World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka plunges into constitutional crisis

இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது

By K. Ratnayake
5 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அமைச்சர்களை முக்கிய பொறுப்புக்களில் இருந்து விரைவாக வெளியேற்றவும் பாராளுமன்றத்தை நவம்பர் 19 வரை ஒத்திவைப்பதற்காகவும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதன் மூலம், நேற்று ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தார். குமாரதுங்க, அரசாங்கத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாஷிங்டனில் இருந்துகொண்டிருந்த போதேயாகும். அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை இன்று சந்திக்கவிருந்தார்.

குமாரதுங்க பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடக அமைச்சுக்களை தனது கைகளில் எடுத்துக்கொண்டதோடு, திலக் மாரபன, ஜோன் அமரதுங்க மற்றும் இம்தியாஸ் பகீர் மார்கர் ஆகியோரையும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கினார். இந்த மூவரும் எஞ்சிய பொறுப்புக்களை கொண்டிருப்பதோடு அமைச்சரவையிலும் உள்ளனர். ஒவ்வொரு அமைச்சுக்குமான உயர் மட்ட அலுவலர்களும் பதிலீடு செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற ஒத்திவைப்பானது நவம்பர் 12 அன்று முன்வைக்கப்படவிருந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதைத் தடுக்கும்.

இராணுவத்தை வழிநடத்தும் வகையில், ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி, அரசாங்க அச்சகம் மற்றும் தலைநகரில் உள்ள பிரதான மின்நிலையங்களில் துருப்புக்களை குவித்துள்ளார். அமைச்சர்களை விலக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை நிச்சயிப்பதற்காக ஒரு விசேட பொலிஸ் குழுவொன்று அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய, நோர்வே மற்றும் இந்தியத் தூரகங்களுக்கு வெளியிலும் மற்றும் இலங்கைக் கண்காணிப்புக் குழுவுக்கு வெளியிலும் பாதுகாவலர்கள் இருத்தப்பட்டனர். நாடு பூராவும் பொலிசார் அதிக விழிப்புடன் இருத்தப்பட்டிருந்ததோடு எல்லா விடுமுறைகளும் விலக்கப்பட்டன. நாட்டின் வடக்கில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் நுழைவாயிலில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்றுப் பின்னிரவு தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய குமாரதுங்க அவரது நடவடிக்கைகள் "தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு" அவசியமானது எனக் குறிப்பிட்டார். "கடந்த சில மாதங்களாக காணப்பட்ட கொந்தளிப்பான அபிவிருத்திகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட விளைபயனற்ற நடவடிக்கைகளும் என்னை உறுதியானதும் நிலையானதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளியது," என அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் தனது அசாதாரணமான நகர்வுக்கு தெளிவான காரணங்களையோ அல்லது தனது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையிட்டோ தெளிவுபடுத்தவில்லை.

குமாரதுங்க, நாட்டின் அரசியல் சாசனத்தின் கீழ் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட அலுவலர்களை நியமிக்கவும் அரசாங்கத்தைக் கலைப்பதற்குமான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சியான அவரது பொதுஜன முன்னணி 2001 தேர்தல்களில் தோல்விகண்டது குறிப்பிடத்தக்கது. குமாரதுங்க முழு அதிகாரத்தையும் உத்தியோகபூர்வமாக தன்வசம் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், அவர் தொலைக் காட்சியில் தோன்றியபோது, எதிர்கால சம்பவங்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கப்போவது அரசாங்கம் அல்ல எனக் குறிப்பிட்டார். குமாரதுங்க ஜனநாயக உரிமைகளைக் காப்பது பற்றி பேசிய அதேவேளை, தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கீழறுப்பதற்காக விதிமுறைக்கடங்காத மற்றும் ஜனநாயகமற்ற பாங்கில் செயற்பட்டுள்ளார். ஒரு மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தலில், "கிளர்ச்சியை உண்டுபண்ணுவதற்கான" எந்தவொரு நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் சட்டமும் ஒழுங்கும் பேணப்படும் எனவும் அவர் எச்சரிக்கை செய்தார்.

