுக்கும் ஒரு ஒத்திசைவான மூலோபாயமாக மாற்றுவதிலும் தைரியமாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

பைடென் மற்றும் வாஷிங்டனிலுள்ள போர்வெறியர்களுக்கு, காஸாவில் 200,000க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் கொன்று குவித்தது மற்றும் ஹமாஸை அழித்தது, அத்துடன் ஆயிரக்கணக்கான லெபனான் குடிமக்களின் உயிர்களை பலிகொடுத்து ஹிஸ்புல்லாவின் திறன்களில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியது என்பது, வெறும் “தந்திரோபாய ஆதாயங்கள்” மட்டுமே ஆகும்.

அதிக-சக்தி வாய்ந்த அமெரிக்க ஆயுதங்களின் தொடர்ச்சியான விநியோகத்தால் சாத்தியமாக்கப்பட்ட இந்த மோதல்கள், வாஷிங்டனுக்கும் அதன் இஸ்ரேலிய வாடிக்கையாளருக்கும் ஈரானுடன் இணைந்த ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை கணிசமாக பலவீனப்படுத்த உதவியது மட்டுமல்லாமல், சிரியா மற்றும் தெஹ்ரானிலேயே கூட இஸ்லாமிய குடியரசின் நலன்களைத் தாக்கவும் உதவியுள்ளது. ஈரானிய ஆட்சியின் அபாயகரமான நிலைமை, தெஹ்ரானில் ஈரானிய ஆட்சியின் உத்தியோகபூர்வ விருந்தினராக இருந்தபோது ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை மாதம் ஆத்திரமூட்டும் வகையில் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஈரானிய இராணுவ நிலைகள் மீதான அக்டோபர் 26 ஏவுகணைத் தாக்குதல் ஆகியவற்றுடன் தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டது.

கடந்த செவ்வாயன்று பைடென் கூறிய கருத்துக்களில், அவர் அழைப்பு விடுத்த “மூலோபாயத்தில்” “சவூதி அரேபியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்களின் ஒரு தொகுதியை” எட்டுவதும், அவற்றில் “பாதுகாப்பு உடன்படிக்கை,” “பொருளாதார உத்தரவாதங்கள்,” மற்றும் “சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை முழுமையாக இயல்பாக்குவது” ஆகியவையும் உள்ளடங்கி உள்ளன. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடியும் வரை சர்வாதிகார சவுதி ஆட்சி பிந்தையதை நிராகரித்துள்ளது. இதற்கான காரணம், பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்கான எந்தவொரு அர்ப்பணிப்பாலும் அல்ல, மாறாக அரபு மக்களிடையே ஏற்படும் அரசியல் விளைவுகளைக் கண்டு அஞ்சுவதால் ஆகும். மேலும், 2023ல் ரியாத் மற்றும் தெஹ்ரான் இடையேயான உறவுகளை சீர்படுத்தும் சீனாவின் முன்முயற்சிக்கு வாஷிங்டன் கடுமையாக விரோதமாக உள்ளது. அது மத்திய கிழக்கில் பெய்ஜிங்கின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் அதன் பெல்ட் அண்ட் ரோடு  (Belt and Road) பொருளாதார மூலோபாயத்தின் மைய அரங்கில் உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் மூலப்பொருட்களுக்கான பாதுகாப்பான அணுகலுக்கும் வழிவகுக்கும் என்றும் வாஷிங்டன் அஞ்சுகிறது.

பைடெனின் கொள்கையானது, டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் ஜனாதிபதி காலத்தின் போது பின்பற்றிய ஆபிரகாம் உடன்படிக்கையின் மிக உயர்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பதட்டங்களின் தொடர்ச்சியாகும். போர் மூலமாகவோ அல்லது வேறு வழிவகைகள் மூலமாகவோ, ஈரானை பொருளாதாரரீதியாகவும், இராஜதந்திரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும் தனிமைப்படுத்துவதற்காக, இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் எஞ்சியிருக்கும் வளைகுடா ஷேக் ஆட்சிகளை உள்ளடக்கிய ஒரு இராணுவ-மூலோபாய கூட்டணியை ஸ்தாபிப்பதற்கு, இப்போது போலவே அப்போதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்காக இருந்தது. மேலும், இறுதி இலக்குகள் சீனா மற்றும் ரஷ்யா ஆகும். அவர்களுக்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த கியேவை அனுமதிப்பதன் மூலம், ஒரு பெரிய இராணுவ விரிவாக்கத்திற்கு வழிவகுக்கின்றன.

இப் பிராந்தியத்தில் “அமைதி மற்றும் செழிப்பு” குறித்த பைடெனின் கூச்சல் என்பது, வாஷிங்டனின் சவாலற்ற மேலாதிக்கத்தின் கீழ், தெஹ்ரானில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவி அதன் முக்கிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யாவை ஓரங்கட்டுவதன் மூலம் ஆற்றல் நிறைந்த மத்திய கிழக்கை ஒருங்கிணைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. .

1991 இல் முதல் வளைகுடா போர் தொடங்கி, 2001 ஆப்கானிஸ்தான் படையெடுப்பு, ஈராக் மீதான 2003 தாக்குதல், சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர், மற்றும் யேமன் உள்நாட்டுப் போரில் தலையீடு ஆகியவை வரையில், கடந்த 35 ஆண்டுகளில், அடுத்தடுத்து வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் குப்பைமேடாக்கிய நிலையில், இதே “ஜனநாயக” வாய்வீச்சைத்தான் அடுத்தடுத்து வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த இடைவிடாத தொடர்ச்சியான பிராந்திய போர்கள், இப்போது ஒரு உலகளாவிய மோதலுக்கான ஒரு மூலோபாயமாக ஒன்றிணைந்து வருகின்றன: அதாவது உலகத்தை மறுபங்கீடு செய்வதற்காக பல முனைகளில் இடம்பெற்றுவரும் மூன்றாம் உலகப் போராகும். ஈரானுடன் இராணுவ-மூலோபாய உறவுகளை துரிதமாக விரிவுபடுத்தி வருகின்ற மற்றும் சிரியாவில் ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னத்தை கொண்டுள்ள ரஷ்யா மீது உக்ரேனில் மேற்கொண்டுவரும் அமெரிக்க-நேட்டோ போர்களும் இதில் உள்ளடங்கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், சீனாவுடனான போருக்கான முன்னேறிய பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ தயாரிப்புகளையும் இது உள்ளடக்கியுள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடனான போருக்கான மேம்பட்ட பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ தயாரிப்புகளுடன் தாய்வானுக்கு ஊடாக தூண்டப்பட்டாலும், இந்தியாவுடனான பிராந்திய மோதல்கள் அல்லது வேறு ஏதேனும் சாக்குப்போக்கு போன்றவையும் இதில் அடங்கும். சீனாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், பெய்ஜிங்கின் பொருளாதாரத்திற்கு மலிவான எண்ணெய் வழங்குனரானவும் இருக்கும் ஈரானிய ஆட்சி கவிழ்வது இந்த திசையில் ஒரு பெரிய படியாக இருக்கும்.

இந்த மோதல்கள் பூகோள முதலாளித்துவத்தின் சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகளில், அதாவது தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் இடையேயும், உற்பத்தி சக்திகளின் பாரிய சமூக தன்மைக்கும் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் தனியார்களின் கட்டுப்பாட்டிற்கும் இடையிலான முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளன. இந்த முரண்பாடுகள் பெரும் மற்றும் பிராந்திய சக்திகளுக்கு இடையே பூசல்களுக்கு எரியூட்டுவதுடன், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உந்தித் தள்ளி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆட்சிகளின் உறுதியற்ற தன்மையையும் அதிகரிக்கின்றன.

மத்திய கிழக்கில் வாஷிங்டனின் தாக்குதல் நாயாக செயல்படும் இஸ்ரேல் எப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அடிபணிந்து நிற்கிறது என்பதை லெபனான் போர்நிறுத்தம் அனைவருக்கும் எடுத்துக்காட்டினாலும், அமெரிக்கா திணித்துள்ள இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது தெளிவாக இல்லை.

நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை ஏற்பதில் சிறிய சிக்கல் இருந்தது. மேலும், இந்த ஒப்பந்தமானது இஸ்ரேலிய இராணுவத்தை அவர் பெருமைப்படுத்தியது போல், அதன் கொடூரமான ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் விநியோகத்தை மீண்டும் நிரப்பவும், அதன் நீட்டிக்கப்பட்ட படைகளில் சிலவற்றை ஓய்வெடுக்கவும் அனுமதிக்கிறது.

BBC இன் கருத்துப்படி, “ஹிஸ்புல்லா ஒரு தாக்குதலுக்கு தயாரிப்பு செய்வதாகத் தோன்றினால்” இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேலுக்கு உரிமை அளிக்கும் அமெரிக்கத் தரப்பு கடிதமும் அதில் அடங்கும். மேலும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்று கணக்கிடும் போது, ஹிஸ்புல்லா மீதான போரை மீண்டும் தொடங்க ஒரு கூட்டு பொறிமுறையை இது திறம்பட வழங்குகிறது

இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், இந்த உடன்பாடு காஸாவில் இனப்படுகொலையைத் தொடர இஸ்ரேலுக்கு சுதந்திரம் கொடுக்கிறது. அங்கு டசின் கணக்கான பாலஸ்தீனியர்கள் கடந்த வியாழனன்று நுசைராட் அகதிகள் முகாமில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி ஊடுருவல் மூலமாக கொல்லப்பட்டனர்.

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தரைப்படைத் தாக்குதல் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கணிசமான இறப்புக்களை சந்தித்தன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், லிட்டானி ஆற்றின் வடக்கே அதன் படைகள் பின்வாங்குவதால், இஸ்ரேல் எல்லையில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ள நன்கு பலப்படுத்தப்பட்ட நிலைகளை ஹிஸ்புல்லா கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் மூலம், இஸ்ரேல் போர்க்களத்தில் அடையத் தவறியதை இராஜதந்திர ரீதியாக அடைய முடியும்.

எவ்வாறிருப்பினும், இஸ்ரேலுக்குள் உள்ள சில கூறுபாடுகள், குறிப்பாக வடக்கில், இந்த உடன்படிக்கையை ஒரு தோல்வி என்று விமர்சித்துள்ளன. ஏனென்றால் —இந்த குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்புகள் இருந்தபோதிலும்கூட— நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் ஹிஸ்புல்லாவை ஒரு இராணுவ சக்தியாக இருப்பதிலிருந்து அகற்றுவதற்கான அவர்களின் தொடர்ச்சியான உறுதிமொழியை நிறைவேற்றுவதில் இருந்து வெளிப்படையாக தோல்வியடைந்துள்ளனர்.

இஸ்ரேல் 2006ல் ஹிஸ்புல்லாவுடன் நடத்திய மோதலைப் போலவே, இப்போரும் சியோனிச ஆட்சி பிராந்தியத்தின் வரைபடத்தை மீண்டும் வரைவதற்கான உறுதிமொழியை அடைய வேண்டுமானால் அமெரிக்காவின் நேரடி தலையீட்டை நம்பியிருக்க வேண்டும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிராந்திய அளவில், ஈரான் மற்றும் அதனுடன் இணைந்த படைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தடையின்றி தொடர்கின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ் போர் விமானங்கள் வியாழனன்று குறைந்தப்பட்சம் இரண்டு விமானத் தாக்குதல்களை யேமனில் உள்ள இலக்குகள் மீது நடத்தின. சிரியாவில், அலெப்போவுக்கு அருகே பஷர் அல்-அசாத்திற்கு விசுவாசமான துருப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் நீண்டகாலமாக ஆதரிக்கப்பட்டு வருகின்ற இஸ்லாமிய ஆயுதக் குழுக்களால், பல மாதங்களில் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது, கடந்த வியாழன் அன்று ஒரு மூத்த ஈரானிய புரட்சிகர காவலர் படையின் மரணத்திற்கு வழிவகுத்தது.

தெஹ்ரானில் உள்ள நெருக்கடி நிறைந்த ஆட்சியானது, ஏகாதிபத்திய சக்திகளின் திட்டமிட்ட இலக்குகளுக்கு எந்த முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை. ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று இன்னமும் நம்பும் ஒரு கன்னைக்கும் அணுஆயுதங்களைப் பெறுவது உட்பட இன்னும் கடுமையான மோதலுக்கு அறிவுறுத்தும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியாளர்கள், அனைத்திற்கும் மேலாக ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் ஆகிய இரண்டிற்கும் எதிராக, ஈரானிலும் அப்பிராந்தியம் எங்கிலும் தொழிலாளர்களின் ஒரு பாரிய இயக்கத்தின் சாத்தியக்கூறு குறித்து அஞ்சுகின்றனர்.

போர்நிறுத்தத்திற்கு உடன்படுமாறு ஹிஸ்புல்லாவிற்கு தெஹ்ரான் அழுத்தமளித்தது. அப்பிராந்தியத்தில் “ஒழுங்கு” மற்றும் “ஸ்திரப்பாட்டிற்கு” ஒரு சக்தியாக தன்னைக் காட்டிக் கொள்வதன் மூலமாக, வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறுவதற்கான அதன் முயற்சிகளின் பாகமாக அது இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இந்த திசையிலான மற்றொரு நகர்வு, உலகின் மிகப் பெரிய பணக்காரரும் ட்ரம்பின் உள் வட்டத்தின் உறுப்பினருமான எலோன் மஸ்க் மற்றும் ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. ட்ரம்ப், அவரது முதல் பதவிக்காலத்தின் போது, தெஹ்ரானின் அணுஆயுத திட்டத்தை வெளிப்புற ஆய்வுகளுக்கு திறந்து விடுவதற்கு பிரதிபலனாக, அதற்கு தடையாணை நிவாரணம் வழங்கிய அணுசக்தி உடன்படிக்கையை தகர்ப்பது உட்பட, ஈரானை ஆத்திரமூட்டும் வகையில் இலக்கில் வைத்தார்.

இது, அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ-தேசியவாத ஆட்சிகளின் திவால்நிலையை முற்றிலும் அம்பலப்படுத்துகிறது. “ஆட்சி மாற்றத்திற்கான” ஒரு நீடித்த பிரச்சாரத்தை தெஹ்ரான் முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மத்திய கிழக்கு மீதான அவர்களின் கடிவாளமற்ற மேலாதிக்கத்திற்கு, தெஹ்ரான் ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதில் இருந்து அகற்றுவதில் உறுதியாக உள்ள ஏகாதிபத்தியவாதிகளுடன் ஏதோவொரு விதத்தில் இணக்கம் காண்பதற்கான புலம்பல் முறையீடுகளை மட்டுமே ஈரானிய தலைமையால் வழங்க முடியும். இது, ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கம் ஒருபுறம் இருக்கட்டும், அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கு முறையிடுவதற்கு ஆட்சியின் இயல்பான இயலாமையில் இருந்து ஊற்றெடுக்கிறது. அவர்கள் மத்தியில் ஏகாதிபத்திய போருக்கும் அதிலிருந்து பிரிக்கவியலாத உள்நாட்டு சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த எதிர்ப்பு, ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை தொழில்துறை ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே, உலகப் போரை நோக்கிய மனிதகுலத்தின் வீழ்ச்சி மற்றும் அது உருவாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை தடுத்து நிறுத்த முடியும். இந்த வேலைத்திட்டத்திற்காகவே உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் போராடி வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் எங்களுடன் இணையுமாறு இந்த போராட்டத்தை முன்னெடுக்க தயாராக இருக்கும் அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading