மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நவம்பர் 27 அன்று, இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் வடக்கு சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன. அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இந்த ஆயுதக் குழு, டிசம்பர் 1 வாக்கில் அலெப்போவைக் கைப்பற்றி தெற்கே ஹமா மற்றும் ஹோம்ஸ் நகரை நோக்கி தாக்குதலை நடத்தி வருகின்றது. இது, சிரியாவில் நேட்டோ ஆதரவிலான ஆயுதக் குழுக்களுக்கும், ரஷ்ய மற்றும் ஈரானிய படைகளின் ஆதரவிலான அரசாங்க துருப்புக்களுக்கும் இடையே 2011 இல் தொடங்கிய போரை முடக்கிய ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு இருந்த நான்காண்டு கால போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இது, ஒருபுறம் நேட்டோ நாடுகளுக்கும், மறுபுறம் ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவுக்கும் இடையே உக்ரேன், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாலும் கட்டவிழ்ந்து வரும் உலகளாவிய போரின் ஒரு பெரும் விரிவாக்கமாகும். காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையும், லெபனானில் ஹிஸ்புல்லா மீதான அதன் குண்டுவீச்சும் இந்தப் போரின் முக்கிய முனைகளாகும். வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் சிரியாவைக் கைப்பற்றி அதனை ரஷ்யா, ஈரான் மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிற்கு எதிரான ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு போர்முனை உருவாகி வருகிறது.
சமீபத்திய தாக்குதலுக்கு முன்னர், HTS மற்றும் துருக்கிய ஆதரவிலான சுதந்திர சிரிய இராணுவம் (FSA) உட்பட நேட்டோ ஆதரவிலான இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், இட்லிப் மாகாணத்தையும் மற்றும் அருகிலுள்ள அலெப்போ, ஹமா மற்றும் லட்டக்கியா மாகாணங்களின் சில பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. உக்ரேனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுக்காக ஆளில்லா விமானங்களை தயாரித்ததாக கூறப்படும் சிரியாவில் உள்ள ஈரானிய தொழிற்சாலைகள் மீது குண்டு வீச, உக்ரேனிய ஆட்சி நேட்டோவிடம் ஏவுகணைகளை கேட்ட நிலையில், கடந்த ஆண்டு பதட்டங்கள் அதிகரித்திருந்தன. கடந்த செப்டம்பரில், உக்ரேனின் GUR இராணுவ உளவுத்துறையின் “வேதியியலாளர்” பிரிவு அலெப்போ மற்றும் கோலான் குன்றுகளைச் சுற்றியுள்ள ரஷ்ய துருப்புகளைத் தாக்கியதாக கீவ் போஸ்ட் அறிவித்தது.
சிரியாவில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த ஹிஸ்புல்லா படைகளை சேதப்படுத்தியதன் மூலம் காஸா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் போர், தற்போதைய தாக்குதலுக்கு அரங்கு அமைத்துக் கொடுத்துள்ளது. சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தற்போதைய தாக்குதலில் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இதன் போது HTS மற்றும் அதன் கூட்டாளிகள் அலெப்போ நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
பிரதான நேட்டோ சக்திகள் அலெப்போ மீதான தாக்குதலுக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் கொடுக்கவில்லை. “தற்போதைய தாக்குதலுக்கு தலைமை கொடுக்கும் குழு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆகும், இது இஸ்லாமிய அரசு மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புபட்டது” மற்றும் “இப்போதும் அமெரிக்காவால் ஒரு பயங்கரவாத குழுவாக கருதப்படுகிறது,” என்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இது, “ஒருகாலத்தில் [சிரிய ஜனாதிபதி பஷர்] அல்-அசாத்திற்கு எதிராக மிதவாத கிளர்ச்சியாளர்களை ஆதரித்த அரசாங்கங்களை ஒரு தந்திரமான இடத்தில் விட்டுவிட்டு, இரு தரப்பையும் ஆதரிக்க முடியாமல் செய்கிறது” என்று டைம்ஸ் தெரிவித்தது.
ஆனால், இத்தாக்குதலுக்கு நேட்டோவின் ஆதரவு உள்ளது என்பது தெளிவு. இது சிஐஏ இன் 2012-2017 ஆபரேஷன் டிம்பர் சைக்மோர் போன்ற திட்டங்கள் மூலமாக அமெரிக்க நிதியுதவியைப் பெற்ற FSA போன்ற ஆயுதக் குழுக்களை அணிதிரட்டி, நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட சிரியாவின் பகுதிகளில் இருந்து வருகிறது. உண்மையில், டைம்ஸ் தெளிவாக்கியுள்ளபடி, உக்ரேன் போர் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் போரால், இந்த தாக்குதல் சாத்தியமாகியுள்ளது:
இப்போது, [சிரியாவின்] கூட்டாளிகள் பலவீனமடைந்துள்ள அல்லது அவர்களின் சொந்த மோதல்களால் திசைதிருப்பப்பட்டுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்கள் அதிகார சமநிலையை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். … இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், எதிர்ப்பின் அச்சு என்றழைக்கப்படும் அதன் பினாமிப் படைகளின் போர்க்கள இழப்புகள் மற்றும் உள்நாட்டில் ஒரு பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஈரான் பலவீனமடைந்துள்ளது. அந்த பினாமிப் படைகளில் ஒன்றான ஹிஸ்புல்லா, இஸ்ரேலுடனான 13 மாத போர் மற்றும் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் சிதைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இப்போது உக்ரேனுடனான போரின் மூன்றாவது ஆண்டு முடிவை நெருங்குகிறது.