குமாரதுங்கவின் நடவடிக்கைகளுக்கு வாஷிங்டனில் இருந்து பிரதிபலித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "ஜனாதிபதியின் பொறுப்பற்ற மற்றும் தலைகீழ் நடவடிக்கையானது நாட்டை குழப்பத்திலும் கலகத்திலும் ஆழ்த்துவதை இலக்காகக் கொண்டது," எனப் பிரகடனம் செய்தார். அவர் ஆயுதப் படைகளையும் மக்களையும் "அமைதியாக இருக்கும்படி" கேட்டுக்கொண்ட அதே வேளை ஜனாதிபதியின் கட்டளைகளை நேரடியாக சவால் செய்யவில்லை. தனது அமெரிக்க பயணத்தை சுருக்கிக் கொள்வதற்கான எண்ணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அவரது அமைச்சரவை நேற்றிரவு கொழும்பில் அவசரக் கூட்டமொன்றை கூடியதோடு இன்று ஒரு அறிக்கையையும் வெளியிடவுள்ளது.

குமாரதுங்க, ஐ.தே.மு. அரசாங்கம் நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலமான முடிவை எட்டுவதற்கான தனது திட்டங்களில் அதிகளவில் சலுகைகளை வழங்குகிறது என கடுமையாக விமர்சித்தார். கடந்த சனிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முதல் அடியாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படாத இடைக்கால தன்னாட்சி நிர்வாகத்தை அமுல்படுத்துவதற்கான தமது பிரேரணைகளை அறிவித்தது. இந்த பிரேரணைகள் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு அடித்தளம் என்றவகையில், பொதுவில் கொழும்பு ஊடகங்கள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவினதும் வரவேற்பை பெற்றது.

எவ்வாறெனினும், எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணியின் பிரதான கட்சியான குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), விடுதலைப் புலிகளின் பிரேரணைகள் தொடர்பாக நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது நாட்டின் அரசியலமைப்புக்கு மாறானது எனவும் நாடு பிளவுபடுவதற்கான அடிப்படைகளை உருவாக்குகின்றது எனவும் அறிக்கையில் விமர்சித்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களத் தீவிரவாத கட்சிகளுடன் சேர்ந்துகொண்ட பொதுஜன முன்னணி, விடுதலைப் புலிகளின் செல்வாகிலான ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கான திட்டங்களை நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கை என கண்டனம் செய்ததோடு அரசாங்கத்தை பதவி விலக்குமாறு குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுத்தது.

குமாரதுங்க தனது அரசியல் நிலைமைக்கு முட்டுக் கொடுப்பதன் பேரில் சிங்களப் பேரினவாத குழுக்களுக்கு வேண்டுமென்றே அழைப்பு விடுக்கின்றார். ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஸ்ரீ.ல.சு.க, ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க விரோத பிரச்சாரத்தின் முதற்படியாக 100,000 க்கும் அதிகமான மக்களை சேர்த்து கொழும்பில் ஒரு பெரும் கூட்டத்தை நடத்தியது. ஜே.வி.பி. மற்றும் தொழிலாளர் கட்சிகள் என்று சொல்லிக்கொள்கின்ற லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும், பேரினவாதத்தை கிளப்புவதிலும் ஐ.தே.மு.வின் தேசத்தைக் "காட்டிக் கொடுக்கும்" நடவடிக்கைக்கு தாக்குதல் தொடுப்பதிலும் ஸ்ரீ.ல.சு.க. பேச்சாளர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.

பிற்போக்கு சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக எழுந்துள்ள தெளிவான வேறுபாடுகள், அரச அதிகாரத்தின் நெம்புகோலை கட்டுப்படுத்துவது யார் என்பது தொடர்பாக ஆளும் வட்டாரத்துக்குள் இருக்கும் மோதல்களின் வெளிப்பாடாகும். நாட்டின் பொருளாதார செல்வத்தை உயிர்பெறச் செய்வதன் பேரில், 20 வருடகால மோதல்களுக்கும் நீண்டு செல்லும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் முடிவுகட்டுமாறு வல்லரசுகளின் முழுமையான ஆதரவைப் பெற்றுவரும் கொழும்பில் உள்ள வர்த்தகர்களில் செல்வாக்கான பகுதியினர் நெருக்கிவருகின்றனர். அதேசமயம் இராணுவப் பிரிவினர், அரச அதிகாரத்துவம், வியாபார மற்றும் பெளத்த பெருந்தலைவர்களின் ஆழமான நலன்களும் இருந்து கொண்டுள்ளன. இவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் நீண்ட யுத்தத்தோடு பிணைந்துள்ளதோடு நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையையும் இவர்கள் எதிர்க்கின்றார்கள்.

அரச அதிகாரத்துக்கான போராட்டம்

2001 டிசம்பரில் இருந்து, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகரித்துவரும் இலகுவற்ற மோதல் நிலை இருந்துவந்துள்ளது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் 2002 பெப்பிரவரியில் யுத்தநிறுத்த உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதோடு 2002 செப்டம்பரில் உத்தியோகபூர்வ சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் ஏப்பிரலில் ஆயுதப் படைகளின் சில பகுதியினருடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட குமாரதுங்கவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் காரணமாக பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. கடற்படையினர் விடுதலைப் புலிகளின் படகுகளை கைப்பற்ற அல்லது மூழ்கடிக்க மேற்கொண்ட முயற்சிகளால் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தகர்ந்து போயின.

குமாரதுங்க, அரச சாதனங்களின் பிரதான பகுதிகள், விசேடமாக பாதுகாப்பு படைகள் மீதான தனது நேரடிக் கட்டுப்பாட்டை பேண முயற்சித்தார். பல மாதங்களாக ஜனாதிபதியும் பிரதமரும் உயர் மட்ட தீர்மானங்களை எடுப்பது யார் என்ற பிரச்சினையில் மோதிக்கொண்டிருந்தனர். ஜனாதிபதி அவரது ஆதரவாளர்கள் எனக் கருதப்படுகின்ற கடற்படைத் தளபதி அட்மிரால் தயா சந்தகிரி மற்றும் இராணுவத் தளபதி லயனல் பலகல்ல ஆகியோரின் ஒய்வுபெறும் காலத்தை மேலும் நீடித்தார். அக்டோபர் 10 அன்று பலகல்ல பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே சமயம் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபரின் சேவைக் காலத்தை நீடிக்க உள்துறை அமைச்சர் முன்வைத்த பிரேரணையை குமாரதுங்க இரத்துச் செய்தார்.

கடந்த மாதம் இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் ட்ரிகிவ் டெல்விசனை திருப்பி அழைக்குமாறு நோர்வே அரசாங்கத்துக்கு எழுதிய குமாரதுங்க, யுத்த நிறுத்த உடன்படிக்கையை கீழறுக்கும் அச்சுறுத்தலை விடுத்தார். நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிப்பதோடு கண்காணிப்புக் குழு யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கின்றது. கண்காணிப்புக் குழு விடுதலைப் புலிகளின் படகு ஒன்று கைப்பற்றபடுவதைத் தடுப்பதற்காக அவர்களுக்கு தகவல்களை கசியச் செய்ததாக குற்றம் சாட்டிய கடற்படை கடிதத்துக்கான சாக்குப்போக்கை வழங்கியது. கொழும்பு பத்திரிகை ஒன்றின் கடந்த வார செய்தியின் படி படகு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதா அல்லது அங்கு படகு ஒன்று இருந்ததா என்பது கூட தெளிவாக இருக்கவில்லை. அக்டோபர் 24 அன்று, குமாரதுங்க கண்காணிப்புக் குழுவின் நெறிமுறைகளை அல்லது ஆலோசனைகளை பின்பற்ற வேண்டாம் என்று கூட ஆயுதப்படைகளின் தலைவர்களுக்கு எழுதியிருந்தார்.

அதேசமயம், பல உயர்மட்ட இராணுவ அலுவலர்களின் சேவையை விரிவுபடுத்துவதற்காக, பாதுகாப்பு அமைச்சால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் சட்டபூர்வ தன்மையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததன் மூலம், ஜனாதிபதி தனது பதவியை பலப்படுத்த முயன்றார். விடயம் கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, பிரதம நீதிபதி சரத் என் சில்வா, ஆயுதப் படைகளின் தலைவர் என்ற வகையில் இராணுவ அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு என வலியுறுத்தினார். குமாரதுங்கவால் நியமனம் பெற்ற சில்வா இதற்கு முன்னர் குமாரதுங்கவுக்குச் சார்பானவர் என்ற கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

கடந்த வாரம் ஐ.தே.மு, பிரதம நீதிபதி மீதான அவதூறு குற்றச்சாட்டை முன்வைக்கும் தீர்மானத்தை அறிவித்ததை அடுத்தே ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பதட்டநிலை உக்கிரம் கண்டது. கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையை குமாரதுங்கவையே குற்றம் சாட்டும் நோக்கிலான முதல் நடவடிக்கையாக அரசாங்கத்தின் சில பிரிவினர் கருதினர். ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு குற்றப் பிரேரணையும் மொத்தத்தில் பிரதம நீதியரசரால் வாக்கெடுப்புக்கான தீர்ப்புக்கு விடப்பட வேண்டும். பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதன் மூலம் சில்வாவுக்கோ அல்லது தனக்கோ எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுவதை ஜனாதிபதி தடை செய்தார்.

டெயிலி மிரர் பத்திரிகையின் படி, ஐ.தே.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஒரு விளைபயனுள்ள எதிர் மூலோபாயத்தை வரைவதற்காக ஒரு நீண்ட கூட்டத்தொடரை கூடினர். உத்தியோகபூர்வ அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்காத அதேவேளை, குமாரதுங்கவைப் புறக்கணித்து பாராளுமன்றத்தை முன்கூட்டியே கூடுதல் மற்றும் அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகிய இரண்டும் கலந்துரையாடப்பட்டதாக செய்தித்தாள் அறிவித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாரக் கடைசியில் நாடு திரும்பும் வரை, பதவி விலக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அலவலர்களை தொடர்ந்தும் அவர்களின் பதவியில் இருந்து தமது கடமைகளை ஆற்றுமாறு குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்பு

மூன்று அமைச்சர்களையும் பதவி விலக்குவதற்கான குமாரதுங்கவின் தீர்மானமானது பலவீனமான நிலையில் இருந்து எடுக்கப்பட்ட அவநம்பிக்கையான நடவடிக்கையே அன்றி பலத்தால் அல்ல. அவரது சொந்தக் கட்சியினுள்ளும் மற்றும் எதிர்க் கட்சியான அவரது கூட்டணியினுள்ளும், விடுதலைப் புலிகளுடனான கொடுக்கல் வாங்கல்களுக்காக முன்செல்வதன் பேரில் ஐ.தே.மு. வுடன் இணைந்துகொள்ள முனைபவர்களுக்கும் மற்றும் ஜே.வி.பி.யுடனும் சமாதானப் முன்னெடுப்புகளுக்கு எதிரான பிரச்சாரத்துடனும் கூட்டு சேர விரும்பும் ஸ்ரீ.ல.சு.க. வின் குறிப்பிடத்தக்க பிரிவினருக்கும் இடையில் ஆழமாகிவரும் விரிசல் இருந்துகொண்டுள்ளது. இந்த கோஷ்டிகளுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நடவடிக்கையை மேற்கொள்பவராக குமாரதுங்க காட்சியளிக்கின்றார்.

நேற்றிரவு தொலைக் காட்சியில் தோன்றியபோது, யுத்தத்துக்கு முடிவுகட்டுமாறு நெருக்கிவரும் பெரு வர்த்தகர்கள் மற்றும் பெரு வல்லரசுகளையும் அமைதிப்படுத்தும் கடும் முயற்சியில் ஈடுபட்டார். "தனித்துவமான வரையறை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இலங்கையின் இறைமை ஆகியவற்றுக்குள் ஒரு சமநிலையான முடிவு காண்பதற்காக விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக" அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் அதிகாரத்தை மீளவலியுறுத்தும் அவரின் முயற்சியானது, ஐ.தே.மு. ஆட்சிக்கு வந்தது முதல் தாம் இருந்துகொண்டுள்ள வரம்பில் இருந்து வெளியேறி மீண்டும் சமாதான முன்னெடுப்புக்குள் ஆழ்த்துவதாகவும் இருக்கலாம்.

குமாரதுங்கவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பெரு வர்த்தகர்கள் கூர்மையாக எதிர்ச் செயலாற்றினர். நேற்று, எல்லா பங்கு விலைச் சுட்டெண்களும் 70 புள்ளிகளால் அல்லது 5 வீதத்தால் வீழ்ச்சி கண்டதோடு புளூ சிப் மிலங்கா விலைச் சுட்டெண்களும் 141 புள்ளிகளால் அல்லது 6 வீதத்தால் வீழ்ச்சி கண்டது --ஒரு நாளில் முன்னொரு போதும் காணாத வீழ்ச்சி. பங்குகளின் பெறுமதியில் மொத்தம் 17 பில்லியன் ரூபாய்கள் துடைத்துக் கட்டப்பட்டன.

ஏனைய வியாபார தலைவர்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் தேசிய வர்த்தகர் சபைத் தலைவர் அசோக டீ சில்வா பிரகடனப்படுத்தியதாவது: "அரசாங்கம் விடுதலைப் புலியின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பிரேரணைகள் தொடர்பாகவும் ஏனைய கட்சிப் பிரேரணைகள் தொடர்பாகவும் அக்கறை செலுத்தும் சமயத்தில், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதற்கான நேரம் இதுவல்ல. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தயக்கம் காணப்படுகின்றது. வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவது பற்றி இரு தடவை சிந்திப்பார்கள். அதேபோல் உள்நாட்டவர்களும் சுருட்டி வைத்துக்கொள்வார்கள்.

பெரும் வல்லரசுகளும் குமாரதுங்கவின் தீர்மானத்துக்கு அமைதியாக பிரதிபலித்தன. அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் இலங்கையின் உள்நாட்டு யுத்ததுக்கு முடிவுகாணுமாறு நெருக்கிவருகின்றனர். இந்த யுத்தமானது, கனிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற இந்தியத் துணைக் கண்டத்தில் ஸ்திரமற்ற நிலைமையைத் தோற்றுவிக்கும் ஒரு காரணியாக தொடர்ந்தும் இருந்துகொண்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளர் ஹசீன் மெக்கோர்மக், இன்று விக்கிரமசிங்கவை புஷ் சந்திப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்தார். "நாம் இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளையும் பலம்வாய்ந்த ஜனநாயக அமைப்புகளையும் உறுதியாக ஆதரிக்கின்றோம்," என அவர் பிரகடனம் செய்தார். குமாரதுங்கவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் கருத்து வெளியிட்டிருந்தது. "சமாதான முன்னெடுப்புகளின் வேகத்தை ஊக்குவிப்பதற்கு இன்றியமையாத கூட்டுழைப்புக்கான (அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான) ஆர்வத்தை ஆபத்துக்குள் தள்ளியுள்ளது," என அது குறிப்பிட்டிருந்தது.

சமாதானம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்குமான அக்கறையின் வெளிப்பாடுகள் முழுவதும் சிடுமூஞ்சித்தனமானவை ஆகும். ஒருவரை ஒருவர் அழிக்கும் இலங்கை ஆளும் கும்பலின் எந்தவொரு பிரிவும், சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் நெருக்கும் சமூக தேவைகளையிட்டு அற்ப அக்கறையையே கொண்டுள்ளன.

அரசாங்கத்தை பொறுத்தளவில், வடக்கு கிழக்கில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படாத ஒரு நிர்வாகத்தை திணிப்பதில் விடுதலைப் புலிகளை இணைத்துக்கொள்ள முடியுமானால், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை ஆழமாக வெட்டித் தள்ளும் மறுசீரமைப்பு திட்டத்தை வேகமாக அமுல்படுத்த முடியும். ஆளும் வர்க்கத்தின் எதிர்ப் பிரிவின் நலன்களைக் காப்பதன் பேரில், குமாரதுங்க மிகவும் ஜனநாயக விரோத வழிமுறைகளைப் பயன்படுத்தவும் இராணுவம் மற்றும் தீவிர பேரினவாத அமைப்புகளோடு அணிதிரளவும் தயங்கவில்லை.

தொழிலாள வர்க்கம் தனது நலன்களைப் பாதுகாக்க, ஒரு சில செல்வந்தர்களின் இலாபம் மற்றும் சொத்துக்களின் பேரில் அன்றி, தொழிலாள வர்க்க பெரும்பான்மையினரின் பேரில் சமுதாயத்தை மீளமைப்பதை இலக்காக்க கொண்ட ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நின்று, வங்குரோத்தடைந்து வரும் இந்த முதலாளித்துவத்தின் சகல பகுதியினரிடமிருந்தும் தமது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ளல் வேண்டும்.

See Also :

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்பு சதியை கண்டனம் செய்கின்றது

இலங்கையில் எதிர்க் கட்சி அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது

 

Top of page