பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கு "பாரிய அளவிலான ஆயுதங்களை" வழங்குவதாக உறுதியளித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பதவியைவிட்டு வெளியேறும் பைடென் நிர்வாகமானது, அடுத்த நிர்வாகம் பதவியேற்கும் வரையான ஆறு வாரங்களில் உக்ரேனுக்கு “பாரிய ஆயுதங்களை” அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் அக்டோபர் 1, 2024 செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகிறார். [AP Photo/Mark Schiefelbei]

“ஜனாதிபதி பைடென் பதவியை விட்டு வெளியேறும் நேரத்தில் காங்கிரஸ் எங்களுக்கு ஒதுக்கிய ஒவ்வொரு டாலரையும் செலவழிக்கும் வகையில், உக்ரேனுக்கு நாங்கள் வழங்கும் இராணுவ உபகரணங்களில் பாரிய அதிகரிப்பை மேற்பார்வையிடுமாறு ஜனாதிபதி பைடென் எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை ABC யில் இடம்பெற்றுவரும் இந்த வாரம் என்ற நிகழ்ச்சியில் கூறினார்.

“இந்த 50 நாட்களில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், உக்ரேனுக்கு போர்க்களத்தில் அதன் நிலையை வலுப்படுத்துவதற்கான அனைத்து கருவிகளையும் வழங்குவோம்” என்று அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 5, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பைடென் நிர்வாகம் உக்ரேன் போரில் நேரடி அமெரிக்க இராணுவத் தலையீட்டின் அளவை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது.

நவம்பர் 9 அன்று, பைடென் நிர்வாகம் டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஆயுதங்கள் போன்ற மேம்பட்ட ஆயுதங்களுக்கு சேவை செய்வதற்காக, அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களை உக்ரேனுக்கு அனுப்ப பைடென் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஒரு வாரம் கழித்து, நவம்பர் 17 அன்று பைடென், ரஷ்யாவிற்குள் தொலை தூரத்துக்கு சென்று தாக்கக்கூடிய, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ATACMS நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்தார். அந்த வாரத்தின் பிற்பகுதியில், இங்கிலாந்து அதன் Storm Shadow ஏவுகணைகளைக் கொண்டு அதையே செய்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள்ளாக ரஷ்யாவிற்குள் ஆழமாக தாக்க இரண்டு ஏவுகணை ஆயுத அமைப்புகளும் பயன்படுத்தப்பட்டன.

நவம்பர் 19 அன்று பைடென் உக்ரேனுக்கு, கால் மிதிக்கும்போது வெடிக்கும் மிதி கண்ணிவெடிகளை வழங்க ஒப்புதல் அளித்தார். இது போர் முடிந்த நீண்ட காலத்திற்குப் பிறகும் பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைக் கொல்லும் போக்கிற்காக பல சர்வதேச ஒப்பந்தங்களால் தடைசெய்யப்பட்ட ஒரு ஆயுதமாகும்.

நவம்பர் 21ம் தேதி, உக்ரேனுக்கு அணுவாயுதங்களை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பைடென் நிர்வாகம் விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. “சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் செய்ததைப் போல, திரு. பைடென் மீண்டும் அணுஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கலாம் என்று கூட பல அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இது ஒரு உடனடி மற்றும் மிகப்பெரிய தடுப்பாக இருக்கும். ஆனால், அதுபோன்றவொரு நடவடிக்கை சிக்கலானதாகவும் தீவிர தாக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கும்” என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை, முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவிடம் இருந்து ஒரு பதிலடியைத் தூண்டியது. “அமெரிக்க அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் கியேவுக்கு அணுஆயுதங்களைக் கைமாற்றுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்” என்று அவர் எச்சரித்தார்.

“கியேவ் ஆட்சிக்கு அணுஆயுதங்களைக் கைமாற்றும் அச்சுறுத்தல் ரஷ்யாவுடனான ஓர் அணுஆயுத மோதலுக்கான தயாரிப்பாக கருத முடியும்” என்று கூறிய மெட்வெடேவ், “அத்தகைய ஆயுதங்களின் உண்மையான பரிமாற்றம் என்பது, நமது நாட்டிற்கு எதிரான ஒரு முழுமையான தாக்குதலாக கருதப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறன்று ABC க்கு அவர் அளித்த பேட்டியில், டைம்ஸ் அறிக்கைக்கு நேரடியாக சல்லிவன் கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும், இது நெறியாளர் ஜொனாதன் கார்ல் மூலம் விரிவாக மேற்கோள் காட்டப்பட்டது. டைம்ஸின் கூற்றுக்களை மறுத்த சல்லிவன், “இது பரிசீலனையில் இல்லை. இல்லை. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால், உக்ரேனுக்கு தேவையான பல்வேறு வழக்கமான திறன்களை அதிகரித்து வருகிறோம். இதனால் அவர்கள் திறம்பட தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், ரஷ்யர்களுக்கு எதிரான போரை எடுத்துச் செல்லவும் முடியும், அணுஆயுத திறனை அல்ல” என்று குறிப்பிட்டார்.

ஆப்ராம்ஸ் யுத்த டாங்கிகள், எஃப் -16 போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஆயுதங்களை அனுப்புவது உட்பட ரஷ்யாவுக்கு எதிராக பைடென் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு போர் விரிவாக்க நடவடிக்கையும், பைடென் நிர்வாகத்தின் தரப்பில், இதுபோன்ற திட்டவட்டமான மறுப்பு முன்னர் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

2023 இல், உலக சோசலிச வலைத் தளம், “உக்ரேனில் நேட்டோ கடக்கும் அடுத்த சிவப்புக் கோடு அணுஆயுதங்களா?” என்று கேட்டது. மேலும், “இந்த மோதலில் ரஷ்யாவின் வெற்றியைத் தடுக்க, நேட்டோவின் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது அல்லது பயன்படுத்துவது பற்றிய” எச்சரிக்கையையும் அது விடுத்தது.

ரஷ்யப் படைகள் ஒவ்வொரு போர்முனையிலும் முன்னேறி வருகின்ற நிலையில், உக்ரேனிய ஆயுதப் படைகள் எதிர்கொள்ளும் நிலைமை அவநம்பிக்கையாக உள்ளது என்பது பெருகிய முறையில் தெளிவாகி வருகிறது.

போர் குறித்த அதன் சமீபத்திய அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ், “கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய துருப்புக்கள் கிட்டத்தட்ட அதே நாட்களில் குறைந்தபட்சம் 10 கிராமங்களையும் குடியிருப்புகளையும் கைப்பற்றியுள்ளன” என்று அறிவித்தது. “உக்ரேனின் கிழக்கில் உள்ள டொனெட்ஸ்க்கில் உள்ள உக்ரேனிய படைகளுக்கு நிலைமை குறிப்பாக ஆபத்தானதாக தெரிகிறது. அங்கு ரஷ்ய படைகள் அப்பிராந்தியத்தின் தெற்கு பகுதியில் உள்ள அவர்களின் கடைசி இரண்டு கோட்டைகளை நெருங்கி வருகின்றன... குராகோவ் மற்றும் வெலிகா நோவோசில்கா கோட்டைகளின் வீழ்ச்சி, அப்பகுதியை ரஷ்யா கையகப்படுத்துவதற்கு வழி வகுக்கும்” என்று டைம்ஸ் மேலும் தெரிவத்தது.

உக்ரேனின் மூன்றாவது தாக்குதல் படைப்பிரிவின் தளபதி ஆண்ட்ரி பிலெட்ஸ்கி, “கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால போரில் இது உண்மையில் மிகவும் கடினமான சூழ்நிலை” என்று கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

இதற்கிடையில், பைனான்சியல் டைம்ஸ், “போரின் முந்தைய இரண்டு ஆண்டுகளை விட இந்தாண்டின் முதல் 10 மாதங்களில் அதிகமான உக்ரேனிய சிப்பாய்கள் ஓடிவிட்டனர். இது கிழக்கு உக்ரேனில் ரஷ்யா அதிகமான பிராந்தியங்களைக் கைப்பற்றியுள்ளதால், அதன் முன்னணி அணிகளை நிரப்புவதற்கான கியேவின் போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது,” என்று குறிப்பிட்டது.

“அக்டோபர் பிற்பகுதியில், உக்ரேனின் 123 படைப்பிரிவில் சேவையாற்றிய நூற்றுக்கணக்கான காலாட்படையினர் கிழக்கு நகரமான வுஹ்லேடரில் அவர்களின் நிலைகளைக் கைவிட்டுள்ளனர். அவர்கள் மைகோலாயிவ் பிராந்தியத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர், அங்கு சிலர் அரிதான பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்” என்று அது மேலும் தெரிவத்தது.

உக்ரேனில் போருக்கு வளர்ந்துவரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில், பைடென் நிர்வாகம் உக்ரேனிய அரசாங்கம் ஆட்சேர்ப்பு செய்யும் வயதை 25ல் இருந்து 18 எனக் குறைக்க வேண்டும் என்று கோருகிறது. இதையொட்டி கணக்கிலடங்கா எண்ணற்ற உக்ரேனிய இளைஞர்கள் மரணத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி பைனான்சியல் டைம்ஸிடம், “எளிய உண்மை என்னவென்றால், ரஷ்யாவின் வளர்ந்து வரும் இராணுவத்தின் வேகத்தை வைத்து, உக்ரேன் தற்போது தங்கள் போர்க்கள இழப்புகளை ஈடுசெய்ய போதுமான சிப்பாய்களை அணிதிரட்டவோ அல்லது பயிற்சியளிக்கவோ இல்லை” என்று கூறினார்.

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அவரது அரசாங்கம் ஆட்சேர்ப்பு வயதைக் குறைக்க திட்டமிடுகிறது என்பதை மறுத்து, “எந்த ஊகமும் வேண்டாம்—அணிதிரள்வதற்கான வயதைக் குறைக்க நமது அரசு தயாரிப்பு செய்யவில்லை,” என்று அறிவித்தார்.

பைடென் நிர்வாகம் பதவியை விட்டு வெளியேறிய பின்னரும் போர் தொடர்ந்து தீவிரமடைவதற்கு உத்தரவாதமளிக்கும் “கள உண்மைகளை” உருவாக்க அதன் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்து வருகிறது.

“ஜனவரி 21 அன்று, உக்ரேன் போர் வெறுமனே போய்விடாது” என்று சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை தனது நேர்காணலில் கார்லிடம் கூறினார்.

அதன் பங்கிற்கு, ட்ரம்ப்பின் இடைக்கால குழு பைடென் நிர்வாகத்தின் தலைமையிலான போரின் விரிவாக்கத்தை வரவேற்க ஆர்வமாக இருக்கிறது. “இது ஒரு வாய்ப்புக்கான நேரம் என்று நினைக்கும் நமது எதிரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு நிர்வாகத்தை மற்றொன்றுக்கு எதிராக விளையாட முடியும் என்று நினைக்கிறார்கள், இதன் மூலம் அவர்கள் தவறு செய்கிறார்கள்” என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட மைக் வால்ட்ஸ் கடந்த வாரம் கூறினார்.

“நாங்கள் கைகோர்த்து இருக்கிறோம், இந்த மாற்றத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் ஒரே அணியாக இருக்கிறோம்” என்று வால்ட்ஸ் மேலும் தெரிவித்தார்.

Loading