இது காஸா இனப்படுகொலைக்கு நேட்டோ ஆதரவின் அடித்தளத்தில் இருக்கும் மூலோபாய மற்றும் நிதியியல் நலன்களை வெளிப்படுத்துகிறது. பைடென் நிர்வாகமும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் எண்ணற்ற ஆயிரக்கணக்கான நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டு வருவதை மத்திய கிழக்கை அடிமைப்படுத்தும் தங்கள் முயற்சிகளுக்கு முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
முதலாவதாக, 2011 முதல் 2020 வரையிலான சிரியாவில் இரத்தம் தோய்ந்த போரின் ஒன்பது ஆண்டுகளில் அசாத்தை வீழ்த்துவதில் அவர்கள் தோல்வியடைந்ததற்கு பழிவாங்குவதற்கு, இது அவர்களை அனுமதிக்கிறது. எவ்வாறிருப்பினும், எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான இந்தப் போர், தற்போது பிரதானமாக ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைத்துள்ள, உலக மேலாதிக்கத்திற்கான ஒரு பரந்த ஏகாதிபத்திய போரின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.
நேற்று, சிரிய மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் இஸ்லாமிய கிளர்ச்சி ஆயுதக் குழுக்கள் மீது குண்டுவீசின. ஈரான்-ஆதரவு ஈராக்கிய போராளிகள் குழுக்களின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் அசாத்தின் இராணுவத்துடன் சேர்ந்து சண்டையிட சிரியாவிற்குள் நுழைந்தனர். ஒரு மூத்த சிரிய இராணுவ அதிகாரி, ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், பத்ர் அல்லது நுஜாபா போராளிகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள், வான்வழித் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக சிறு குழுக்களாக எல்லையைக் கடந்தனர்: “இவை வடக்கில் போர் முன்னரங்க நிலைகளில் உள்ள எங்கள் தோழர்களுக்கு உதவ அனுப்பப்படும் புதிய கூடுதல் படைகள் ஆகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு, தெஹ்ரானுக்கு நெருக்கமான டெலிகிராம் சேனல்கள், சிரிய இராணுவம் அலெப்போவின் தெற்கே ஒரு எதிர்தாக்குதலைத் தொடங்கியதாக அறிவித்தன. சிரியப் படைகள் கானாசிரை மீண்டும் கைப்பற்றிவிட்டதாகவும், அலெப்போ நகரத்திற்கு தெற்கே உள்ள அல் சஃபிரா தொழில்துறை பகுதியை நோக்கி வடக்கு நோக்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர். எனினும், ஹமாவைச் சுற்றி சிரிய அரசுப் படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், துருக்கிய ஆதரவு பெற்ற சிரிய தேசிய இராணுவப் படைகளும் தாக்குதலை மேற்கொண்டு டெல் ரிஃபாத் நகரத்தை அமெரிக்க ஆதரவு குர்திஷ் தேசியவாத YPG (மக்கள் பாதுகாப்பு பிரிவுகள்) ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது YPG பிரிவுகள் இன்னும் வடக்கே துருக்கியுடனான எல்லைக்கு நெருக்கமாக நகர்வதைத் தடுத்துள்ளது. துருக்கியின் ஆயுதப் படைகளும், ஆளும் வர்க்கமும் அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் தேசியவாத குழுக்கள் சிரியாவின் சில பகுதிகளிலும் மற்றும் துருக்கியிலேயே கூட ஒரு சுதந்திர குர்திஷ் அரசை ஸ்தாபிக்கக்கூடும் என்று ஆழமாக அஞ்சுகின்றன.
நேற்று, துருக்கிய வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடான் கூறுகையில், துருக்கி “சிரியாவில் உள்ள பயங்கரவாத கட்டமைப்பை ஒரு அரசாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார். குர்திஷ் தேசியவாதிகளை இலக்கு கொண்ட இந்த அச்சுறுத்தல், துருக்கிய அரசாங்கத்தை அல் கொய்தா சக்திகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கும் நோக்கத்தையும் வெளிப்படையாக கொண்டிருந்தது. HTS போன்ற குழுக்கள் “வாஷிங்டனின் ஆதரவு இல்லாமல் மூன்று நாட்களுக்கு போரைத் தொடர முடியாது” என்று ஃபிடான் கூறினார்.
ஈரான், ரஷ்யா மற்றும் சீனா அனைத்தும் சிரியாவிற்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டன. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையே நெருக்கமான இராணுவத் தொடர்புகள் தொடர்கின்றன என்று கூறியபோது, ஈரானிய அதிகாரிகள் சிரியாவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.
“முஸ்லிம் நாடுகளுடனான ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளுடன், முஸ்லிம்களிடையே ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும், பிராந்தியத்தில் பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பின்மையை பரப்புவதற்கும் சியோனிஸ்டுகளின் முயற்சிகளை நாங்கள் நிச்சயமாக முறியடிப்போம்” என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியன் கூறினார். “சிரியா மீண்டும் சியோனிச சதித்திட்டங்களை முறியடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக சிரிய அரசுடனும் மக்களுடனும் ஈரான் துணை நிற்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செப்டம்பர் 2023 பெய்ஜிங்கிற்கான அசாத்தின் விஜயத்தின் போது சிரியாவுடன் ஒரு “மூலோபாய கூட்டாண்மையை” அறிவித்த சீனா, சிரியாவுக்கு இராணுவ பயிற்சியாளர்களை அனுப்பியதுடன், கவலைக்குரிய அறிக்கைகளையும் வெளியிட்டது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான சிரியாவின் முயற்சிகளை சீனா ஆதரிக்கிறது. சிரியாவில் நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க சாதகமான முயற்சிகளை மேற்கொள்ள சீனா தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான அல் கொய்தாவின் தாக்குதல், மத்திய கிழக்கில் பேரழிவு தரும் பரிமாணங்களின் ஒரு போரை கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகிறது. இது அனைத்து பிரதான உலக சக்திகளையும் துரிதமாக உள்ளிழுக்கிறது. நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் போரைத் தடுப்பதில் அக்கறை காட்டாமல், தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில் இருந்து ரஷ்ய, சீன, ஈரானிய மற்றும் அதன் நேச நாட்டு ஆட்சிகளின் திவால்நிலை உருவாகிறது. ஏகாதிபத்திய சக்திகள் உலகளாவிய மேலாதிக்கத்தின் தங்கள் நிகழ்ச்சி நிரலை பின்பற்றி, பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையேயான போருக்கு எதிரான பெரும் மக்கள் எதிர்ப்பை நசுக்கி வருகின்றன.
குறிப்பாக, பைடென் நிர்வாகத்தின் போது, உக்ரேன் போர் குறித்து ட்ரம்ப் ஒரு சில வாய்வீச்சு விமர்சனங்களை வெளியிட்டாலும், அவர் போரை விரிவாக்க விரும்புகிறார் என்பது முன்னெப்போதிலும் பார்க்க தெளிவாகத் தெரிகிறது. நேற்று, அவர் அலெப்போ படையெடுப்புக்கு விடையிறுக்கும் வகையில், அவரது ட்ரூத் சமூக வலைப்பின்னலில், காஸாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் ஒரு பரந்த போர் நடத்தப்படும் என்று அச்சுறுத்தினார்.
ட்ரம்ப் பின்வருமாறு குறிப்பிட்டார்:
நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பெருமையுடன் பதவியேற்கும் தேதியான ஜனவரி 20, 2025 க்கு முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் மனிதகுலத்திற்கு எதிராக இந்த அட்டூழியங்களைச் செய்த பொறுப்பாளர்கள் அனைத்து நரகங்களையும் செலுத்த வேண்டியிருக்கும். … அமெரிக்காவின் நீண்ட மற்றும் அடுக்கு வரலாற்றில் எவரையும் விட இதற்குப் பொறுப்பானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உடனே பணயக் கைதிகளை விடுதலை செய்!
பைடென் மற்றும் ட்ரம்பிடம் இருந்து வரும் இதுபோன்ற அச்சுறுத்தல்களின் இலக்குகள் சரணடைவதன் மூலமாக அல்ல, மாறாக அமெரிக்காவுடன் ஒரு பரந்த மோதலுக்கு தயாரிப்பு செய்வதன் மூலமாக விடையிறுக்கின்றன. அமெரிக்க டாலரைப் பயன்படுத்தாத எந்தவொரு நாட்டையும் 100 சதவீத சுங்கவரி விதிப்பைக் கொண்டு அமெரிக்க சந்தைகளில் இருந்து முடக்கப் போவதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் அச்சுறுத்திய பின்னர், ரஷ்யாவும் ஈரானும் அவற்றின் இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் அனைத்து பயன்பாட்டையும் நிறுத்திவிட்டதாக கடந்த வாரம் பகிரங்கமாக அறிவித்தன.