அமேசான் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் கடந்த வார இறுதியில், பிளாக் பிரைடே (Black Friday) சிறப்பு விற்பனை நிகழ்வின் போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் அமேசான் தொழிலாளர்களிடையே நிலவும் வறுமை மற்றும் கொடூரமான பணிச்சூழல் நிலைமை மீது கவனத்தை ஈர்க்க முயன்றன. இந்த நிலைமைகள் பொதுவாக விடுமுறை காலங்களில் மிகவும் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக மோசமான நிலையை அடைகின்றன.
இது அமேசானில் வளர்ந்து வருகின்ற எதிர்ப்புப் போராட்டத்தின் சமீபத்திய அறிகுறியாகும். நியூயார்க் நகரில் உள்ள JFK8 பண்டகசாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் விரைவில் வேலைநிறுத்தப் போராட்ட வாக்கெடுப்பு நடத்த உள்ளனர். புதிய ஒப்பந்தம் குறித்து நிறுவனம் பல ஆண்டுகளாக தட்டிக்கழித்து வந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் முழுவதும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வேலைநிறுத்தப் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இது உலகளாவிய வர்க்கப் போராட்ட எழுச்சியின் ஒரு பகுதியாகும். இத்தாலி மற்றும் கிரீஸில் சமீபத்தில் நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டங்கள், கனடாவில் 50,000 அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
அமேசான் ஊழியர்களிடையே கொந்தளிக்கும் பெரும் கோபம், சமீபத்திய ஆர்ப்பாட்டப் போராட்டங்களில் முழுமையாக வெளிப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் பெரும் எண்ணிக்கையிலான வெகுஜனத் தன்மை கொண்டவை அல்ல. இவற்றில் குறிப்பிடத்தக்கது, இந்தியாவின் புதுதில்லியில் 200 தொழிலாளர்கள் நடத்திய பேரணி மட்டுமே ஆகும். இந்தத் பிரதிபலிப்பானது தொழிற்சங்கங்களின் தலைமையின் பலவீனத்தையே காட்டுகிறது. அவர்கள் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டங்கள், தொழிலாளர்-நிர்வாக “நல்லுறவை” வலியுறுத்தும் தங்களது குறுகிய தேசியவாத அணுகுமுறையின் காரணமாக, ஒரு வலுவான இயக்கமாக மாறவில்லை.
எனினும், போராட்டங்களின் உலகளாவிய தன்மையானது, அமேசான் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை வழிநடத்த ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய வேலைத்திட்டமானது அமேசான் மற்றும் பிற பெரும் நாடுகடந்த பெருநிறுவனங்களைப் பறிமுதல் செய்து, பொதுவுடைமையாக்குவதையும், மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொது நிறுவனங்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது (IWA-RFC : International Workers Alliance of Rank-and-File Committees) இத்தகைய உலகளாவிய மூலோபாயத்தின் அடிப்படையில் ஒரு உலக இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடி வருகிறது. IWA-RFC ஐ ஆரம்பித்து வைத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அறிக்கையானது, முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் தேசிய, இன மற்றும் இனப் பேரினவாதம் மற்றும் அடையாள அரசியலின் எண்ணற்ற வடிவங்களின் பிற்போக்குத்தனமான ஆதரவாளர்களின் தொழிலாள வர்க்கத்தை மோதும் பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து, ஒரு பொதுவான உலகளாவிய போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும்” என்று விளக்கியது.
அமேசான் இத்தகைய வேலைத்திட்டத்தின் தேவையை எடுத்துக்காட்டுகிறது. 1994 இல் ஒரு இணையவழிப் புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று 21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அமேசான் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோரை வேலைக்கு அமர்த்தியுள்ளது, மேலும் 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பொருட்களை அனுப்புகிறது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின்படி, 2.7 பில்லியனுக்கும் அதிகமானோர் அமேசானில் பொருட்களை வாங்குகின்றனர், அல்லது இந்தப் பூமியில் மூன்றில் ஒரு மனிதர் என்ற அளவிற்கு இருக்கிறது.
அதன் பெரும்பாலான தொழிலாளர்கள் மாபெரும் “நிறைவேற்று மைய பண்டகசாலைகளில்” (“fulfillment centers”) குவிந்துள்ளனர். அங்கு நிறுவனமானது புதிய தொழில்துறை தானியங்கி இயந்திரங்கள் (robotics) மற்றும் ஊடுருவும் கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி தொழிலாளர்களைக் கண்காணிக்கவும், அவர்களை “இலக்கை அடைய” நிர்ப்பந்திக்கவும் முன்னோடியாக உள்ளது. மற்றய நிறுவனங்கள் தங்கள் சொந்த செயல்பாடுகளை “அமேசான் போல மாற்ற” (“Amazonify”) முயற்சிக்கும் நோக்கில் பல ஆண்டுகளில் பின்தங்கியுள்ளன.
அமேசானின் செல்வாக்கானது பொருளாதாரம் மற்றும் மனித கலாச்சாரத்தின் ஒவ்வொரு துறையிலும் விரிவடைகிறது. அதன் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சேவையானது 200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது, இது மிகப்பெரிய நேரடி ஒளிபரப்பு இணையத் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இது இணையத்தின் அடிப்படை கட்டமைப்பிலும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அமேசான் வலை சேவைகள் (AWS) உலகின் கிளவுட்- கணினி சந்தையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
அதன் செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள செயல்பாடுகளில் முழு உணவுச் சந்தை (Whole Foods) மற்றும் அமேசான் புதிய மளிகை சில்லறை சேவை சங்கிலிகள், அமேசான் மருந்தகம், மேலும் அலுவலகப் பொருட்கள், குழந்தை நாப்கின்கள், ஆடைகள் மற்றும் கிண்டில் மின்-வாசிப்பான் (Kindle e-reader) ஆகியவற்றுக்கான வணிகங்களும் அடங்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச் சிறியதாக இருந்த அமேசான் லாஜிஸ்டிக்ஸ் என்ற விநியோக சேவையானது, கடந்த ஆண்டு 5.9 பில்லியன் பொருள் பொதிகளை விநியோகித்து, ஒரே இரவில் அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் விநியோகத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.
அமேசான் ஆளுமை செலுத்தும் பொருளாதாரக் கட்டுப்பாட்டின் அளவு இதைவிட மேலும் விரிவடைகிறது. அமேசானின் வணிகத்தின் பெரும்பகுதி “மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள்” என அழைக்கப்படுபவர்களிடமிருந்து வருகிறது. இது பன்னாட்டு மின்னணு நிறுவனங்கள் முதல் சிறு கைவினைஞர்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. அமேசான் முன்னின்று வழிநடத்திய இணையவழி சில்லறை விற்பனை நோக்கிய மாற்றம், உலகெங்கிலும் உள்ள சிறு வணிகங்கள் மற்றும் பெரிய நேரடி சில்லறை விற்பனை நிலையங்களில் பெரும் அளவிலான சீர்குலைவு விளைவை ஏற்படுத்தியுள்ளது.
சுருக்கமாக, நவீன மனித நாகரிகத்தில் மையப் பங்கு வகிக்கும் ஒரு விரிவான உள்கட்டமைப்பை அமேசான் கட்டுப்படுத்துகிறது. அது நிர்வகிக்கும் வளங்கள், மிகவும் தேவைப்படுபவர்களுக்கு விரைவாகவும் திறம்படவும் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் ஒரே இரவில் வறுமையை ஒழிக்கப் பயன்படுத்தப்பட முடியும். எடுத்துக்காட்டாக, பஞ்சம் அல்லது இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை விரைவாக விநியோகிக்க அதன் பண்டகசாலை மற்றும் விநியோக வலையமைப்பு பயன்படுத்தப்பட முடியும்.
அமேசானின் தானியங்கி தொழில்நுட்பங்கள் (robotics) வேலையின் சுமையைக் குறைக்கப் பயன்படுத்தப்பட முடியும். அதே நேரத்தில், அதிகரித்த செயல்திறன் மூலம் வேலை நேரத்தைக் குறைத்து, ஊதியத்தை உயர்த்த முடியும். அதன் நேரடி இணையவழி ஒளிபரப்பு தளமானது (streaming platform) உலகளாவிய பார்வையாளர்களுக்கு சிறந்த கலாச்சாரப் படைப்புகளை அணுக வழிவகுக்கும். இது சமூக நனவை உயர்த்துவதோடு, பாரபட்சம் மற்றும் குறும் தேசியவாதம் ஆகியவற்றின் தடைகளை உடைக்கவும் உதவும்.
இதற்கு மாறாக, அமேசானானது சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கான சொல்லாக மாறியுள்ளது. இது மனித குலத்தின் நலனுக்காக அல்ல, மாறாக அதன் வோல் ஸ்ட்ரீட் பங்குதாரர்களின் இலாபத்திற்காக இயக்கப்படுகிறது. இவர்களில் முக்கியமான நிறுவனர் மற்றும் தலைவர் ஜெஃப் பெசோஸ் ஆவார். 220 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ள இவரது செல்வமானது, பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
உலக சோசலிச வலைத் தளமானது (WSWS) அமேசான் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடைமுறைகளை அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் கார்களில் வசிக்க நிர்ப்பந்திக்கப்படுவது, வேலையிடத்தில் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு மறுக்கப்படுவது போன்ற கொடூரமான நிலைமைகள் இதில் அடங்கும். இந்நிறுவனம் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களை சுரண்டும் முறைக்கு முன்னோடியாக மாறியுள்ளது. இதன் தாக்கம் மற்றய துறைகளிலும் கொண்டுவரப்படுகிறது. யுபிஎஸ், தேசிய அஞ்சல் சேவைகள், வாகனத் தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளில் தானியங்கி முறைகளும் செயற்கை நுண்ணறிவும் பெருமளவிலான வேலைநீக்கங்களுக்குக் காரணமாகின்றன. இவ்வாறு, தொழில்நுட்ப வளர்ச்சியானது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இவைகளால் பயன்படுத்தப்படுகிறது.
அமேசான் பிரைம் வீடியோவைப் (Amazon Prime Video) பொறுத்தவரை, அதன் வெளியீடானது பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஹாலிவுட் தரமற்ற குப்பைகளைக் கொண்டுள்ளது. இவைகள் வெகுஜன நனவை குறைத்து, சமூக யதார்த்தத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பி, கற்பனை உலகிற்கு இட்டுச் செல்கின்றன. இது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு முக்கியமான கருத்தியல் சேவையைச் செய்கிறது.
அமேசானுடன் தொடர்புடைய சமத்துவமின்மையின் அளவுகள் ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாதவையாக இருக்கிறது. ட்ரம்ப்பின் புதிய அமைச்சரவையானது பில்லியனர்களால், பில்லியனர்களுக்காக உருவாக்கப்பட்டது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு (அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக எலான் மஸ்க் போன்ற “முறைசாரா” நியமனங்கள் உட்பட) 340 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜனநாயக உரிமைகளை அழிக்கவும், தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களை நடத்தவும் உறுதியேற்றுள்ள பாசிஸ்டுகள் மற்றும் மிகப்பெரும் பணக்காரர்களின் அரசாங்கமாகும்.
