இலங்கைத் தொழிலாளர்கள் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென ஏன் கோர வேண்டும்?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

'அனைத்து வெளிநாட்டுக் கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும்!' என்பது இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்வைக்கும் ஒரு பிரதான கோரிக்கை ஆகும். இது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியைத் அணிதிரட்டுவதற்குமான கட்சியின் போராட்டத்தின் இன்றியமையாத அங்கமாகும்.

சமீபத்திய ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரங்கள் உட்பட கட்சியின் தலையீடுகளின் போது, பல தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தக் கோரிக்கை பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை நிராகரிக்க வேண்டியது ஏன்? இதை எப்படி செய்ய முடியும்? ஏகாதிபத்திய நாடுகளும் சர்வதேச நிதி மூலதனமும் இத்தகைய நடவடிக்கையை கடுமையாக எதிர்க்க மாட்டானவா? இவ்வளவு கடினமான எதிர்ப்பை எப்படி தாங்கிநிற்பது?

இவை, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்ட கட்சியின் சோசலிச சர்வதேச வேலைத்திட்டத்தின் இதயத்தைத் தொடும் நியாயமான கேள்விகள் ஆகும்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கையை சூழ்ந்துள்ள தற்போதைய மற்றும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார பேரழிவு, அடிப்படையில் ஒரு தேசிய நெருக்கடி அல்ல. மாறாக, அது கொடிய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ தூண்டிய போரினாலும் மேலும் தீவிரமடைந்த, பூகோள முதலாளித்துவ முறைமையின் அமைப்பு ரீதியான நெருக்கடியின் விளைவும் வெளிப்பாடும் ஆகும்.

2021 டிசம்பரில், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு வெறும் 1.6 பில்லியன் டொலராக சரிந்தமை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் 12 ஏப்ரல் 2022 அன்று இலங்கை தனது அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்தத் தவறி வருவதாக அறிவிக்க வழிவகுத்தது.

இதன் பாகமாக, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை நிறுத்துவது அல்லது குறைப்பதன் மூலமும் மின்வெட்டுகளைத் திணிப்பதன் மூலமும் நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ச்சியாக உந்தப்பட்டது. 2022 ஏப்ரல்-ஜூலை மாதங்களில் தீவைக் கொந்தளிக்கச் செய்த தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிரான வெகுஜன எழுச்சி, இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறவும் இராஜினாமா செய்யவும் நிர்ப்பந்தித்தது.

28 ஏப்ரல் 2022 வியாழன் அன்று, இலங்கையின் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நடந்த வேலைநிறுத்தம். [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

இருப்பினும் எதுவும் தீர்க்கப்படவில்லை. தொழிற்சங்கங்களும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும், ஒரு 'இடைக்கால அரசாங்கத்தை' அமைப்பதற்கான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) விடுத்த அழைப்புகளுக்குப் பின்னால் இந்த வெகுஜன இயக்கத்தை திசை திருப்பிவிட்டதை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் அமெரிக்க சார்பு கைக்கூலியுமான ரணில் விக்கிரமசிங்க, மதிப்பிழந்த பாராளுமன்றத்தால் ஜனநாயகமற்ற முறையில் ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டார்.

பின்னர், ஜே.வி.பி. மற்றும் ஐ.ம.ச. ஆதரவுடன், விக்கிரமசிங்க அரசாங்கம் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனைப் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தியது. தவிர்க்க முடியாமல், இந்த பிணை எடுப்பானது, இந்த நெருக்கடிக்கு வெகுஜனங்களை விலைகொடுக்கச் செய்வதையும், இலங்கையை பூகோள முதலீட்டாளர்களுக்கு பிரமாண்ட இலாபம் பெறக்கூடிய ஒரு மூலாதாரமாக ஆக்கக் கூடியவாறு இலங்கை முதலாளித்துவத்தை மறுசீரமைப்பதையும் இலக்காகக் கொண்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க நிபந்தனைகளை முன்வைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்துக்குள், வரிகள் விரிவுபடுத்தப்பட்டு, வியத்தகு அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற இன்றியமையாத பொதுச் சேவைகளில் பாரிய வெட்டுக்கள் மேற்கொள்ளபட்டுள்ளன.

இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசாங்க வருமானம் 40 வீதத்தால் அதிகரித்துள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் என்று ஏற்கனவே அதற்கு உறுதியளித்துள்ளார்.

இது எதைக் குறிக்கிறது? சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ், மேலும் பல ஆண்டுகளாக கடுமையான சிக்கன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதையே ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின்படி, திசாநாயக்கவின் ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கம், விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை விடவும் கொடூரமாக முன்செல்ல நிர்ப்பந்திக்கப்படும். அது, விக்கிரமசிங்கவின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அரச நிறுவனங்களை மொத்தமாக மறுசீரமைப்பு செய்வதை பூர்த்திசெய்வதற்கும், அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும், தண்டனைக்கு சமமான வரி மற்றும் விகித உயர்வுகளைத் தொடர்ந்து சுமத்துவதற்கும் சட்டரீதியாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதோடு அரசியல் ரீதியாக வாக்குறுதியளித்துள்ளது. அரச நிறுவனங்களையும் சேவைகளையும் விற்பதும் ஏனையவற்றை முதலாளித்துவம் இலாபம் ஈட்டுவதற்கு அடிபணியச் செய்வதும், பரந்தளவில் ஊதியங்களை வெட்டுவதோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான தொழில்களை அழிப்பதையும், ஓய்வூதியம் வெட்டப்படுவதையும் வேலைச் சுமைகளை அதிகரிப்பதையும் விளைவாக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 2028 இல் தொடங்கி, திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குள் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கையின் கீழ், கொழும்பானது சர்வதேச பத்திரதாரர்களுக்கு -அதாவது இலங்கை தன் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டியவர்களுக்கு- வருடத்திற்கு 5 பில்லியன் டொலர் செலுத்தத் தொடங்க வேண்டும். அடுத்துவரும் 15 ஆண்டுகளுக்கு இது செலுத்தப்பட வேண்டும்.

இவை உழைக்கும் மக்களிடமிருந்து கறந்தெடுக்கப்பட வேண்டிய பிரமாண்ட தொகைகள் ஆகும். 5 பில்லியன் டொலர் என்பது தற்போதைய அரசாங்கத்தின் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான மற்றும் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கும் அதிகமான தொகையாகும்.

மக்களில் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாணய நிதிய கடன்களின் விதிமுறைகளை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் கூறிக்கொள்வது ஒரு கற்பனையாகும் அல்லது இன்னும் துல்லியமாக கூறினால் ஒரு பயங்கரமான மோசடி ஆகும். சர்வதேச நாணய நிதியமானது அதன் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக, ஒவ்வொரு நாட்டிலும், அனைத்து பிரதான ஏகாதிபத்திய மையங்களின் ஆதரவுடன், தனது பிரமாண்டமான நிதிய சக்தியை பயன்படுத்தி வருகின்றது. ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் ஏதாவது ஒரு மாற்றத்தைப் பற்றி 'பேச்சுவார்த்தை' நடத்தப்பட்டால், அது முற்றிலும் சோடிப்பாக மட்டுமே இருக்கும்.

இத்தகைய நாடகங்களை இதற்கு முன்னர் இலங்கையிலும் உலகெங்கிலும் பலமுறை பார்த்திருக்கிறோம். பெயரளவுக்கு இடதுசாரி அல்லது வலதுசாரி கட்சிகளாக இருந்தாலும், தங்கள் முன்னோடிகளின் கொள்கைகளைத் தொடர்வதற்காக மட்டுமே சமூக-பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து தேர்தலில் அவை வெற்றி பெறுகின்றன. இது சம்பந்தமாக மிக சிறந்த உதாரணம் கிரேக்கத்தில் உள்ள கட்சியான சிரிசா ஆகும் – ஜே.வி.பி.யைப் போலவே சிரிசாவும் உள்நாட்டு ஊடகங்களால் 'இடதுசாரி' மற்றும் 'ஸ்தாபனத்திற்கு எதிரானது' என்று விளம்பரப்படுத்தப்பட்டது. 2015 தேர்தலில் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன உத்தரவுகளுக்கு எதிரான வெகுஜனங்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெற்ற சிரிசா, அதன் வலதுசாரி முன்னோடிகளை விட அதிகமான கொடூரத் தாக்குதல்களை உழைக்கும் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது.

திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் அப்பட்டமாக பொய் சொல்கின்றனர். அதிகாரத்தின் கடிவாளத்தை பற்றிக்கொள்வதற்கான தயாரிப்பில், அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவோம் என்றும், சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான, இந்திய ஆதரவு இராணுவ-மூலோபாய தாக்குதலில் இலங்கையை ஒருங்கிணைக்கும் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை பின்பற்றுவோம் என்றும் இலங்கை முதலாளித்துவத்திற்கும் வாஷிங்டனுக்கும் வெளிப்படையான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். சீனாவுக்கு எதிராக. விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷ மற்றும் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களைப் போலவே, சந்தையினதும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியே அவர்களுடைய ஆட்சியாகும்.

ஏன் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை முழுவதுமாக எதிர்ப்பது அவசியம்? ஏன் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டியது அவசியம்? பதில் எளிதானது. இல்லையெனில் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் பெரும் சமூக பின்னடைவை சந்திக்க நேரிடும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு கடன் கொடுத்துள்ள முதலாளித்துவ கழுகுகளின் கோரிக்கைகள் வெகுஜனங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பொருந்தாதவை. ஏற்கனவே, வறுமை உயர்ந்துள்ளதுடன் பொதுச் சேவைகள் சரிந்து போயுள்ளன. உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினர் அவர்களது கட்டணங்கள் மற்றும் தங்கள் பிள்ளைகளுக்கான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விச் செலவுகளுக்குச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது ஒரு புறம் இருக்க தங்கள் குடும்பங்களுக்குப் போதிய உணவு வழங்க முடியாமல் இருக்கின்றனர்.

5 அக்டோபர் 2022 புதன்கிழமை, இலங்கையின் கொழும்பில் உள்ள அவர்களது குடிசையில் ஒரு தந்தையும் மகனும் உணவைப் பகிர்ந்து கொள்கின்றனர். [AP Photo/Eranga Jayawardena]

எல்லாவற்றுக்கும் மேலாக, உழைக்கும் மக்கள் இந்தக் கடன்களை ஏன் செலுத்த வேண்டும்? இந்தக் கடன்கள் எதுவும் தொழிலாளர்களுக்காகவோ உழைப்பாளர்களுக்காகவோ ஒப்பந்தம் செய்யப்படவில்லை. 26 ஆண்டுகால, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிற்போக்கு இனவாதப் போருக்கு நிதியளிப்பதற்காக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் பெறப்பட்ட கடன்கள். அந்தப் போரினால் ஏற்பட்ட மாபெரும் அழிவை அடுத்து, ஒரு பிரமாண்டமான இராணுவ-பாதுகாப்பு எந்திரத்திற்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யவும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப செலவிடவும் கடன்கள் பெறப்பட்டன. மீண்டும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக அன்றி, மாறாக முதலீட்டாளர்களுக்கு அதிக இலாபகரமான வாய்ப்புகளை வழங்குவதற்காக கடன்கள் பெறப்பட்டுள்ளன.

கட்டண உயர்வுகள் மற்றும் வரவு செலவுத் திட்ட வெட்டுக்கள் முதல் தனியார்மயமாக்கல் வரை, சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் எதிர்ப்பதோடு வெளிநாட்டுக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கைகள், இலங்கை ஆளும் உயரடுக்கிற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.

இந்தக் கோரிக்கைகள் யாருக்கு முன்வைக்கப்படுகின்றன? சர்வதேச நிதி மூலதனத்தின் தனிச்சிறப்புரிமைகளை சவால் செய்ய இயல்பிலேயே இலாயக்கற்றுள்ள ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பாராளுமன்றம் அல்லது எதிர்க் கட்சிகளுக்கு அன்றி, மாறாக, திவாலாகிவிட்ட முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராகவும், ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எதிராகவும், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு நெம்புகோலாகவே அவை முன்வைக்கப்படுகின்றன.

சோசலிச வழிகளில் சமுதாயத்தை மறுகட்டமைப்பதற்கு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், கிராமப்புற மக்களை தன் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கம் அதன் ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இலக்காகக் கொள்ள வேண்டிய ஒரு தொடர் கோரிக்கைகளில் அவை அத்தியாவசிய அங்கங்களாகும்.

முதலாளித்துவ கட்சிகள், அவற்றின் தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது குழுக்கள் உட்பட முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து முகமைகளிலிருந்தும் சுயாதீனமான, தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்புடன், இந்தக் கோரிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் போராடுகிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன திட்டங்களை திணிப்பு உட்பட, உழைக்கும் மக்களைச் சுரண்டுவதை மேற்பார்வையிட ஆளும் வர்க்கத்தின் கட்சிகள் அவற்றின் அரசாங்கத்தை அமைக்க தங்கள் பாராளுமன்றத்தைக் கொண்டுள்ளன. தொழிலாளர்களுக்கும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கும் அவர்களின் வர்க்கத் தேவைகளை வெளிப்படுத்தவும், தங்கள் வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கத்திற்கான போராட்டத்தை ஏற்பாடு செய்யவும் ஒரு மன்றம் அவசியமாகும்.

வெளிநாட்டு கடன் சுமையை எவ்வாறு தள்ளுபடிசெய்ய முடியும்? இன்றுவரை உலகின் முதல் மற்றும் ஒரே தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்கிய ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியின் மூலம் நிறைவேற்றப்பட்டது போல், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றை நிறுவுவதன் மூலமே கடனை தள்ளுபடி செய்ய முடியும். சோசலிச சமத்துவக் கட்சி கட்டியெழுப்ப போராடும் நடவடிக்கைக் குழுக்களுக்கு நிகரான, சோவியத்துகள் எனப்படும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சபைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட அந்த அரசாங்கத்தின் முதல் செயல்களில் ஒன்று, ஸாரிச எதேச்சதிகாரம் மற்றும் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் கடன்களை தள்ளுபடி செய்தமை ஆகும்.

அப்படியானால் தீர்க்கமான கேள்வி எழுகிறது: ஏகாதிபத்திய சக்திகளும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அவற்றின் முகவர் அமைப்புகளும் நிதி ரீதியாகவும் பொருளாதாரத் தடைகளை திணிப்பதன் மூலம் பிற அடக்குமுறைகளையும் மேற்கொண்டு இலங்கையில் அத்தகைய அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்க முயற்சிக்காதா? நிச்சயமாக அவர்கள் செய்வார்கள். ஆனால் இலங்கையில் உள்ள தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம், கட்டாயமாக அறைகூவல் விடுக்க வேண்டிய ஒரு பெரிய சமூக சக்தி உள்ளது -அதுதான் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

தொழிலாளர்களின் நினைவுகளில் அழியாமல் பொறிக்கப்பட வேண்டிய சோவியத் ஒன்றியத்தின் அனுபவத்திலிருந்து எழும் இன்றியமையாத படிப்பினை ஒன்று உள்ளது. முதல் தொழிலாளர் அரசு சீரழிக்கப்பட்டு அழிக்கப்பட்டமை, சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தின் விளைவு அல்ல, மாறாக ஸ்டாலினிசத்தின் விளைவு ஆகும். அதாவது 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச சோசலிசத்தை ஸ்டாலினிசம் நிராகரித்தன் விளைவு ஆகும். ஸ்டாலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்த போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை கவனமாக ஆய்வு செய்வது, வரவிருக்கும் வர்க்கப் போர்களுக்கான இன்றியமையாத தயாரிப்பு ஆகும்.

போர், காலநிலை மாற்றம், சமூக எதிர்ப்புரட்சி போன்ற, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்களை, எந்தவொரு தனி நாட்டின் கட்டமைப்பிற்குள்ளும் தீர்ப்பது ஒருபுறம் இருக்க, அவற்றை எதிர்த்து போராடக் கூட முடியாது. சர்வதேச நிதி மூலதனத்தின் கொள்ளையடிப்பு செயற்பாடுகளை எதிர்கொள்வதில் இலங்கையில் உள்ள உழைக்கும் மக்கள் தனியாக இல்லை.

'நிதி மூலதனம் ஏழ்மையான நாடுகளின் உயிர்நாடியை உறிஞ்சுகிறது' என்ற தலைப்பிலான WSWS கட்டுரை பகுப்பாய்வு செய்தது போல், சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அறிக்கையில் கூட, 'மக்கள் வறுமை, பசி மற்றும் துன்பத்தை எதிர்கொள்கின்ற மறுபக்கம், நிதி மூலதனமானது ஒரு இராட்சத காற்றால் உறிஞ்சும் சுத்திகரிப்பான் போல பணத்தை உறிஞ்சி பலன்களைப் பெறுகிறது என்பதை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.'

சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான புறநிலை அடிப்படை நிச்சயமாக உள்ளது. ஒரு சில உதாரணங்களை மட்டும் குறிப்பிடலாம்:

  • இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவால் செயல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதயத்தால் ஆணையிடப்பட்ட சிக்கன திட்டத்திற்கு எதிராக, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய வெகுஜன எதிர்ப்புக்கள் கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
  • ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்களால் ஆட்டங்கண்ட பங்களாதேஷில் இருந்து, பிரதமர் ஷேக் ஹசீனா அண்டை நாடான இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார். வறுமை மற்றும் வேலையின்மையை உருவாக்கியுள்ள பல தசாப்தங்களாக நீடித்த சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டங்களே வெகுஜன மாணவர் எதிர்ப்புக்களின் பின்னணியில் இருந்தன.
  • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாக்கிஸ்தானில் மக்கள் எதிர்ப்புக்கள் வெடித்ததுடன் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கு எதிரான எதிர்ப்பு தொடர்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியானது உலகின் ஏழ்மையான நாடுகளில் மட்டும் நடப்பது அல்ல. உலகிலேயே மிகப்பெரிய கடனை உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவே வாங்கிக் குவித்துக்கொண்டுள்ளது. வெளிநாட்டில் அமெரிக்கப் போர்களுக்கு நிதி செலுத்தவும், பில்லியனர் தன்னலக்குழுவின் இலாபங்களை உயர்த்தவும், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு சமூக எதிர்ப்புரட்சியை வெளிப்படையாகத் தயாரித்து வருகிறது. அதன் விளைவாக ஏற்கனவே வெடித்துள்ள வேலைநிறுத்தங்கள் விரிவடையும். இதேபோன்ற செயல்முறைகள் ஐரோப்பாவிலும் நடந்து வருகின்றன.

இலங்கையில் 2022 எழுச்சி மற்றும் எண்ணற்ற ஏனைய போராட்டங்களின் முக்கியமான படிப்பினை என்னவென்றால், சோசலிச சர்வதேசவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முழுமையான வேலைத்திட்டம் இல்லாமல் அத்தகைய இயக்கம், எவ்வளவு பெரிய மற்றும் போர்க்குணமிக்கதாக இருந்தாலும், தவிர்க்க முடியாமல் சிதறடிக்கப்பட்டு தோற்கடிக்கப்படும் என்பதாகும்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுப் போராட்டத்தில் வேரூன்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அதன் சகோதரக் கட்சிகளும், முதலாளித்துவத்தை ஒழிக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்குத் தேவையான புரட்சிகர தலைமைகளை கட்டியெழுப்பி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் வழிமுறையாக, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு துவக்கியுள்ளது.

இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்த அரசியல் போராட்டத்தை கையிலெடுக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை கட்டியெழுப்புமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading