Print Version|Feedback
Northern Sri Lanka severely affected by drought
வட இலங்கை கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது
S. Ahilan and Subash Somachandran
26 July 2017
இலங்கையில் நீண்ட காலமாக நிலவும் வறட்சியால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தசாப்தங்களாக நீண்ட உள்நாட்டு யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட மாகாணங்களாகும். வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மற்றும் அனுராதபுர மாவட்டங்களும் வட மேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களும் தென்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாகும்.
அனர்த்த முகாமைத்துவ மையம் (டி.எம்.சி) தெரிவித்துள்ளவாறு, வட மாகாணத்தில் 133,462 குடும்பங்களைச் சேர்ந்த 462,219 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 105,847 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63,939 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 40,548 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 142,992 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 129,241 பேரும் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை, பொலன்னறுவையில் 17,337 பேரும், அனுராதபுர மாவட்டத்தில் 51,715 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். பதுளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களும் விவசாயிகள் செறிந்து வாழும் மாவட்டங்களாகும். அவர்களது வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் வறண்டு போயுள்ளன.
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள குளங்களும் அணைகளும் மழைவீழ்ச்சியைச் சார்ந்துள்ளன. ஆனால் ஜனவரி முதல் மழை வரவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 124,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அனைத்து தேவைகளுக்கும் நிலத்தடி நீரில் தங்கியிருக்கின்ற அதே வேளை, நிலத்தடி நீரில் கால்சியம் மற்றும் உப்பு கலந்திருக்கும் நிலையில், சுத்தமான குடிநீர் பெறுவது நிலையான பிரச்சினையாக உள்ளது.
யாழ்ப்பாண புறநகரான சுன்னாகத்தில், ஒரு தனியார் மின் நிலையத்திலிருந்து கசியவிடப்பட்ட எண்ணெயினால், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுன்னாகத்தில் உள்ள மக்களுக்கு சுத்தமான நீர் வழங்குவதற்கு இன்னமும் முறையான திட்டங்கள் இல்லை. மக்கள் மாசுபட்ட நீரைப் பயன்படுத்த அல்லது பவுசர் விநியோகத்தை சார்ந்து இருக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.
முறையான நீர் வழங்கல் இல்லாததால், யாழ்ப்பாண மக்கள் குடி நீருக்காக பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து கிணறுகளில் இருந்து கொண்டு வர வேண்டும், அல்லது பவுசர்களில் கொள்வனவு செய்ய வேண்டும். கிணறுகளும் கூட வற்றிப் போயுள்ளதால் விவசாயிகளால் பயிர்களுக்கு நீர் ஊற்ற முடியவில்லை. கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
காரைநகரில் தண்ணீருக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள தீவுகளான மண்டதீவு, வேலனை, ஊர்காவற்துறை, காரைநகர், புங்குடுதீவு, எழுவைதீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவும் வழமையான தண்ணீர் பிரச்சினையில் உள்ளவை. காரைநகர் மற்றும் புங்குடுதீவில் உள்ள குடும்பங்கள் தண்ணீர் பவுசர் வரும் வரை பல மணி நேரம் காத்திருக்க வேண்டும், ஆனால் மற்ற தீவுகளுக்கு அத்தகைய வசதி கூட இல்லை. ஒரு கிணற்றில் இருந்து ஊர்காவற்துறை மற்றும் வேலனைக்கும் வழங்கப்பட்ட நீர் வழங்கலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிராமத்தவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள், சிலர் உப்பு கலந்த தண்ணீரில் குளிக்கின்றார்கள்.
காரைநகரில் வயதான ஒரு பெண் தான் வாரத்திற்கு 300 ரூபாய்க்கு 500 லிட்டர் தண்ணீரை வாங்கி வருவதாகக் கூறினர். "இந்த சூழ்நிலையை நாம் சகித்துக் கொள்ள முடியாது. அடுத்த விநியோகத்தை பெறுவதற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். எங்கள் வாழ்க்கை மிகவும் துயரமானது."
யுத்தத்தால் அழித்த விவசாயப் பகுதியான கிளிநொச்சியில் 82,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் விவசாயிகளுக்கு கோடைகால பயிர்ச்செய்கையை முன்னெடுக்க முடியவில்லை. ஆயிரம் ஏக்கர் நெல் வயல்களுக்கு நீரை வழங்கிய இரணைமடு நீர்ப்பாசன அணைக்கட்டு இப்போது வற்றிவிட்டது. 280 ஏக்கர் அனுமதியின்றி பயிரிடப்பட்டதாகக் குற்றம் சாட்டி, தண்ணீர் எடுப்பதை தடுப்பதற்காக 47 ஏக்கர் நெல் பயிர்களை அரசாங்க அதிகாரிகள் அழித்திருக்கிறார்கள். தண்ணீர் நெருக்கடி தொடர்ந்தால் மீதமுள்ள சாகுபடியும் கூட அழிக்கப்படும் என அரசாங்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் மலையாலபுரம் குளம் வற்றியுள்ளதன் காரணமாக, 40 ஏக்கர் காய்கறி தோட்டங்கள் மற்றும் 20 ஏக்கர் நெல் வயல்களும் அழிந்து போயுள்ளன.
கிளிநொச்சியில் 30 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உடனடியாக நீர் வழங்கப்பட வேண்டும். கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, "இந்த பகுதிகளுக்கு நீர் விநியோகிக்க 5 மில்லியன் ரூபா தேவைப்பட்டது, அரசாங்கம் வெறும் ஒரு மில்லியனையே ஒதுக்கியது," என்றார்.
வடக்கு மற்றும் கிழக்கில் போரின் போது நீர் வசதிகள், அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் அழிந்து போயின அல்லது சேதமாக்கப்பட்டன. கொடூரமான யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தும், இராணுவம் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள அதே வேளை, போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாத குடிசை போன்ற தற்காலிக வீடுகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய அமெரிக்க-சார்பு அரசாங்கமும் சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்காகவே தமது அபிவிருத்தி திட்டங்களை குவிமையப்படுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் சில சோடிப்பு வேலைகளை செய்து, மழைநீரை சேகரிப்பதற்காக வீடுகளில் தாங்கிகளை கட்டிக் கொடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு தலைவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், மாகாணத்தில் போதுமான அளவு தண்ணீர் பவுசர்கள் இல்லை என ஏற்றுக்கொண்டுள்ளார். "எங்களுக்கு 12,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 பவுசர்களும் 500 தண்ணீர் தாங்கிகளும் தேவை" என்று அவர் கூறினார். தமிழ் கூட்டமைப்பு 2013 முதல் மாகாணத்தை ஆளுகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு நீரை விரிவுபடுத்துவதற்கும் நீர் விநியோகத்திற்காக கடல் நீரை சுத்திகரிப்பதற்குமான அரசாங்கத்தின் திட்டங்கள், பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்தன. இந்த திட்டங்கள் இப்போதுதான் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு 2020ஆம் ஆண்டிலேயே நீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம் சுற்றுலா மற்றும் முதலீட்டை ஈர்ப்பதுவும், அந்த பகுதியை மலிவு உழைப்பு களமாக ஆக்குவதுமாகும்.
வறட்சியால் ஏற்பட்ட இந்த சமூகப் பேரழிவிற்கு முக்கிய காரணம் இயற்கை பாதிப்பை விட ஆளும் வர்க்கத்தின் புறக்கணிப்பே ஆகும். குடி நீருக்கே முற்றிலும் அவநம்பிக்கையான நிலை காணப்படும் போது, பயிர்ச்செய்கைக்கு நீர் இல்லாமையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இது உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை இட்டு நிரப்புவதில் ஆளும் வர்க்கத்தின் இயலாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இலங்கையில் இனவாத யுத்தத்தின் செலவு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதில் பாதி பாதுகாப்பு செலவினத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இலாப நோக்கு அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுண்ணி முதலாளித்துவ வர்க்கத்துக்கு மக்களின் சமூக தேவைகள் முதன்மையானது அல்ல.
2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்புகளிலிருந்து இன்னும் மீழவில்லை. வடக்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் கொடுத்த வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முறையிடுகின்றனர். கிழக்கில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படாமல் காடுமண்டிப் போயுள்ளன.
தெற்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டனர். இதற்கு இழிநிலையிலான உள்கட்டமைப்பு முறைகள் மற்றும் அதிவேக வீதிகள் அமைப்பதில் அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளின் தரமின்மையே காரணமாகும். ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் உள்ள மீதொட்டமுல்லவில், பெரும் குப்பை மலை சரிந்ததில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். மக்கள்தொகை நிறைந்த பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களாலேயே இந்த குப்பை மலை உருவாக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த 38 வயதான ஒரு விவசாயி எஸ். விக்னேஸ்வரன், இந்த ஆண்டு அறுவடை எதிர்பார்த்து 2016ம் ஆண்டு பருவகாலத்தில் பல ஏக்கர் விதைத்ததாக தெரிவித்தார். "மழை இல்லாததால் நான் விளைச்சலை இழந்துவிட்டேன். என் பசுக்களுக்கு தின்பதற்கு புல் இல்லை. அவை இறந்துவிட்டால் அது இன்னொரு பேரழிவாகும். அரசாங்கம் 8,500 ரூபாய் அற்ப இழப்பீடு வழங்கியது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். ஆனால் இந்த ஆண்டு, எங்கள் தேவைக்கே அரிசி இல்லை," என்று அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் அரசடியை சேர்ந்த ஒரு விவசாயி கே. சசிகரன், 47, அவர் நான்கு ஏக்கர் பயிரிட்டதாக கூறினார். "நான் 20,000 ரூபாய் குத்தகைக்கு சில நிலங்களை எடுத்துள்ளேன், ஆனால் எந்த விளைச்சலையும் பெற முடியவில்லை. எனக்கு 10 பசுக்கள் உள்ளன, புல் இல்லாததால் அவற்றுக்கு உணவளிக்க முடியாதுள்ளது. அவை மெலிந்து போகின்றன. கடந்த ஆண்டு 15 லிட்டர் பால் கறந்தேன், ஆனால் இப்போது 6 லிட்டர் மட்டுமே கொடுக்கின்றன. என் மாடுகளை காப்பாற்றுவதற்கு நான் திண்டாடுகின்றேன்."
தண்ணீர் இன்றி கருகிப்போன பயிர்களுடன் விவசாயி பரமானந்தம்
ஏ. பரமானந்தம், 63, ஊர்காவற்துறையில் காய்கறி விவசாயி ஆவார். "நாங்கள் வழக்கமாக சுமார் 3,000 கன்றுகளை நடுகின்றோம். வறட்சி காரணமாக இப்போது 250 தாவரங்களை கூட பராமரிக்க முடியாதுள்ளது. கால்நடைகளும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றன. அவை இறந்துவிடுமோ என்று பயப்படுகின்றேன்."