இதுவரை, பெசோஸ் புதிய அரசாங்கத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. எனினும், பெசோஸுக்குச் சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நவம்பர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டது. இது ட்ரம்ப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைத் திறந்து வைக்கும் பெசோஸின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
உலகின் அதிவல்லரசாக தனது நிலையை உறுதிப்படுத்தவும், அமெரிக்க செல்வந்தர்களின் செல்வத்தை அதிகரிக்கவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மூன்றாம் உலகப் போரை ஆரம்பித்துள்ளது. இந்தப் போரின் பல்வேறு களமுனைகள், உக்ரேனில் நடக்கும் பினாமிப் போர் முதல் காஸாவில் நடைபெறும் இனப்படுகொலை மற்றும் சீனாவுக்கு எதிரான எதிர்காலப் போர் வரை, முக்கிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் இயற்கை வளங்களை கட்டுப்படுத்துவதற்கான போராட்டமாகும். இங்கு அமேசான் முக்கியமான பங்காற்றுகிறது; இதற்கான ஆதாரம் என்எஸ்ஏ (NSA) உளவுப் பிரிவுடன் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான AWS ஒப்பந்தம் மற்றும் ஆஸ்திரேலியாவில் கண்காணிப்பு மையங்களை கட்டுவதற்கான 2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஆகும்.
ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய மூலோபாயத்தை எதிர்க்க, தொழிலாளர்களுக்கு சர்வதேச அமைப்புகளும் ஒரு சர்வதேச முன்னோக்கும் அவசியமாகும்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், அவர்கள் செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் நிறுவன நிர்வாகத்துடனும் முதலாளித்துவக் கட்சிகளுடனும் ஊழல் உறவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதனால், அவர்கள் தொழிலாளர்களுக்கான போராட்டங்களை ஒருங்கிணைக்க முடியாது. மாறாக, அவர்கள் மற்றய நாடுகளின் தொழிலாளர்களுக்கு எதிராக “அவர்களின் சொந்த” ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில், ட்ரம்பின் திட்டமிட்ட சர்வாதிகாரத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளனர்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது (IWA-RFC) அமேசான் தொழிலாளர்களை சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு வலியுறுத்துகிறது. இக்குழுக்களானது IWA-RFC இன் ஒரு பகுதியாக, தொழிலாளர்களின் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதில் வாழ்வதற்கேற்ற வருமானம், துன்புறுத்தும் கண்காணிப்பு முறைகளை நிறுத்துதல், வேலை வேகத்தை அதிகரிப்பதை தடுத்தல், “இலக்கு அடைதல்” என்ற அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
சாமானியத் தொழிலாளர் குழுக்கள் இரண்டு முக்கிய போராட்டங்களை இணைக்கும். முதலாவது, தொழிற்சங்க இயந்திரத்திலிருந்து தொழிற்சாலை சாமானிய தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான போராட்டம். இரண்டாவது, உலகளாவிய அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சி. IWA-RFC இன் செயல்பாடுகள் மூலம், இந்தக் குழுக்கள் தீவிரமாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அஞ்சல் மற்றும் விநியோகத்துறைத் தொழிலாளர்கள் மத்தியில் இவைகள் வலுவான பிரசன்னத்தைக் கொண்டுள்ளன.
அமேசான் போன்ற நாடுகடந்த பெருநிறுவனங்களின் செயல்பாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச உற்பத்தி செயல்முறையில் ஒன்றிணைத்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாளர்கள் ஒரே மாதிரியான இராட்சத பெருநிறுவனங்களுக்கு எதிராக போராடும் நிலையில், வேலையிட நிலைமைகள் ஒரே மாதிரியானதாக மாறுகின்றன. தேசிய வெறுப்புணர்வுகளைத் தூண்டி தொழிலாளர்களைப் பிரிக்க முதலாளிகள் முயற்சித்தாலும், பூகோள முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இயக்கமே இந்த முயற்சிகளை தோல்வியுறச் செய்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மூலோபாயமானது முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தனியார் உடைமை மற்றும் இலாப நோக்கு அமைப்புமுறை மீது நேரடியாக தாக்குதல் இல்லாமல், தொழிலாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது.