லியோன் ட்ரொட்ஸ்கி - கலாச்சாரமும் சோசலிசமும் - 1927

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே  காணலாம்

Leon Trotsky - Culture and Socialism - 1927

1920களில் சோவியத் ஒன்றியத்தில் தொழில்நுட்ப கலாச்சார வளர்ச்சிக்கும், பரந்தளவில் ஏற்று கொள்ளப்பட்ட கலை மற்றும் ஆன்மீக கலாச்சார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை விளக்கி, கலாச்சாரம் மற்றும் கலை மீதான ஒரு மார்க்சிச அணுகுமுறையின் அடிப்படைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இப்படைப்பு விளக்குகிறது. கலாச்சாரத்தின் பல்வேறுபட்ட உள்ளடக்கங்களை, அதாவது தொழில்நுட்பம் மற்றும் பொருள்சார் கலாச்சாரம், மெய்யியல், இயற்கை விஞ்ஞானங்கள், கலைகள், மானுடவியல் ஆகியவற்றை விவாதிப்பதிலிருந்து ட்ரொட்ஸ்கி இதை ஆரம்பிக்கிறார். “பாட்டாளி வர்க்க கலாச்சாரம்” என்ற பெயரில், அப்பொழுது வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சோவியத் அதிகாரத்துவத்தால் ஊக்கப்படுத்தப்பட்ட கண்ணோட்டங்களுக்கு, அதாவது மனிதகுல வரலாற்றின் முந்தைய சகாப்தங்களில் கலையானது அவற்றின் மீதான ஆபத்தான வர்க்க ஆளுமைகளுக்காக புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களுக்கு எதிராக செயல்பட்ட பின்னர், ஆரம்ப சோவியத் ஒன்றியத்தின் பொருள்சார் யதார்த்தத்துடன், மார்க்சிச இயக்கம் மக்களின் கலாச்சார தரத்தை உயர்த்தும் நோக்கத்திற்காக செயற்பட வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி விளக்குகிறார். இந்த கட்டுரை 1962, இலையுதிர் காலத்தில் நியூ பார்க் பதிப்பகம் வெளியிட்ட Labour Review இல் முதன்முதலாக பிரியன் பியர்ஸ் செய்திருந்த மொழியாக்கத்தின் சற்றே திருத்தப்பட்ட பதிப்பாகும்.

I. தொழில்நுட்பமும் கலாச்சாரமும்

கலாச்சாரம் என்பது உள்நுழைய முடியாத காடுகள், தரிசு நிலங்கள் என்றிருந்ததற்கு மாறாக, அது நன்கு உழப்பட்ட விவசாய நிலமாக ஒருகாலத்தில் குறிப்பிடப்பட்டது என்பதை நாம் எல்லாவற்றிற்கும் முதலில் மீண்டும் நினைவிற் கொள்ள வேண்டும். கலாச்சாரம் இயற்கைக்கு அருகே வைத்துப் பார்க்கப்பட்டது, அதாவது மனித முயற்சியால் என்ன சாதிக்கப்பட்டதோ, அது இயற்கையின் கொடைகளிலிருந்து வேறுபடுத்தப்பட்டது. இவ்வாறு அருகருகே வைத்துப்பார்க்கும் தன்மையானது இன்றும் கூட அடிப்படையில் அதன் பெறுமதியை இழக்காமல் உள்ளது.

மனிதனே ஒரு விலங்கின உயிரினம் தான் என்ற அவனின் இயற்கையான வரலாறு உட்பட, இயற்கையால் வழங்கப்பட்டிருப்பதற்கு முற்றிலும் முரணாக, கலாச்சாரமானது, மனிதனால் அவனுடைய முழு வரலாற்றுக் காலத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது; கட்டமைக்கப்பட்டிருக்கிறது; உய்த்தறியப்பட்டிருக்கிறது; வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. விலங்கின பரிணாமத்தின் ஒரு விளைவாக மனிதனை ஆராயும் விஞ்ஞானம், மனித இன இயல் எனப்படும். ஆனால் விலங்குகளின் உலகிலிருந்து மனிதன் தன்னை வேறுபடுத்திக் கொண்ட கணத்தில் இருந்து - இது கிட்டத்தட்ட, கற்கள், தடிகள் போன்ற பண்டைக்கால கருவிகளை அவன் முதலாவதாக தன்னுடைய கரங்களினால் பற்றிக் கொண்டதிலிருந்தும் மற்றும் அவைகளை தன் உடலின் உறுப்புக்களுடன் ஆயுதங்களாகவும் தரித்துக் கொண்டதிலிருந்தும், அநேகமாக இது நடந்தது - கலாச்சாரத்தின் உருவாக்கமும், திரட்சியும் ஆரம்பமானது. அதாவது, இயற்கையை தன்னகப்படுத்திக் கொள்வதற்கு அல்லது போராடி வெற்றி கொள்வதற்கு தேவையான அனைத்துவித அறிவு, தகமை ஆகியவற்றைப் பெற்றதிலிருந்து ஆரம்பமானது.

கடந்தகால தலைமுறையால் ஒன்று திரட்டப்பட்ட கலாச்சாரம் குறித்து நாம் பேசும்போது, முதன்மையாக கருவிகள், இயந்திரங்கள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் இவை போன்ற வடிவங்களில் அதன் பொருள்சார் வெற்றிகளில் தான் நாம் தவிர்க்கமுடியாமல் தங்கியிருக்கிறோம். இதுதான் கலாச்சாரமா? சந்தேகத்திற்கிடமின்றி, இதுதான் அல்லது அதன் பொருள் சார்ந்த இருப்புக்கள்தான் கலாச்சாரம் - பொருள்சார் கலாச்சாரம். இயற்கையின் அடித்தளங்களில், இது நம் வாழ்வின் அடிப்படையான சுற்றுப்புற சூழலை, நம் அன்றாட வாழ்வை மற்றும் நம் படைப்புத் திறனைத் தோற்றுவிக்கிறது. ஆனால் கலாச்சாரத்தின் பெருமதிப்புடைய பகுதி மனிதனுடைய நனவிலுள்ள அதன் சேமிப்புக்களில் தான் உள்ளது - அதாவது, நம்முடைய சாதனங்கள், பழக்கவழக்கங்கள், செயற்திறன்கள் மற்றும் முந்தைய அனைத்து பொருள்சார் கலாச்சாரத்திலிருந்து வளர்ந்திருந்த நம்முடைய திறமைகளில் தங்கியிருப்பதோடு, அவற்றை மீண்டும் கட்டமைக்கவும் தொடங்குகிறது. அப்படியானால், தோழர்களே, இது உறுதியாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று கருதுவோம்: வாழ வேண்டும் என்ற இயல்புடன், வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவிப்பதற்காக, தன்னுடைய சக்தியை அதிகரிப்பதற்காக மனிதன் நடத்தும் போராட்டத்தில் இருந்து கலாச்சாரம் வளர்கிறது. ஆனால் இந்த அடிப்படையில் தான் வர்க்கங்களும் வளர்கின்றன. இயற்கைக்கு இணங்க நடந்து கொள்ளும் வழிவகையில், அதன் விரோத சக்திகளுடன் நடத்தும் போராட்டத்தில், மனித சமூகம் ஒரு சிக்கல் வாய்ந்த வர்க்க அமைப்பாக வளர்கிறது. சமூகத்தின் வர்க்க அமைப்பு முறை தான் மிக உறுதியாக மனித வரலாற்றின் உள்ளடக்கத்தையும், வடிவத்தையும் நிர்ணயிக்கிறது. அதாவது, அதன் பொருள் சார்ந்த உறவுகள் மற்றும் அவற்றின் கருத்தியல் பிரதிபலிப்புக்களும் தான் நிர்ணயிக்கின்றன. இவ்வாறு கூறுவதன் மூலம், நாம் வரலாற்று ரீதியான கலாச்சாரத்தில் ஒரு வர்க்கத் தன்மை உள்ளது என்றும் கூறுகிறோம்.

அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ-பண்ணையடிமை மற்றும் பூர்ஷ்வா சமூகமும் தமக்கிசைவான கலாச்சாரத்தை உருவாக்குகின்றன: பல கட்டங்களில் இடைமருவு வடிவங்களுடன் ஒரு வேறுபட்ட கலாச்சாரமும் நிலவுகிறது. வரலாற்றுரீதியான சமூகம் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பாக உள்ளது. சமூகத்தின் வர்க்க அமைப்பிற்கு கலாச்சாரம் உதவுகிறது. ஒரு சுரண்டும் சமூகம், இன்னொரு சுரண்டும் கலாச்சாரத்தை உருவாக்குகிறது. அப்படியானால், நாம் கடந்தகால அனைத்து கலாச்சாரத்திற்கும் விரோதமாக இருக்கிறோம் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?
உண்மையில், இங்கே நாம் ஓர் ஆழ்ந்த முரண்பாட்டில் வந்து நிற்கிறோம். மனிதனுடைய முயற்சிகள் மூலம் வெற்றி கொள்ளப்பட்ட, தோற்றுவிக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட ஒவ்வொன்றும், மற்றும் மனிதனின் சக்திகளை உயர்த்த உதவுகின்ற ஒவ்வொன்றும் - கலாச்சாரம் தான். ஆனால் தனிமனிதனை விட, நாம் சமூகத்தை பற்றி கையாளுவதால், அதனுடைய உண்மையான சாராம்சத்தில், கலாச்சாரம் ஒரு சமூக-வரலாற்று இயல்நிகழ்வாக உள்ளது; வரலாற்றுரீதியான சமூகமானது வர்க்க சமூகமாக இருந்ததுள்ளதுடன், அவ்வாறே தொடர்ந்துகொண்டு இருக்கின்றது என்ற நிலையில், கலாச்சாரம் என்பது வர்க்க அடக்குமுறையின் ஓர் ஆதாரக் கருவியாக வெளிப்படுகிறது. மார்க்ஸ் கூறினார்: “ஒரு சகாப்தத்தின் மேலாதிக்கம் செலுத்தும் கருத்துக்கள், அந்த சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆகும்.” இந்தக் கூற்று கலாச்சாரத்திற்கும் முழுமையாக பொருந்தும். ஆயினும், நீங்கள் கடந்த கால கலாச்சாரம் முழுவதையும் கற்றுத் தேர்ந்து இருக்க வேண்டும், இல்லாவிடில் உங்களால் சோசலிசத்தைக் கட்டமைக்க முடியாது என்றே நாங்கள் தொழிலாள வர்க்கத்திடம் கூறுகிறோம். இதை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்?

இந்த முரண்பாடு பற்றி பலர் தடுமாறியுள்ளனர், அவர்கள் அடிக்கடி தடுமாறுகின்றனர், ஏனெனில் இவர்கள் வர்க்க சமூகக் கருத்துருவை மேம்போக்காக, அரைகுறை சிந்தனையாக, அதன் அடித்தளமே உற்பத்தியின் களமாக இருக்கிறது என்பதை மறந்து, அணுகுகின்றனர். இயற்கையுடன் போராடுவதற்கு குறிப்பிட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வர்க்க சமூகமும் வளர்ந்துள்ளது. இந்த வழிமுறைகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையைச் சார்ந்து மாறியுள்ளன. எது மேலும் அடிப்படையானது உள்ளது: ஒரு சமூகத்தின் வர்க்க அமைப்பா அல்லது அதன் உற்பத்தி சக்திகளா? சந்தேகத்திற்கு இடமில்லாமல், உற்பத்தி சக்திகள் தான். ஏனெனில் அவற்றில்தான், குறிப்பிட்ட வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தான், வர்க்கங்கள் வளர்ச்சி அடைந்து, தம்மை மறு ஒழுங்கமைத்துக் கொள்கின்றன. மனிதனால் செயலாக்கம் பெற்ற பொருளாதாரச் செயற்திறனும், அவனுடைய சொந்த இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான வரலாற்றுத் திறமையையும் உற்பத்தி சக்திகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த இயக்க அஸ்திவாரத்தில் தான் வர்க்கங்கள் வளர்கின்றன; அவற்றின் பரஸ்பர உறவுகளானது கலாச்சாரத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றன.

எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வர்க்க அடக்குமுறையின் கருவி மட்டும்தானா? என்பது தான் எங்களை நாங்களே கேட்க வேண்டிய கேள்வியாக உள்ளது. இத்தகைய கேள்வியைக் கேட்பதே அதற்கு உடனடியாக விடை அளிப்பதற்குப் போதுமானதாகும்: இல்லை, தொழில்நுட்பம் மனித குலத்தின் ஓர் அடிப்படை வெற்றி; உண்மையில் இதுவரை அது சுரண்டுவதற்கு ஒரு கருவியாகப் பயன்பட்டுள்ள போதிலும், அதே நேரத்தில் சுரண்டப்படுபவரின் விடுதலைக்கான அடிப்படைத் தேவையாகவும் உள்ளது. இயந்திரம் கூலி-அடிமையை நெரிக்கிறது. ஆனால் கூலி-அடிமை இந்த இயந்திரத்தின் மூலம் தான் சுதந்திரம் அடைய முடியும்.இங்குதான் முழுப் பிரச்சினையின் வேரும் உள்ளது.

இயற்கையின் சக்தியிலிருந்து மனிதனை விடுவிக்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தான் வரலாற்று நிகழ்வுப்போக்கின் உந்து சக்தி என்பதை நாம் மறக்காமல் இருந்தால், ஒற்றுமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்வதன் மூலம் அதனை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்திற்காக, பாட்டாளி வர்க்கமானது மனித குலம் அதன் வரலாற்றுப் போக்கில் வளர்த்துள்ள அறிவு, செயற்திறன் ஆகியவைகளின் ஒன்று திரட்டப்பட்ட அறிவையும் பெற வேண்டும் என்று அப்பொழுது நாம் அறிந்து கொள்வோம்.

“கலாச்சாரம் தொழில்நுட்பத்திற்கு உந்துதல் அளிக்கிறதா அல்லது தொழில்நுட்பம் கலாச்சாரத்தை உந்துகிறதா?”- எனக்கு முன்னால் இருக்கும் குறிப்புக்களில் ஒன்று இந்த கேள்வியை எழுப்புகிறது. இது ஒரு கேள்வியைத் தவறான வகையில் எழுப்புவதாகும். தொழில்நுட்பம் கலாச்சாரத்திற்கு எதிராக நிறுத்தப்படக்கூடாது; அது கலாச்சாரத்தின் மூல காரணமாக இருக்கிறது. தொழில்நுட்பம் இல்லாமல் கலாச்சாரம் இல்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கலாச்சாரத்தை முன்னோக்கி உந்திச் செல்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எழுச்சி பெறும் விஞ்ஞானமும், பொது கலாச்சாரமும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குச் சக்தி வாய்ந்த ஊக்கத்தைக் அளிக்கின்றன. ஆகவே, இங்கே ஓர் இயங்கியல் இடைத் தொடர்பு உள்ளது.

தோழர்களே, தொழில்நுட்பத்திலேயே இயைந்திருக்கும் முரண்பாடு குறித்து ஒரு தெளிவான, எளிமையான உதாரணம் உங்களுக்குத் தேவையென்றால், இரயில்வேக்களை விட சிறந்த ஒன்றை உங்களால் காண முடியாது. ஐரோப்பிய பயணிகள் புகையிரதங்களை ஆராய்ந்தால், நீங்கள் அங்கே “வேறுபட்ட வகுப்புக்கள்” உள்ள புகையிரத பெட்டிகள் இருப்பதைக் காண்பீர்கள். இந்த வகுப்புக்கள் நமக்கு முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் வர்க்கங்களை நினைவுபடுத்துகிறது. முதல் வகுப்பு என்பது சலுகை பெற்ற மேற்தட்டிற்கு, இரண்டாம் வகுப்பு என்பது மத்தியதட்டு முதலாளிகளுக்கு, மூன்றாம் வகுப்பு என்பது குட்டி முதலாளித்துவத்தினருக்கு, நான்காவது பாட்டாளி வர்க்கத்திற்கு - இது முன்பு சரியான காரணத்திற்காகவே நான்காவது அதிகாரம் (fourth estate) என்று அழைக்கப்பட்டிருந்தது. முழுமையாகப் பார்த்தால், இரயில்வே அமைப்புமுறைகள் மனிதகுலத்தின் ஒரு மகத்தான, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப வெற்றியாகும்; இது ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் பூமியின் தோற்றத்தையே பெரிதும் மாற்றிவிட்டது. ஆனால் சமூகத்தின் வர்க்க அமைப்பு முறையானது, போக்குவரத்து சாதனங்களின் அமைப்பு முறையிலும் ஆளுமை செலுத்துகிறது. நம்முடைய சோவியத் இரயில்வே அமைப்புமுறைகள் இன்றும் சமத்துவத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஏனென்றால், அவை கடந்த காலத்திலிருந்து வழிவழியாக பெற்ற பெட்டிகளைப் பயன்படுத்துகின்றன என்பதால் மட்டுமல்லாமல், புதிய பொருளாதாரக் கொள்கை (The New Economic Policy) சமத்துவத்திற்குத் தயாரிப்பு செய்கிறதே தவிர இன்னும் அதை உருவாக்கி விடவில்லை.

புகையிரத அமைப்பு முறைகள் வருவதற்கு முன்னர், நாகரிகம் கடல்களின் கரைகளிலும், பெரிய ஆறுகளின் கரைகளிலும் குவிந்திருந்தது. புகையிரத அமைப்பு முறைகள் முழுக் கண்டங்களையும் முதலாளித்துவ கலாச்சாரத்திற்கு அறிமுகப்படுத்தியது. ரஷ்ய கிராமத்தின் பிற்போக்குத்தனம் மற்றும் புறக்கணிப்புகளுக்கான மிக அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக இல்லையென்றாலும் அடிப்படைக் காரணங்களில் ஒன்று, புகையிரத அமைப்பு முறைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து சாலைகள் இல்லாதது எனலாம். இவ்விதத்தில் நம்முடைய பெரும்பாலான கிராமங்கள் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் உள்ளன. நாம் நம்முடைய மிகப் பெரிய நண்பனையும், அதே நேரத்தில் மிகப் பெரிய எதிரியுமான பாரிய தூரங்களையும் கடக்க வேண்டும். சோசலிசப் பொருளாதாரம் என்பது ஒரு திட்டமிட்ட பொருளாதாரம். எல்லாவற்றையும் விட, ஒரு திட்டமானது தகவல் தொடர்பை (Communication) கருத்தில் கொள்கிறது. போக்குவரத்து சாதனமானது தகவல் தொடர்பு முறைகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு புதிய புகையிரத பாதையும் கலாச்சாரத்திற்கான ஒரு பாதையாக விளங்குகிறது, அதுவே நம்மைப் பொறுத்த வரையில் சோசலிசத்திற்கான ஒரு பாதையாகும். மீண்டும் ஒரு முறை, போக்குவரத்துச் சாதனங்களின் தொழில்நுட்பத்தின் மற்றும் நாட்டின் பொருளாதார செழிப்பின் வளர்ச்சியுடன், புகையிரத அமைப்பு முறையின் சமூகத் தோற்றமும் மாற்றம் பெறும். அதாவது “வகுப்புக்களாக” பிரித்தல் மறைந்து போகும். அக்காலத்தில் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய விமானங்களில் பயணிக்க விரும்புவதற்கு பதிலாக, மக்கள் இரயில் பெட்டிகளிலேயே பயணிக்க விரும்பினால்... ஒவ்வொருவரும் வசதியான பெட்டிகளிலேயே பயணிப்பர்.

மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் - இராணுவவாதத்தின் கருவிகள், அதாவது அழிவின் கருவிகள். இத்துறையில் சமூகத்தின் வர்க்கத் தன்மை குறிப்பாக தெளிவாகவும், இழிவான வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு வெடிக்கும் பொருளானாலும் அல்லது நச்சுப் பொருளாலும் சரி அழிவின் கருவி என்று ஒன்று கிடையாது. அதன் கண்டுபிடிப்பு இயல்பாகவே ஒரு மதிப்புடைய விஞ்ஞான அல்லது தொழில்நுட்ப சாதனையாக இருக்கமுடியாது. வெடிகுண்டுகள் அல்லது நச்சுப் பொருட்களை அழிவிற்கு மட்டும் அல்லாமல், ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தப்பட முடியும். அவை புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் தேடல்களில் புதிய வாய்ப்புக்களை திறந்துவிடுகின்றன.

பாட்டாளி வர்க்கமானது, வர்க்க ஆட்சியின் பழைய கருவியை உடைத்தெறிவதன் மூலமாக மட்டும் தான் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். இந்தப் பணியை வரலாற்றில் இதுவரை செய்யப்படாத விதத்தில் நாம் உறுதியாகச் செய்துள்ளோம். ஆனால் ஒரு புதிய கருவியைக் கட்டமைப்பதில், பழைய அடிப்படைக் கூறுகளை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அல்லது சிலவேளைகளில் கணிசமான அளவிற்குப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கும் நாம் உட்பட்டுள்ளோம் என்பதைக் கண்டுள்ளோம். அரசு அமைப்பின் மேலதிக சோசலிச மறுகட்டுமானம் என்பது தவிர்க்க முடியாமல் பொதுவான அரசியல், பொருளாதார, கலாச்சார பணிகளுடன் இணைந்துள்ளது.

நாம் தொழில்நுட்பத்தை உடைத்தெறிந்து சிதைக்கத் தேவையில்லை. முதலாளித்துவம் நிறுவியுள்ள தொழிற்சாலைகளின் பொறுப்பை தொழிலாள வர்க்கம் எடுத்து தனதாக்கிக் கொள்வதுடன், புரட்சிகர தூக்கிவீசல் நடந்ததுபோல் அதே வடிவத்தில் அதை செய்யும். பழைய சாதனம் நமக்கு இன்றளவும் பயன்பாடு உடையதாக உள்ளது. நாம் ஒன்றும் இந்த “மரபியத்தை” துறந்துவிடவில்லை என்ற உண்மையை அத்தகைய சூழல் தெளிவாகவும், நேரடியாகவும் எடுத்துக்காட்டுகிறது. வேறு எப்படி இது இருக்க முடியும்? இந்த “மரபியத்தை” கைப்பற்றத்தான் புரட்சியே துல்லியமாக நடத்தப்பட்டது. ஆனால் நாம் எடுத்துக் கொண்ட வடிவத்திலுள்ள பழைய தொழில்நுட்பம், சோசலிசத்திற்கு முற்றிலும் பொருந்தாத தன்மையைக் கொண்டுள்ளது. அது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கெட்டிப்படுத்தப்பட்ட ஒழுங்கற்ற நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பல்வேறு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, இலாபத்திற்கான உந்துதல்கள், பல வணிக பிரிவுகளின் சமச்சீரற்ற வளர்ச்சி, பல பிராந்தியங்களின் பிற்போக்குத்தனம், விவசாயத்தின் அளவு குறைந்த தன்மை, மனிதவளங்களை வீணடித்தல் - தொழில்நுட்பத்திலும், இரும்பு, தாமிரம் ஆகியவற்றிலும் இவை அனைத்தும் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. ஆனால் வர்க்க அடக்குமுறைக் கருவி ஒரு புரட்சிகரத் தாக்குதலில் நொருக்கப்பட்டுவிட முடியும் என்றால், ஒழுங்கற்ற முதலாளித்துவ நிலையின் உற்பத்திக் கருவிகள் படிப்படியாகத்தான் மறுகட்டமைக்கப்பட முடியும். பழைய கருவிகளின் அடிப்படையில் மீட்புக்காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதென்பது, இந்த மகத்தான பணியின் கிட்டிய எல்லைக்கு மட்டும் தான் நம்மை இட்டுச் செல்லும். எப்படியும் நாம் அதை முடிவிற்குக் கொண்டு வந்துதான் ஆக வேண்டும்.

II. ஆன்மீக கலாச்சாரத்தின் மரபியம்

ஆன்மீக கலாச்சாரமும், பொருள்சார் கலாச்சாரத்தைப் போன்ற அதே முரண்பாட்டைக் கொண்டுள்ளது. பொருள்சார் கலாச்சாரத்தின் ஆயுதக் கிடங்குகளில் இருந்தும், தொகுப்புக்களில் இருந்தும் நாம் வில், அம்பு, கற்கருவிகள் அல்லது வெண்கலக்கால கருவிகளைச் சுற்றில் விடாமல், மாறாக மிகச் சமீபத்திய தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த கருவிகளை எடுத்துக் கொள்ளுகிறோம் - அதே விதத்தில் தான் நாம் ஆன்மீக கலாச்சாரத்தையும் அணுக வேண்டும்.

பழைய சமூக கலாச்சாரத்தின் முக்கிய கூறுபாடாக மதம் இருந்தது. மனித அறிவு மற்றும் ஒற்றுமைக்கு அது மிக முக்கியமான வடிவமாக இருந்தது; ஆனால் இயற்கைக்கு முன்னால் மனிதனுடைய பெரும்பாலான பலவீனங்களும், சமூகத்திற்குள் அவனுடைய சக்தியற்ற தன்மையும் இவ்வடிவத்தில் தான் வெளிப்படுத்தப்பட்டன. நாம் மதத்தையும், மற்றும் அதனுடன் துணைநிற்கும் அனைத்தையும் முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

மெய்யியல் உடனான நிலைமை வேறுபாடானது. வர்க்க சமூகம் தோற்றுவித்த மெய்யியலில் இருந்து, நாம் இரண்டு விலைமதிப்பற்ற கூறுபாடுகளை உய்த்துணர வேண்டும்: அவை சடவாதமும் இயங்கியலுமாகும். சடவாதம் மற்றும் இயங்கியலின் இயல்பான கூட்டில் இருந்துதான் துல்லியமாக மார்க்சின் வழிமுறை தோன்றியதுடன், அவருடைய நெறி எழுந்தது. லெனினிசத்தின் அஸ்திவாரங்களிலும் இந்த வழிமுறையே தங்கி இருக்கிறது.

விஞ்ஞானம் என்ற சொல்லின் உண்மையான பொருளுக்கு செல்வோமாயின், மனிதகுலம் அதன் நீண்ட வாழ்வில் சேகரித்து வைத்துள்ள மகத்தான அறிவு மற்றும் திறமை ஆகியவற்றின் தொகுப்பினை நாம் எதிர்கொள்கிறோம் என்பது இங்கே மிகவும் தெளிவாகிறது. யதார்த்தத்தை நுண்மையாக அறிதல் என்ற இலக்கைக் கொண்டுள்ள விஞ்ஞானத்தில் பல வர்க்க கலப்படங்கள் உள்ளன என்பதை ஒருவரால் சுட்டிக்காட்ட முடியும், இது உண்மையாகவும் உள்ளது. முற்றிலும் சரியே! புகையிரதம் கூட சிலருடைய சலுகை நிலையையும், மற்றவர்களுடைய வறுமையையும் அடையாளம் காட்டுகிறது என்றால், இது இன்னும் கூடுதலான வகையில் விஞ்ஞானத்துக்கும் பொருந்தும். அதன் உள்ளடக்கம் புகையிரத பெட்டிகளைக் கட்டுவதற்குப் பயன்படும் உலோகம் மற்றும் மரத்தைவிட அதிக வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் இயற்கை சக்திகளை முற்றிலும் தன்னகப்படுத்துவதற்காக, இயற்கையை அறிய வேண்டிய தேவையினால் விஞ்ஞானத்தின் படைப்பாற்றல் அடிப்படையில் ஊட்டம் பெறுகிறது என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். இயற்கை விஞ்ஞானங்களில் கூட வர்க்க நலன்கள் சில தவறான போக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளன, தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றபோதிலும், இந்த பொய்ம்மைப்படுத்தல் கூட தொழில்நுட்ப வளர்ச்சியை நேரடியாகத் தடுக்கும் விதத்தில் உள்ள எல்லைகளின் வரம்பிற்குட்பட்டுள்ளன. இயற்கை விஞ்ஞானங்களை நீங்கள் வேரிலிருந்து ஆராய்ந்தால், அடிப்படையான உண்மைகளைச் சேகரிப்பதிலிருந்து உயர்ந்த மற்றும் மிகச் சிக்கலான பொதுக் கருத்துக்கள் வரை, மிக அனுபவபூர்வமான விஞ்ஞான ஆய்வானது, அதன் பொருள்வகைக்கும், உண்மைக்கும் இடையே மிக நெருக்கமான மற்றும் மிக தெளிவான முடிவுகளை அளிக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். பொதுமைப்படுத்தப்படும் துறை (Generalizations of field) பரந்திருந்தால், இயற்கை விஞ்ஞானமானது மெய்யியல் பிரச்சினைகளுக்கு மேலும் நெருக்கமாக அருகே வருவதுடன், வர்க்கக் கருத்துக்களின் செல்வாக்கிற்கும் அது கூடுதலாக இயைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

சமூக விஞ்ஞானங்கள், “மனித இனவியல்” என்று அழைக்கப்படுபவைகளிடம் வரும்போது பருப்பொருள்கள் (Matters) இன்னும் சிக்கல் வாய்ந்தவையாகவும், மோசமாகவும் உள்ளன. இங்கும் கூட, என்ன உள்ளது என்பதை அறியும் விரும்பும் அடிப்படையில் இயங்குகின்றது. இதனால், போன போக்கில், நமக்கு மிகச் சிறப்பான தொல்சீர் பூர்ஷ்வா பொருளாதார வல்லுனர்களின் சிந்தனைக் கூடம் கிடைத்தது. ஆனால் இயற்கை விஞ்ஞானத்தை விட இன்னும் நேரடியாகவும், அவசியமானதாகவும் சமூக விஞ்ஞானங்களில் உணரப்படும் வர்க்க நலன், விரைவிலேயே முதலாளித்துவ சமூகத்தில் பொருளாதார சிந்தனை வளர்ச்சியை நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும், இத்துறையில் பிறரை விட கம்யூனிஸ்டுக்களாகிய நாம் சிறப்பான தயார் நிலையில் உள்ளோம். தங்களைத்தாங்களே முதலாளித்துவ விஞ்ஞானத்தின் அடித்தளத்தில் இருத்திக்கொண்டும், திறனாய்வு செய்தும், தொழிலாள வர்க்கம் தோற்றுவித்த வர்க்கப் போராட்டத்தினால் விழிப்புணர்வு பெற்ற சோசலிச தத்துவவாதிகள் - மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தமது படைப்புக்களில், மிகச் சக்தி வாய்ந்த வரலாற்று சடவாத வழிவகையையும், மூலதனத்தில் (Capital) அதன் இணையற்ற பயன்பாட்டையும் தோற்றுவித்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பொருளாதாரம் மற்றும் சமூகவியலின் துறைகளில் முதலாளித்துவக் கருத்துக்களின் செல்வாக்கிற்கு எதிராக நாம் பாதுகாப்பாக உள்ளோம் என்ற பொருளை நிச்சயமாக இது தராது. பழைய அறிவின் “பொக்கிஷப் பெட்டகங்களில் இருந்து” மிக ஜனரஞ்சக கதேட சோசலிச* மற்றும் மாற்றங்களை விரும்பாத ஜனரஞ்சகவாத போக்குகள் வெடித்தெழுந்து நம்முடைய அன்றாட வழக்கங்களின் ஒவ்வொரு கட்டத்திலும், தமக்கென இருந்த இடைமருவுகாலத்தின் முரண்பட்ட மற்றும் ஒழுங்குமுறையற்ற உறவுகளில் இவை விளைநிலங்களைத் தேட முற்படுகின்றன. ஆனால் இந்தப் பிரிவிலும் நாம் லெனினுடைய படைப்புக்களால் சரிபார்க்கப்பட்ட, செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சிசத்தின் மாற்ற முடியாத அளவு கோல்களைக் கொண்டிருக்கிறோம். அவை இன்றைய அனுபவங்களுடன் எங்களை நாங்களே குறைவாக கட்டுப்படுத்திக் கொண்டு, பரந்தளவில் உலகெங்கிலும் உள்ள பொருளாதார வளர்ச்சி முழுவதையும் நாம் தழுவினால், அதன் அடிப்படை போக்குகளை ஊகத்தையொட்டிய மாற்றங்களில் இருந்து பிரித்தால், ஜனரஞ்சக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் சமூக விஞ்ஞானவாதிகள் மீது நாம் காணும் வெற்றி இன்னும் உறுதியாக இருக்கும்.

* கதேட சோசலிஸிட்டுகள்-1870களில் ஜேர்மனில் தோன்றிய சீர்திருத்தவாத போக்குகள். இந்தப்போக்கின் ஆதரவாளர்கள் பின்னர் ஜேர்மன் பாராளுமன்றத்தில் சோசலிஸ்டுகளுக்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சட்டம், அறநெறி, பொதுவான சிந்தனைப் போக்கு ஆகிய பிரச்சினைகளை பொறுத்தவரை, முடியுமானால், பொருளாதாரத் துறையில் இருப்பது போல் முதலாளித்துவ விஞ்ஞானத்தின் நிலைமை இன்னும் கூடுதலாக வருந்த வேண்டிய நிலையில் உள்ளது. டஜன் கணக்கான உபதேச வகை குப்பைகளைப் படித்த பின்னர், ஒரு சிறிய அளவுதான் முத்துப்போன்ற உண்மையான அறிவைக் காண்பதற்கு முடியும்.

இயங்கியலும் சடவாதமும் உலகைப் பற்றிய மார்க்சிச அறிகையின் அடிப்படைக் கூறுபாடுகளாக உள்ளன. ஆனால் இதை எந்த அறிவுத்துறையிலும், ஒரு பொதுவான சிறப்புத் திறவுகோல் போல் பயன்படுத்தலாம் என்ற உட்குறிப்பை இது கொடுக்காது. இயங்கியலை உண்மைகள் மீது புகுத்த முடியாது, அது, உண்மையில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதாகும்; அது உண்மைகளின் இயல்பு மற்றும் வளர்ச்சியில் இருந்து அடையப்படுவதாகும். கணக்கிலடங்கா விடயங்களில் பெரும் ஆற்றலுடன் உழைத்ததின் விளைவுதான், உழைப்பின் மதிப்பு என்னும் கருத்தாய்வை பொருளாதாரத்தில் இயங்கியல் முறையைக் கட்டியெழுப்புவதற்கான திறமையை மார்க்சிற்கு அளித்தது. மார்க்சின் வரலாற்றுரீதியான வேலைகள், அவரின் பத்திரிகை கட்டுரைகளும் கூட, இதே முறையில் தான் படைக்கப்பட்டுள்ளன. இயங்கியல் சடவாதத்தை, அதன் உள்ளிருந்தே, பெரும் தேர்ச்சி அடைந்த பின்னர் தான், ஒருவரால் புதிய துறைகளில் அதை பயன்படுத்த முடியும். முதலாளித்துவ விஞ்ஞானத்தை தூய்மைப்படுத்தப்படுவதற்கு முதலாளித்துவ விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெறுவதால் மட்டுமே முடியும். முறையற்ற வெற்றுவிமர்சனம் அல்லது அப்பட்டமான கட்டளையிடல் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது. இங்கு ஆழமான மறு ஆக்கத்துடன், உய்த்துணர்தலும் பயன்படுத்துதலும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்கின்றன. நாம் வழிமுறையைக் கொண்டிருக்கிறோம், ஆனால் இன்னும் பல தலைமுறைகளுக்குச் செய்ய வேண்டிய பணியும் உள்ளது.

விஞ்ஞானம் பற்றிய மார்க்சிச திறனாய்வு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது முற்றிலும் துதிபாடுதல் அல்லது பமுசோவிசம் என்ற தன்மைக்கு இழிந்துவிடும்.[1] உதாரணத்திற்கு உளவியலை எடுத்துக் கொள்வோம். பவ்லோவின் பிரதிபலிப்பியல் (reflexology) பற்றிய சிந்தனைகள் இயங்கியல் சடவாதத்தின் வழிவகைகளைத்தான் முற்றிலும் பின்பற்றுகிறது. உடற்கூறுபாட்டிற்கும் உளக்கூறுபாட்டிற்கும் இடையே உள்ள சுவரை அது அனைத்து காலத்திற்கும் அழித்துவிடுகிறது. மிக எளிமையான பிரதிபலிப்பு உடல்கூறுபாடாக உள்ளது. மேலும் பிரதிபலிப்புகளின் அமைப்புமுறை நமக்கு “முழு நனவை” அளிக்கிறது. உடற்கூறுபாட்டு அளவின் திரட்சி ஒரு புதிய “உளவியல்” பண்பை அளிக்கிறது. பவ்லோவின் பயிலகத்தின் முறை பரிசோதனை களமாகவும், கடுமையானதாகவும் உள்ளது. பொதுவாகக் கூறப்படும் கருத்துக்கள் - ஒரு நாயின் உமிழ்நீரில் இருந்து, கவிதை வரை - படிப்படியாக வளர்ச்சி அடைந்தவையாகும். அதாவது, (அதன் சமூகப் பொருளுரைக்கு அல்லாமல்) அதன் உளவியல் இயக்க முறைக்கு. ஆனால் கவிதைக்கு இட்டுச் செல்லும் பாதைகள் குறித்து கண்டறியப்படவில்லை என்பது உண்மைதான்.

வியன்னாவின் உளவியல் பகுப்பாய்வாளர் பிராய்டின் (Freud) பயிலகம், பிரச்சினைக்கு வேறுவித அணுகுமுறை ஒன்றைக் கொண்டுள்ளது. மிகச் சிக்கல் வாய்ந்த, நேரிய உளவியல் நிகழ்போக்கிற்கு உந்துதல் கொடுக்கும் சக்தி உடற்கூற்றின் தேவைதான் என்பதை அது முன்கருத்தாகக் கொண்டுள்ளது. இது மிக அதிகமான வலியுறுத்தலை ஏனைய கூறுபாடுகளை விட்டுவிட்டு பாலியல் கூறுபாட்டின் மீது அதிக கவனம் செலுத்துகிறதோ இல்லையோ என்ற வினாவை ஒதுக்கிவைத்து விட்டுப் பார்த்தால், இப்பொதுத் தன்மையில் அது சடவாதம் ஆகும். ஏனெனில் இது ஏற்கனவே சடவாத வரம்பிற்குள் ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. ஆனால் உளப் பகுப்பாய்வாளர் முழு நனவுப் பிரச்சினையை பரிசோதனை ரீதியாக அணுகவில்லை, அதாவது கீழ்நிலை நிகழ்வுகளில் இருந்து உயர்ந்த தன்மைக்கோ அல்லது எளிய பிரதிபலிப்பு செயலில் இருந்து மிகச் சிக்கல் வாய்ந்த செயல்களுக்கோ அணுகவில்லை. மாறாக இந்த இடைப்பட்ட படிநிலைகள் அனைத்தையும் மதக் கற்பனை, இசைக் கவிதை அல்லது கனவு மற்றும் உளத்தின் (psyche) உடற்கூறு அஸ்திவாரங்களில் இருந்து ஒரே வீச்சில் மேலிருந்து கீழாக பாய்ந்து கடக்க முனைகிறார்.

உளம் (psyche) சுதந்திரமானது என்றும், “ஆன்மா” ("soul") என்பது கீழே முடிவற்ற ஒரு கிணறு போன்றது என்றும் கருத்துவாதிகள் கற்பிக்கின்றனர். பவ்லோவ், பிராய்ட் இருவருமே உடற்கூறு “ஆன்மாவின்” கீழுள்ளது என்கின்றனர். ஆனால், ஒரு முத்துக் குளிப்பவர் போல் பவ்லோவ் (Pavlov) கீழ்ப்பகுதிக்கு இறங்கி பெரும் முயற்சியுடன் கிணற்றை கீழிருந்து மேல் வரை ஆராய்கிறார். இதற்கு மாறாக பிராய்ட் (Freud) கிணற்றிற்கு மேல் நின்று ஆழ்ந்த ஊடுருவும் பார்வையுடன், எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் சகதி நீரின் ஆழங்களின் இறுதிக் கோடுகளை பற்றியெடுக்க அல்லது ஊகிக்க முயல்கிறார். பவ்லோவின் வழிவகை பரிசோதனை முறையாகும். பிராய்டின் வழிவகை ஊக முறையாகும், சில நேரங்களில் பெரும் ஆச்சரியமானதாகவும் உள்ளது. உளவியல் பகுப்பாய்வுமுறையை மார்க்சிசத்துடன் “பொருத்தமற்றது” என்று அறிவித்து, பிராய்டிசத்திலிருந்து ஒதுங்குவது என்பது மிக எளிது, அல்லது இன்னும் துல்லியமாகக் கூறவேண்டும் என்றால் சுலபமானதுமாகும். ஆனால் எப்படியும் பிராய்டிசத்தை ஏற்க வேண்டும் என்னும் கட்டாயம் நமக்கு இல்லை. அது ஆராய்ச்சியில் இருக்கும் புனைவாகும்; சந்தேகத்திற்கிடமின்றி அது சில முடிவுகளையும், ஊகங்களையும் அளிக்கிறது, அவை சடவாத உளவியல் வகையில் செல்கின்றன. நாளடைவில் பரிசோதனை வழிமுறையும் சரிபார்த்தலுக்கே இட்டுச் செல்லும். ஆனால் மற்ற பாதையின் மீது தடைவிதிப்பதற்கு நம்மிடம் ஆதாரங்களோ உரிமையோ இல்லை; இது சற்றே நம்பிக்கைக் குறைவாக இருந்தாலும் கூட, அது பரிசோதனைப் பாதையால் எட்டப்படும் முடிவுகளை முன்கூட்டியே எதிர்நோக்க தொடர்ந்து முயல்கிறது, ஆனால் இது மிக மெதுவாக நடக்கிறது.[2}

இந்த உதாரணங்கள் மூலம், ஓரளவிற்கேனும், நம் விஞ்ஞான மரபியத்தின் பன்முகத் தன்மையையும், அதை தொழிலாள வர்க்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு உள்ள வழிவகைகளில் உள்ள சிக்கல்களையும் காட்ட முற்பட்டேன். பொருளாதாரக் கட்டமைப்பில் விடயங்கள் கட்டளையால் முடிவெடுக்கப்படுவதில்லை என்றால், மேலும் நாம் “வர்த்தகம் செய்ய” கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், பின் விஞ்ஞானத்தில், அப்பட்டமான ஆணை எதையும் வழங்காது, மாறாக தீமையையும், சங்கடத்தையும் தான் அளிக்கும். இங்கு நாம் “எப்படிக் கற்பது என்பது பற்றி கற்கவேண்டும்.”

உலகில் தன்னை நோக்குநிலைப்படுத்திக் கொள்வதற்கான வழிவகைகளில் கலையும் ஒன்றாகும்; இவ்விதத்தில் கலையின் மரபியமானது விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் மரபியத்தைவிட மாறுபட்டது அல்ல - அதேபோல் குறைவான முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், விஞ்ஞானத்தைப் போலன்றி, கலை உலகை அறியும் ஒரு வடிவம், அது ஒரு விதிகளிலான அமைப்பு அல்ல. ஆனால் தோற்றங்களின் தொகுப்பாகவும், அதே நேரத்தில் சில உணர்வுகள் மற்றும் மனநிலை உணர்வுகளைத் தூண்டும் ஒரு சாதனமாக உள்ளது. கடந்த நூற்றாண்டுகளின் கலை, மனிதனை அதிக சிக்கல் நிறைந்ததாகவும், வளைந்து கொடுக்கும் தன்மையை உடையவனாகவும் செய்து, அவனுடைய உளத்தை உயர் மட்டத்திற்கு உயர்த்தி, அவனது மனத்தை பல விதங்களிலும் செழிப்புடையதாகச் செய்துள்ளது. இந்தச் செழிப்பானது கலாச்சார வெற்றியின் விலைமதிப்பற்ற தன்மையாக இருக்கிறது. எனவே பழைய கலையில் தேர்ச்சி அடைதல் என்பது ஒரு புதிய கலையைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான முன்னிபந்தனை என்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய சமூகத்தைக் கட்டமைப்பதற்கும் தேவையானது; ஏனெனில் கம்யூனிசத்திற்கு மிக அதிக வளர்ச்சி உடைய உளத்தைக் கொண்ட மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் உலகின் கலைத் திறன் அறிகையால் எம்மை செழுமையாக்குவதற்கான திறன் பழைய கலைக்கு இருக்கிறதா? ஆம், அதற்கு இருக்கிறது. இக்காரணத்தினால் தான் அது துல்லியமாக நம் உணர்வுகளுக்கு உரமூட்டி அவற்றைச் செழிக்க வைக்கும் திறனைக் கொண்டுள்ளது. பொறுப்பற்ற முறையில் பழைய கலையை நாம் கைவிட்டால், உடனடியாக நாம் ஆன்மாவில் வறியவராகத்தான் போவோம்.

கலை சில மனநிலைக்கு உணர்ச்சி ஊட்டுவதையே அதன் இலக்காக கொண்டுள்ளது, ஆனால் உண்மையை உய்த்தறிவதற்கு அல்ல என்ற போக்கு இன்று இங்குமங்குமாக நம்மைச்சுற்றி காணமுடியும். எனவே இந்த முடிவுரை: பிரபுக்கள் அல்லது பூர்ஷ்வாக்களுடைய கலையினால் என்ன விதமான உணர்வுகள் நம்மை பாதித்திருக்க முடியும்? இது அடிப்படையிலேயே தவறாக உள்ளது. அறிகையின் ஒரு சாதனம் என்ற முறையில், கலையின் முக்கியத்துவம்-வெகுஜனங்களுக்காக என்று மட்டும் இல்லாமல், ஆனால் குறிப்பாக அவர்களுக்காகவும்-இதன் “புலனுணர்ச்சி” முக்கியத்துவத்தை விட குறைந்துவிடவில்லை. வீரம் செறிந்த கவிதை மட்டும் இல்லாமல், கற்பனைக் கதை, பாடல், பழமொழி, மக்களின் பாட்டுக்களும் தோற்றவகைகளில் நமக்கு அறிகையை அளிக்கின்றன; அவை கடந்த காலத்தை ஒளியூட்டி, நம் அனுபவத்தைப் பொதுமைப்படுத்த செய்கின்றன, நம் தொடுவானங்களை விரிவாக்குகின்றன மற்றும் இம்முறையில் சில “உணர்வுகளை” தூண்டும் திறனையும் பெற்றுள்ளன. இது பொதுவாக அனைத்து இலக்கியத்திற்கும் பொருந்தும், பெரும் காப்பியங்களுக்கு மட்டுமில்லாமல் இசைக் கவிதைக்கும் பொருந்தும். இது ஓவியத்திற்கும் சிற்பக்கலைக்கும் கூட பொருந்தும்.

ஒரு குறிப்பிட்டவிதத்தில், இசை ஒரே விதிவிலக்காக உள்ளது; இதன் தாக்கம் மிகச் சக்தி வாய்ந்தது; ஆனால் ஒருபக்க சார்புடைடையது. இசை கூட இயற்கையின், அதன் ஒலி மற்றும் தாளங்களின் ஒரு குறிப்பிட்ட வகையில் அறிகையை (cognition) அடிப்படையாகக் கொண்டது என்பது உண்மையே. ஆனால் இங்கு அறிகை என்பது ஆழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது, அதையொட்டி இயற்கையின் தூண்டல்களின் விளைவுகள் மனிதனுடைய நரம்புகள் வழியாக முறிவடைகிறது; அதையொட்டி இசையே ஒரு தன்னிறைவு கொண்ட “வெளிப்பாடாக” செயல்படுகிறது. அனைத்துவிதக் கலைகளையும் இசைக்கு ஒப்ப, “தொற்றும்”* ("Infection") கலை என்ற விதத்தில் கொண்டு வர பலமுறை முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. அவை எப்போதுமே கலையில் காரணம் காணும் பங்கைக் குறைக்கும் முக்கியத்துவத்தைக் கொண்டு, ஒழுங்கற்ற உடல் கூற்றுத்தன்மைக்கு ஆதரவாக உள்ளன. இத்தன்மையில் அவை பிற்போக்குத்தனமாக இருந்தன, இருக்கின்றன… இன்னும் மோசமான விதத்தில், “கலையின்” அத்தகைய படைப்புக்கள் காட்சிகளில் அறிகையையும் அளிக்கவில்லை, கலைநய “தொடர்வையும்” அளிக்கவில்லை; அவை மிகவும் பயனற்ற பாசாங்குத்தனங்களை முன்வைக்கின்றன. அத்தகைய படைப்புக்களை நாம் ஒன்றும் குறைவாக வெளியிடுவதில்லை, துரதிருஷ்டவசமாக அவை மாணவர்களின் கலைப் பயிலக ஏடுகளில் மட்டுமில்லாமல், பல ஆயிரக்கணக்கான பிரதிகளாகவும் காணக்கிடக்கின்றன…

*இங்கு ட்ரொட்ஸ்கி, டோல்ஸ்டோயின் கருத்தான கலை என்பது உணர்வை சமூகமயமாக்கும் ஒரு வழிமுறை என்பதற்கு எதிராக திரும்புகின்றார்.

கலாச்சாரம் என்பது ஒரு சமூக நிகழ்வுபோக்கு. இக்காரணத்திற்காகவே, மக்களிடையே தொடர்பிற்கான ஒரு கருவியான மொழி, அதன் மிக முக்கியமான கருவியாக உள்ளது. மொழியின் கலாச்சாரமே, கலாச்சாரத்தின் அனைத்து துறைகளுடைய வளர்ச்சிக்கும் மிக முக்கிய நிபந்தனையாகும், குறிப்பாக விஞ்ஞானத்திலும், கலையிலும். முந்தைய அளவீட்டு கருவிகளில் திருப்தி இல்லாமல், தொழில்நுட்பம் புதிய கருவிகளை, மைக்ரோமீட்டர்கள், வோல்ட்மீட்டர்கள், இன்னும் பலவற்றை கூடுதலான துல்லியத் தன்மையை அடைவதின் நோக்கத்திற்காக படைத்தது போல், மொழித் துறையிலும் தக்க சொற்களைத் தேர்ந்தெடுக்கும் திறன், அவற்றை உரிய முறையில் இணைத்துப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றிற்கு சிறந்த துல்லியம், தெளிவு, தீவிரம் ஆகியவற்றுடன் நமக்கும் இடைவிடா, முறையான, கடும் உழைப்பு தேவைப்படுகிறது. இத்தகைய பணிக்கு அடிப்படை, கல்வியறிவற்ற நிலை, அரைகுறைக்கல்வி அல்லது குறைந்த தரமுடைய கல்வி இவற்றிற்கு எதிரான போராட்டம் தேவையாகும். இப்பணியில் அடுத்த கட்டம் தொல்சீர் ரஷ்ய இலக்கியத்தில் தேர்ச்சி பெறுவதாகும்.

ஆம், வர்க்க ஒடுக்குமுறைக்கு கலாச்சாரம் என்பது முக்கிய கருவியாக இருந்துள்ளது. ஆனால் கலாச்சாரம், அது மட்டுமே, சோசலிச விடுதலைக்கான கருவியுமாகவும் மாறமுடியும்.

III நம் கலாச்சார முரண்பாடுகள்

நகரமும், கிராமப்புறமும்

நம்முடைய நிலைப்பாட்டில் பிரத்தியேக தன்மை என்னவெனில் -முதலாளித்துவ மேற்கிற்கும் காலனித்துவ-விவசாய கிழக்கிற்கும் இடையிலான ஒரு சந்தியில் தான்- நாம் முதன்முதலாக ஒரு சோசலிசப் புரட்சியை நடத்தினோம். மகத்தான பின்தங்கிய நிலைமை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் மரபியத்தைக் கொண்ட ஒரு நாட்டில் முதன்முதலாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டுள்ளது. இதனால் சைபீரிய நாடோடி வாழ்க்கை முதல், மாஸ்கோ அல்லது லெனின்கிராட் பாட்டாளி வர்க்கம் வரையிலான பல நூற்றாண்டுகள் வரலாறு நம்முடன் உள்ளது. எமது சமூக வடிவங்கள் சோசலிசத்திற்கான இடைமருவும் தன்மையில் இருப்பவை. எனவே அவை முதலாளித்துவ வடிவங்களைவிட கணக்கிடமுடியாத அளவிற்கு உயர்ந்தவையாகும். இவ்விதத்தில் நாம் நம்மை உலகில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ள நாடு என்று கருதிக் கொண்டால், அது நியாயம்தான். ஆனால் பொருள்சார் அல்லது வேறுபிற கலாச்சாரத்தின் அஸ்திவாரங்களில் தங்கியிருக்கும் நம்முடைய தொழில்நுட்பம், முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளுடன் ஒப்பிடும்போது அசாதாரணமான முறையில் பின்தங்கியதாகும். இங்குதான் நமது தற்போதைய நிஜத்தின் அடிப்படை முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டிலிருந்து விளையும் வரலாற்றுப் பணி, தொழில்நுட்பத்தை சமூக வடிவமைப்புத் தரத்திற்கு உயர்த்துவதில் உள்ளது. இதை நாம் செய்ய முடியாவிட்டால், எமது சமூக அமைப்புமுறையானது தவிர்க்க முடியாமல் நமது தொழில்நுட்ப பின்தங்கிய நிலைமையின் தரத்திற்குச் சரிந்துவிடும். ஆம், நமக்கான தொழில்நுட்ப நிகழ்முறையின் முழு முக்கியத்துவத்தையும் அறிவதன் பொருட்டு, நாம் நம்மிடமே வெளிப்படையாகக் கூறிக் கொள்ள வேண்டும்: நம்முடைய வடிவமைப்பின் சோவியத் வடிவத்திற்குத் தேவையான ஆக்கபூர்வமான தொழில்நுட்பத்துடன் நம்மை நம்மால் இணைத்து கொள்ள முடியவில்லை என்றால், பின் சோசலிசத்திற்கு மாற்றத்தை அடையும் வாய்ப்பை நாம் ஒதுக்கி வைத்து விடுவோம்; மீண்டும் முதலாளித்துவத்திற்கு திரும்பிவிடுவோம் - அதுவும் எத்தன்மையானது? பகுதி-நில அடிமைத்துவ, பகுதி காலனித்துவ முதலாளித்துவத்திற்கு. தொழில்நுட்பத்திற்கான போராட்டம் நம்மைப் பொறுத்தவரை சோசலிசத்திற்கான போராட்டமாகும். இதில்தான் எமது கலாச்சாரத்தின் முழு எதிர்காலமும் பிரித்து எடுக்கப்படமுடியாமல் பின்னிப் பிணைந்துள்ளது.

இங்கு நம்முடைய கலாச்சார முரண்பாடுகள் பற்றிய ஒரு புதிய, மிக வெளிப்படையான உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சில நாட்களுக்கு முன் நம்முடைய செய்தித்தாள்களில், லெனின்கிராடிலுள்ள நமது பொது நூலகம் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பதாக ஒரு குறிப்பு வெளியானது. இப்பொழுது அங்கு 4,250,000 புத்தகங்கள் உள்ளன! ஒரு நியாயமான பெருமித உணர்வு தான் நம்முடைய முதல் புலனுணர்ச்சியாக இருக்கிறது: நம்முடைய நூலகம் உலகிலேயே முதலாவது இடத்தில் உள்ளது! இந்த சாதனையில் நாம் எவ்வகையில் கடமைப்பட்டுள்ளோம்? தனியார் நூலகங்களிலிருந்த நூல்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டோம் என்பது உண்மைதான். தனியார் உடைமைகளைத் தேசியமயமாக்கியதில், நாம் மிகுந்த செறிவுடைய கலாச்சார நிறுவனத்தைத் தோற்றுவித்துள்ளோம். இது அனைவராலும் அடையப்பட முடியும். இந்த எளிய உண்மை, சோவியத் அமைப்பின் பெரும் நலன்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்குகிறது. அதே நேரத்தில், வேறெந்த ஐரோப்பிய நாட்டிலும் இல்லாத அளவிற்கு நம் நாட்டில் கல்வியறிவின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது என்ற உண்மையில், நம்முடைய கலாச்சார பின்தங்கிய தன்மை வெளிப்படுகிறது. நம்முடைய நூலகம் உலகத்திலேயே முதலாவதாக உள்ளது, ஆனால் இன்னமும் கூட நம்முடைய மக்களில் ஒரு சிறுபான்மையினர் படிக்க இயலாதவர்களாக உள்ளனர். இப்படித்தான் அநேக இடங்களிலும் உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறை பிரமாண்டமாக உள்ளது, ஆனால் Dneprostroi, the Volga-Don Canal போன்ற பெரும் திட்டங்கள் வெகு தூரத்தில் உள்ளன - விவசாயிகள் பழைய கருவிகளைக் கொண்டு கதிர் அறுக்கின்றனர். நம்முடைய திருமண உறவுச்சட்டங்கள் ஒரு சோசலிச உணர்வில் நிறைந்துள்ள போதிலும், இன்னமும் குடும்ப வாழ்வில் அடித்தல் என்பது பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இவையும் பிற முரண்பாடுகளும் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையிலான சந்திகளில் இருக்கும் நம்முடைய கலாச்சாரத்தின் முழு வடிவமைப்பிலிருந்து விளைகின்றன.

நகரத்தின் மீது கிராமத்தின் அதீத தாக்கம், தொழில்துறையின் மீது விவசாயத்தின் தாக்கம் ஆகியவையே நம்முடைய பின்தங்கிய நிலைமையின் அடித்தளமாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, மிகப் பழமையான கருவிகள் மற்றும் உற்பத்தி சாதனங்களின் ஆதிக்கத்திற்குள் கிராமங்கள் உட்பட்டுள்ளன. வரலாற்றுரீதியான பண்ணையடிமைமுறை பற்றி நாம் பேசும்போது, பண்ணை உறவுகள், விவசாயிக்கும் நிலச்சொந்தக்கார மற்றும் ஜார் மன்னரின் அதிகாரிக்கும் இடையிலான உறவு குறித்து முதன்மையாக நாம் சிந்திக்கின்றோம். ஆனால், தோழர்களே, பண்ணையடிமை முறைக்கு அதனினும் ஆழமான அடித்தளம் உண்டு. மனிதன் நிலத்திற்குக் கட்டுண்டு இருப்பதே அது, இந்த கூறுகளில் தான் விவசாயி முழுமையாக சார்ந்திருக்கிறார் நீங்கள் க்ளெப் உஸ்பென்ஸ்கியைப் படித்துள்ளீர்களா? இளைய தலைமுறை அவர் நூல்களைப் படிப்பதில்லை என்று நான் அஞ்சுகிறேன். நாம் அவருடைய நூல்களை, குறைந்தது அவருடைய சிறந்த படைப்புக்களையாவது, மறு பதிப்பு செய்ய வேண்டும, அவர் சில அரிய படைப்புக்களைச் செய்துள்ளார். உஸ்பென்ஸ்கி ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர். அவருடைய அரசியல் வேலைத்திட்டம் முற்றிலும் கற்பனாவாதமானது. ஆனால் கிராமத்தைப் பற்றி எழுதும் உஸ்பென்ஸியோ மிகச் சிறந்த கலைப் படைப்பாளி என்பது மட்டுமில்லாமல், குறிப்பிடத்தக்க வகையில் யதார்த்தவாதியாகவும் விளங்குகிறார். நீங்கள் குறைந்தது அவருடைய Power of the Land என்னும் புத்தகத்தையாவது படிக்க வேண்டும். உஸ்பென்ஸ்கியைப் பொறுத்தவரை, கலைத்துவம் நிறைந்த உள்ளுணர்வு மார்க்சிச வழிவகைக்கு பதிலாக உள்ளது. அதன் விளைவுகளைக் காணும்போது, பல விதங்களில் அத்துடன் போட்டியிடுகிறது. இந்தக் காரணத்திற்காகத்தான் உஸ்பென்ஸ்கி என்னும் கலைஞர் ஜனரஞ்சக உஸ்பென்ஸ்கியுடன் அழிந்துவிடும் இறுதிப் போராட்டத்தில் எப்பொழுதும் பின்னிப் பிணைந்து நிற்கிறார். இப்பொழுதும்கூட விவசாயியுடைய வாழ்வில் எஞ்சியுள்ள சக்திவாய்ந்த பண்ணையடிமை முறைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள விரும்பினால், குறிப்பாக பல நேரமும் நகர வாழ்வில் சிதறி விழும் அவருடைய குடும்ப உறவுகளிலிருந்து, நாம் கற்க முடியும். இப்பொழுது திருமணச் சட்டவாக்கம் பற்றி வெளிவந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளின் விவாதங்கள் பற்றி மிகக் கவனமாகக் கேட்டாலே போதும்.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் முதலாளித்துவம் தொழில்துறைக்கும் விவசாயத்திற்கும் இடையே, சிறுநகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே முரண்பாடுகளை மிகத் தீவிரமாக்கியுள்ளது. நம் நாட்டில், நம் வரலாற்று வளர்ச்சியின் காலதாமதத்தால், இந்த முரண்பாடு முற்றிலும் அரக்கத்தனத் தன்மையைக் கொண்டுள்ளது. எவ்வளவு விந்தையாகத் தோன்றினாலும், நம் கிராமப்புறங்கள் 17ம் நூற்றாண்டின் குறைந்த தன்மைகளுக்கு சென்று கொண்டிருந்தபோதும், ஏன் இன்னும் தொலைவிலுள்ள நுற்றாண்டுகளுக்கு சென்று கொண்டிருந்த போதும் கூட, நம் தொழில்துறை ஏற்கனவே ஐரோப்பிய, அமெரிக்க உதாரணங்களுக்குச் சமமாக விளங்க முயன்று கொண்டிருக்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தால் கூட விவசாயத்தைத் தொழில்துறை அளவிற்கு உயர்த்த முடியவில்லை என்பது தெளிவு. இப்பணி சோசலிசத்திற்குத்தான் முற்றிலும் வந்தடைந்துள்ளது. நம்முடைய சூழ்நிலையில், நகரத்தைவிட கிராமத்தின் ஆதிக்கம் மகத்தானதாக இருக்கையில், விவசாயம் தொழிற்துறைமயப்படுத்தப்படல் என்பது சோசலிசக் கட்டமைப்பின் மிக முக்கியமான பகுதியாகும்.

விவசாயத்தைத் தொழில்துறைமயமாக்கல் என்பதன் மூலம் நாம் இரு வழிவகைகளைப் புரிந்து கொள்ளுகிறோம். இவை ஒன்றாகக் காணப்படும் போது, இறுதியாகவும் உறுதியாகவும் சிறுநகரத்திற்கும் கிராமப்புறத்திற்கும் இடையே உள்ள எல்லையை அழித்துவிட முடியும். இந்த முக்கியமான பிரச்சினை பற்றி சற்றுக் கூடுதலாக ஆராய்வோம்.

விவசாயத்தை தொழிற்துறைமயமாக்கல் என்பது, ஒருபுறத்தில், கிராம உள்ளூர் பொருளாதாரத்திலிருந்து தொழிற்துறை வளங்கள் மற்றும் பதப்படுத்தாத உணவுப் பொருட்களின் தொடக்க பதப்படுத்துதலிலுள்ள அனைத்துக் கிளைச் செயல்களையும் தனியே பிரிப்பதில் அடங்கியுள்ளது. ஏனெனில் அனைத்துத் தொழிற்துறையும் கைத்தொழில்கள், புராதன உற்பத்தி வகை என்பனவற்றின் மூலம் பொதுவாக கிராமப்புறத்தில் இருந்துதான் வந்துள்ளன. குறிப்பிட்ட பிரிவில் விஷேட தேர்ச்சியடைவது, போதுமான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் இயந்திர உற்பத்தி தோற்றுவித்தல் என்பதின் மூலம் மூடப்பட்டுள்ள உள்ளூர்ப்பொருளாதார முறையின் பல கிளைகள் பிரிக்கப்பட்ட விதத்தில் இது நடந்துள்ளது. நம் சோவியத் தொழில்துறைமயமாக்கல் இப்பாதையை அதிகளவிற்குப் பின்பற்ற வேண்டும். அதாவது, சொல்லின் உண்மையான அர்த்தத்தில் கூறுவதானால், கிராமப் பொருளாதாரத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே நிற்கும் தொடர்ச்சியான உற்பத்தி வழிமுறைகளில் சமூகமயமாக்கப்படும் பாதை பின்பற்றப்பட வேண்டும். அமெரிக்காவின் உதாரணம் எமக்குமுன் விரிந்துகிடக்கும் பாரிய வாய்ப்புக்களைக் காட்டுகிறது.

ஆனால் இப்பிரச்சினை நாம் கூறியிருப்பதுடன் முடிந்துவிடவில்லை. விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் கடப்பது, வயலில் தானியத்தை விவசாயம் செய்தல், கால்நடைப் பராமரிப்பு, தோட்டக்கலைப் பராமரிப்பு போன்றவற்றை தொழிற்துறைமயமாக்க வேண்டியுள்ளது. இதன் பொருள், இந்த உற்பத்திச் செயல்கள் விஞ்ஞான தொழில்நுட்பத்தைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்: பரந்தளவில் சரியான கூட்டுமுறையில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், இயந்திரக் கலப்பை பயன்படுத்தல், மின்வசதியைப் பயன்படுத்துதல், ஊட்ட உரங்கள் போடுதல், முறையான பயிர் மாற்றுமுறை, பரிசோதனை மற்றும் வழிவகைகள், விளைவுகளைச் சோதித்தல், தொழிலாளர் சக்தியை மிகவும் பகுத்தறிவார்ந்த விதத்தில் முழு உற்பத்தி முறையிலும் சரியான முறையில் வகைப்படுத்துதல் ஆகியவையாகும். மிகவும் நேர்த்தியாக அமைக்கப்படும் பயிரிடும் முறை கூட, சில விதங்களில் இயந்திரப் பயன்பாட்டிலிருந்து வேறுபடும் என்பது உண்மையே. ஆனால் ஒரே தொழிற்துறையிலும்கூட, வேறுபட்ட பிரிவுகள் ஒன்றிலிருந்து ஒன்று ஆழ்ந்த முறையில் மாறுபடுகின்றன. இன்று நாம் விவசாயத்தை தொழிற்துறைக்கு அருகே முழுமையாக நிறுத்திப் பார்ப்பதை நியாயப்படுத்துகிறோம் என்றால், அதற்குக் காரணம் விவசாயம் சிறு அளவில், பழமையான வழிகளில், உற்பத்தியாளர் இயற்கையின் நிலைமைகளை அடிமைத்தனமாக நம்பியிருக்கும் முறையில், விவசாய-உற்பத்தியாளர் அதிக பண்பாடு இல்லாத வாழ்வு நடத்தும் நிலையில் செயல்படுத்தப்படுகிறது. சமூகமயமாக்கினால் மட்டும் போதாது, அதாவது ஆலைமுறைக்கு மாற்றுதல், இன்றைய கிராமியப் பொருளாதாரத்தின் தனிப்பிரிவுகளான வெண்ணெய் தயாரித்தல், ஆடை தயாரித்தல், கொழுப்பு அல்லது தித்திப்புப் பானம் தயாரித்தல் போன்றவற்றை சமூகமயப்படுத்தினால் போதாது. விவசாயம் முழுவதையும் சமூகமயப்படுத்த வேண்டும், அதாவது தற்போதைய பிரிந்துள்ள நிலையிலிருந்து, நிலத்தை முறையாக உழாத இன்றைய தன்மையை மாற்றி, விஞ்ஞான அமைப்பில் தானிய, பான “ஆலைகளாக” மாற்றுதல், கால்நடைகளும், ஆடுகளும் “உற்பத்திவகை ஆலைகள்” என்பது போல், மேலும் பிறவற்றைக் கொண்டுவர வேண்டும். அது இயலும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முதலாளித்துவ அனுபவத்தில் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக டென்மார்க்கிலுள்ள விவசாயத்துறை அனுபவத்தில். அங்கு கோழிகள் கூட திட்டமிடுதல், தரம் பிரிக்கப்படுதல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படுகின்றன. ஒரு கால அட்டவணையின்படி மாபெரும் எண்ணிக்கையில், ஒரே அளவு, ஒரேநிறத்தில் அவை முட்டை இடுகின்றன.

விவசாயத்தை தொழிற்துறைமயமாக்கல் என்றால் இன்றைய கிராமப்புறத்திற்கும் நகரத்திற்கும் இடையே உள்ள அடிப்படை முரண்பாட்டை அகற்றுதலாகும். இதன் விளைவாக விவசாயிக்கும், தொழிலாளிக்கும் இடையிலான வேறுபாட்டையும் நீக்குவதாகும்: நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு, அவர்களின் வாழ்க்கைத் தரங்கள் அல்லது கலாச்சாரத் தரம் ஆகியவற்றில் அவர்கள் மிகவும் நெருக்கமாக நிற்கும் நிலை, அவர்களுக்கு இடையிலான எல்லை மறைந்து விட்டது என்ற அர்த்தத்தைத் தரவேண்டும். திட்டமிடப்பட்டுள்ள பொருளாதாரத்தில், வயல்கள் இயந்திரம் மூலம் பயிரிடப்படுகின்றன என்று உள்ள சமூகத்தில், நகரம் கிராமப் புறத்தின் நலன்களை ஏற்றிருப்பது (திறந்த வெளிகள், பசுமையான பகுதிகள்), கிராமம் தன்னை நகரத்தில் நலன்களுடன் செழிப்பாக்கிக் கொள்ளுவது (நல்ல சாலைகள், மின்விளக்குகள், குழாய் மூலம் குடிநீர், கழிவு அகற்றுதல்), அதாவது சிறுநகரத்திற்கும் கிராமப்புறத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மறைதல், விவசாயியும், தொழிலாளியும் சம மதிப்புடன், சம உரிமைகளுடன் ஒன்றுபடுத்தப்பட்ட உற்பத்தி வழிவகைகளில் பங்கு பெறுபவராக மாறும் நிலை-அத்தகைய சமூகம் ஓர் உண்மையான சோசலிச சமூகமாகும்.

இத்தகைய சமூகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை நீண்டதாகவும், கடினமாகவும் உள்ளது. இவ்வழியில் மாபெரும் மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் முக்கியமான மைல் கற்களாகும். அவைதான் கிராமத்திற்கு ஒளியைக் கொண்டு வந்து சக்தியை மாற்றவும் செய்யும். நிலத்தின் சக்திக்கு எதிராக மின்சக்தியின் ஆற்றல்!

சதுப்புநிலத்தில் கட்டப்பட்டதும், நம்முடைய சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றான ஷடுரா (Shatura) மின்னாலையைச் சமீபத்தில் தான் திறந்தோம். மாஸ்கோவில் இருந்து ஷடூரா ஒரு நூறு கிலோமீட்டர்களுக்குச் சற்று அதிகமான தூரத்தில்தான் இருக்கும். அவை அருகருகில் இருப்பதாக தான் தெரிகிறது. ஆனாலும் அவற்றின் நிலைமைகளில் எத்தகைய வேறுபாடு! மாஸ்கோ கம்யூனிஸ அகிலத்தின் தலைநகராக உள்ளது. ஆனால் அங்கிருந்து ஒரு சில டஜன் கிலோமீட்டர்கள் சென்றால், நீங்கள் காடுகளையும், பனிப்படலத்தையும், ஃபிர் மரங்களையும், உறைந்த சகதிப்பகுதிகளையும், கொடிய விலங்கினங்களையும் பார்க்கிறீர்கள். கறுப்புநிற, மரத்தின் நடுப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள உறைவிடங்கள் இருக்கும் சிறு கிராமங்களின் கீழே பனிக்குவியல்கள் உள்ளன. சில நேரம் இரயில்வே பெட்டி சன்னல்களில் இருந்தும், ஓநாய்களின் தடங்களைப் பார்க்க முடியும். இப்பொழுது ஷடுரா இரயில் நிலையம் இருக்கும் இடத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர், கட்டமைப்பு தொடங்கிய போது, ஊசியிலை மரங்களைக் கண்டிருக்கலாம். இப்பொழுது மாஸ்கோவிற்கும் ஷடுராவிற்கும் இடையே உள்ள தூரம், நவீன உலோகக் கம்பங்கள் நிறைந்து, 115,000 வோல்ட் மின்சாரத்தைக் கடத்த உதவுகின்றன. இக்கம்பங்களின் கீழ் தான் நரிகளும், ஓநாய்களும் தங்கள் குட்டிகளை ஈணுகின்றன. நம்முடைய கலாச்சாரம் முழுவதும் இப்படித்தான் உள்ளது -அது மிக அதிகமான முரண்பாடுகளால் ஆனது. தொழில்நுட்பத்தின் மிக உயர்ந்த சாதனைகளை ஒரு புறத்திலும், உயர் பொதுக்கருத்துக்களை ஒரு புறத்திலும், புராதன ஊசி இலைக்காடுகளை மற்றொருபுறத்திலும் கொண்டது.

சதுப்புப் புதர்களுக்கு நடுவே, அவை மேய்ச்சல் நிலம் போல ஷடுரா வாழ்கிறது. உண்மையில் மதத்தின் குழந்தைத்தனமான கற்பனைகள் தோற்றுவித்துள்ள அனைத்து அதிசயங்களுக்குள், கவிதை என்னும் படைப்பாற்றல் திறன் கொண்ட கற்பனைகள் கூட இந்த எளிய உண்மையின் முன் மங்கிவிடுகின்றன: மிகக் குறைந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள இயந்திரங்கள் முன்னைய சதுப்புச்சகதியை விழுங்கிவிட்டன; அவற்றை அவை கண்ணுக்குத் தெரியாத சக்தியாக மாற்றிவிட்டன; இந்த இயந்திரங்களை உருவாக்கி அமைத்த அதே தொழில்துறைக்கு அவ்வழியே சிறு தந்திக்கம்பிகளை மீண்டும் அனுப்புகின்றன.

ஷடுரா ஓர் அழகிய பகுதி. தங்கள் பணியில் பெரும் தேர்ச்சி பெற்று, அதற்குத் தம்மை அர்ப்பணிப்பவர்களால் அது கட்டப்பட்டது. இதன் அழகு செயற்கையானதோ அல்லது மேலாகச் சுமத்தப்பட்டதோ அல்ல. ஆனால் தொழில்நுட்பத்தின் உட்தன்மைகள், மற்றும் தேவைகளில் இருந்தே கட்டப்பட்டது. தொழில்நுட்பத்தின் மிக உயர்ந்த, சொல்லப்போனால் ஒரே அளவுகோல், தகுதி உடையதாக இருப்பது தான். தகுதிச்சோதனையானது, சிக்கனத்தை அளிக்கும் அதன் திறமையில் தங்கியுள்ளது. இதற்கு முழுமைக்கும் அதன் பகுதிகளுக்கும், வழிவகைகளுக்கும் இலக்குகளுக்கும் இடைய மிகப்பெரிய இடைத்தொடர்பு வேண்டும். பொருளாதார, தொழில்நுட்ப அளவுகோல் முற்றிலும் கலைநயத்துடன் இணைந்துள்ளது. ஷடுரா அழகின் உறைவிடம், ஏனெனில் அங்கு உற்பத்தியாகும் ஒரு கிலோவாட் சக்தி அதே போன்ற சூழலில் கட்டப்பட்டுள்ள மற்ற நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் கிலோவாட் சக்தியை விட மலிவானதாகும் என்று நம்மால் கூற முடியும்; இது ஏதோ வெறும்பேச்சல்ல.

ஷடுரா ஒரு சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது. சோவியத் ஒன்றியத்தில் மின்னாலைகளை விட மிக அதிகமாக நாம் பல சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளோம். மேலும் இயந்திரசக்தியாக மாற்றப்பட காத்திருக்கும் பல எரிபொருள் வகைகளையும் நாம் கொண்டிருக்கிறோம். தெற்கில் Dnieper நதி அதன் மகத்தான நீரோட்டம் எதற்கும் பயன்படாத விதத்தில் மிகச் செழிப்பான தொழில்துறைப் பகுதியினூடாக பாய்கிறது. பல நூற்றாண்டு காலமாக இவ்வாறு விரைந்து ஓடி கொண்டிருக்கும் நீரோட்டத்தை நாம்அணைகட்டி பயன்படுத்தப்படுவதற்காக காத்திருக்கிறது. அதையொட்டி நம் நகரங்கள், ஆலைகள் மற்றும் வயல்கள் ஒளி பெறும்; செயலியக்கம் பெறும்; செழிப்பைத் தரும். இதை நாம் செய்ய வேண்டும்!

அமெரிக்காவில் வசிப்பவர் ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றிற்கு 500 கிலோவாட் மணி மின்சாரத்தைப் பெறுகின்றனர். இங்கு இந்த எண்ணிக்கை 20 கிலோவாட் மணிகள் தான்; அதாவது, 25 மடங்கு குறைவு. பொதுவாக அமெரிக்காவில் உள்ளதை விட நாம் 50 மடங்கு குறைவான இயந்திர உந்து சக்தியைக் கொண்டிருக்கிறோம். அமெரிக்க தொழில்நுட்பத்துடன் சோவியத் முறையை இணைப்பது சோசலிசமாகும். நம்முடைய சமூக முறை அமெரிக்கத் தொழில்நுட்பமுறையை ஒப்பிடமுடியாத அளவிற்கு அதிகப் பகுத்தறிவார்ந்தப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும். ஆனால் அப்போது அமெரிக்கத் தொழில்நுட்பம் நம் சமூக அமைப்பை மாற்றி, அதை அதன் பிற்போக்குத்தன, புராதன, காண்டுமிராண்டித்தன மரபியத்தில் இருந்து விடுதலை அளிக்கும். சோவியத் சமூக கட்டமைப்புடன் அமெரிக்கத் தொழில்நுட்பத்தை இணைத்தல் என்பது ஒரு புதிய தொழில்நுட்பத்தையும், ஒரு புதிய கலாச்சாரத்தையும் - குறிப்பாக சலுகை பெற்றவர்களும், ஒதுக்கப்படுபவர்களும் இல்லாத அனைவருக்குமான தொழில்நுட்பத்தையும், கலாச்சாரத்தையும்- உருவாக்கும்.

சோசலிச பொருளாதாரத்தின் “கன்வேயர்” கொள்கை

சோசலிசப் பொருளாதாரத்தின் கொள்கை இணக்கமான தன்மையாகும். அதாவது, உள் ஒருங்கிணைப்பை தொடர்ச்சியாக அடித்தளமாக கொண்டிருக்கும். தொழில்நுட்பரீதியில், இக்கோட்பாடு அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டை இணைப்பு பட்டறையில் (கன்வேயரில்) கொண்டுள்ளது. கன்வேயர் என்றால் என்ன? முடிவில்லாமல் சுழன்று வரும் பட்டை தான் கன்வேயர். இது தொழிலாளர் பணிபுரியும் வேகத்திற்கு ஏற்ப, அதில் எதைவேண்டுமானாலும் அவருக்குக் கொண்டு வந்து தரும் அல்லது எடுத்துச் செல்லும். ஆலைக்குள்ளேயே பொருட்களை நகர்த்திக் கொள்வதற்கான கருவியாக பல இணைக்கப்பட்ட கன்வேயர்களை Ford எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது இன்று பரந்தளவில் அறியப்பட்டிருக்கிறது.

ஆனால் கன்வேயர் என்பது சிறிது அதிகப்படியானது: அது உற்பத்தி முறையையே தீர்மானிக்கும் ஒரு முறையாகும், இதில் ஒரு தொழிலாளி தனக்கு முன்நிற்கும் முடிவில்லாத சுழல்பட்டையின் வேகத்துடன் இணைந்து செயல்பட நிர்பந்திக்கப்படுகிறார். தொழிலாளியை இன்னும் அதிக அளவிற்கு, முற்றிலும் சுரண்டுவதற்கு முதலாளித்துவம் இதைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் அத்தகைய பயன்படுத்தல் கன்வேயரில் உள்ளது என்பதைவிட, முதலாளித்துவம் அதை பயன்படுத்தும் தன்மையில் உள்ளது எனலாம். உண்மையில், தொழிலாளரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வழிவகையின் வளர்ச்சி எங்கு சென்று கொண்டிருக்கிறது? குறிப்பிட்ட சிறுதுண்டு வேலைகளுக்கு ஊதியம் (piecework payment) என்ற விதத்திலா அல்லது கன்வேயர் இயக்கத்திலா? அனைத்துமே இது கன்வேயரை நோக்கித்தான் செல்வதை குறிப்பாகக் காட்டுகின்றன. சிறுதுண்டு வேலைக்கு ஊதியம் என்பதும், தொழிலாளர் மீது உள்ள மற்ற தனித்தனியாக கட்டுப்படுத்தும் தன்மையைப் போலவே, அதன் வளர்ச்சி சகாப்தங்களின் ஆரம்பகாலத்தில் நிலவிய முதலாளித்துவ கூறுபாட்டின் தன்மை தான். இந்த முறையானது, ஒரு தொழிலாளிக்கு அளிக்கப்படும் முழுமையான உடலுழைப்பு வேலைப்பழுவிற்கு உத்தரவாதமளிக்கிறது. ஆனால் பல தொழிலாளர்களின் ஒருங்கிணந்த பணிகளின் முயற்சிகளுக்கு இது உத்தரவாதம் அளிக்காது. ஆனால் இப்பிரச்சினைகள் இரண்டுமே கன்வேயரினால் இயல்பாக தீர்க்கப்பட்டுவிடும். சோசலிச பொருளாதார அமைப்புமுறை தொழில்நுட்ப சக்தியின் வளர்ச்சிக்கு பொருத்தமானவகையில், தனிப்பட தொழிலாளர்களின் உடலுழைப்பு வேலைபழுவைக் குறைக்க முயல வேண்டும். அதே நேரத்தில் பல தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் முதலாளித்துவ முறைக்கு எதிராக, துல்லியமாக சோசலிச கன்வேயரின் முக்கியத்துவமாகும். இதை மேலும் உறுதியாக கூறுவதானால், தொழிலாளர்களின் குறிப்பிட்ட வேலை நேரத்திற்கு ஏற்ப சுழல்பட்டையின் (conveyor belt) இயக்கத்தை ஒழுங்கமைப்பதா, அல்லது, முரண்பட்ட வகையில், ஒரு குறிப்பிட்ட சுழல்பட்டையின் வேகத்திற்கு ஏற்ப தொழிலாளர்களின் நேரத்தை ஒழுங்கமைப்பதா என்பது தான் முக்கிய புள்ளியாக உள்ளது.

முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ், கன்வேயர் ஒரு தனி நிறுவனத்தின் வரையறைக்குள், உள்போக்குவரத்திற்கான முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் இயல்பாக கன்வேயர் கோட்பாடு பரந்ததாகும். ஒவ்வொரு தனி நிறுவனமும் மூலப் பொருட்கள் மட்டுமின்றி, எரிபொருள், துணைப் பொருட்கள், மேலதிக உழைப்புசக்தி ஆகியவற்றையும் வெளியிலிருந்து பெறுகிறது. சந்தை விதிகள் பல சந்தர்ப்பங்களில் நீண்டகால உடன்பாடுகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்ற போதினும், தனிநிறுவனங்களுக்கு இடையேயான உறவுகள், மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் கூட, இந்த சந்தை விதிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆலையும் தனித்தனியே எடுத்துக் கொள்ளப்பட்டால், இன்னும் சரியாக சமூகம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டாலும், அது மூலப்பொருட்கள் உரிய நேரத்திற்குள் வருகின்றனவா, கன்வேயர் கொள்கைக்கு உகந்த முறையில் உள்ளனவா, அதாவது நேரத்தை வீணடித்துக் கொண்டு கிடங்குகளில் இல்லாமல், உற்பத்தி முறைத் தேக்கம் எதிலும் இல்லாமல் உள்ளதா, கொள்கை அளவில் கன்வேயர் கோட்பாட்டிற்கு இயைந்துள்ளதா, உற்பத்தி வேகத்திற்கு முற்றிலும் தொடர்புபட்டதாக இருக்கின்றதா என்பது முறையாகக் கவனிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஆராயும்போது கன்வேயரை எப்பொழுதும் முடிவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சுழல்பட்டையாக கருத வேண்டியதிருக்காது. அதனுடைய வழிவகைகள் கணக்கிலடங்கா மாற்றீட்டு வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. திட்டமிட்டபடி ஒரு இரயில்வே செயல்படுகிறது என்றால், அதாவது குறுக்கிடும் வகைகளில் இரயில்கள் ஓட்டப்படாது இருக்க வேண்டும். உரிய இடத்திற்கு சுமைகள் அனுப்பப்படுவதில் தாமதம் ஏற்பட்டு அடிக்கடி குவிந்து விடாமல் இருப்பது அவசியமாகும். சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவ அராஜகம் இருக்காது. சோசலிசத்தின் கீழ் இரயில்வேக்கள் இவ்விதத்தில்தான் இயங்கும்--ஒருவித சக்தி வாய்ந்த கன்வேயரைப் போல, ஆலைகளுக்கு உரிய நேரத்தில் மூலப்பொருட்கள், எரிபொருட்கள், பிற பொருட்கள், மக்கள் என்று அனைத்தையும் அளிப்பதற்கு உத்தரவாதம் செய்யும். இதே கருத்து கப்பல்கள் செயற்பாடு, பெரிய டிரக் வண்டிகள் செயல்பாடு, இன்னும் இது போன்றவற்றிற்கும் பொருந்தும். ஒரு முழுமையான திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின்கீழ், அனைத்துவிதத் தொடர்பு முறைகளும், உற்பத்தி முறைகளின் உட்தன்மையில், போக்குவரத்துக் கூறுபாடுகள் போல் ஆகிவிடும். எண்ணெய்க் குழாய்த்திட்டங்கள் அனைத்துமே திரவப் பொருட்களை அனுப்பவதற்கு ஒருவித செலுத்துமுறை போன்றவைதான். எண்ணெய்க் குழாய்களின் பரந்து விரிந்த தன்மை அதிகமாக இருக்கையில், நமக்கு சேமிப்புக் கிடங்குகள் குறைவாக இருந்தால் போதும். மிகக் குறைந்த அளவு எண்ணெய்தான் பயன்பாடற்ற மூலதனமாக முடங்கியிருக்கும்.

கன்வேயர் அமைப்பு நிறுவனங்கள் ஒரேயிடத்தில் குவிவதைக் குறித்து சற்றும் கருத்தில் கொள்வதில்லை. மாறாக, தற்காலத் தொழில்நுட்பம் அவை பரவலாகவும், ஒழுங்கற்ற குழப்பமான முறையில் அல்லாமலும்நிறுவப்பட்டிருப்பதை அனுமதிப்பதுடன்,. மிக உரிய இடத்தில் (Standort) நிறுவப்படுவதையும் கவனமாகக் கருத்தில் கொள்கிறது. தொழில்துறை நிறுவனங்களை பரந்தளவில் அமைப்பதற்கான வாய்ப்பு (இது இல்லாமல் நகரத்தைக் கிராமத்திலும், கிராமத்தை நகரத்திலும் கரைத்துவிடுவது இயலாது), ஓர் உந்துசக்தியாக இருக்கும் மின்சக்தியால் உறுதி செய்யப்படுகிறது. சக்தியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செலுத்துவதற்கு உலோகக் கம்பிகள் மிக நேர்த்தியான, நவீன வடிவமைப்பில் உள்ளன. இது உந்துதல் சக்தியை மிகச் சிறிய அலகுகளாகப்பிரிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. மேலும் ஒரு பொத்தானை அழுத்துவதின் மூலமே அதைச் செயல்படுத்தவும், நிறுத்தவும் இயலும். இத்தகைய கூறுபாடுகளினால் தான் மின்சக்தி“கன்வேயர்” தனியார் சொத்துக்களின் வரம்புகளுடன் விரோதமான மோதலுக்குள்வருகிறது. அதன் தற்போதைய வளர்ச்சி நிலையில், மின்சாரம் தொழில்நுட்பப் பிரிவில் சிறந்த "சோசலிசத் தன்மையை" கொண்டுள்ளது. இதில் வியப்பேதுமில்லை, ஏனெனில் அது தொழில்நுட்பத்தின் மிக முன்னேற்றமான பிரிவாகும்.

இந்த நிலைப்பாட்டிலிருந்து, பொருத்தமான பாசன அல்லது கழிவுநீர் வெளியேற்றத்திற்கான மகத்தான நில அபிவிருத்தி முறைகள் விவசாயத்திற்கான தண்ணீர் கன்வேயர்களாக விளங்குகின்றன. அதற்கும் மேற்பட்டவை, அதாவது வேதியியல் (இரசாயனவியல்), இயந்திரக் கட்டமைப்பு மற்றும் மின்சாரமயமாக்கல் இயற்கைக் கூறுபாடுகளை நம்பியிருப்பதிலிருந்து நிலச்சாகுபடியை விடுவிக்கும். அதன்மூலம் உயர்ந்த தரத்திலான திட்டமிடுதலுக்கு உறுதியளிக்கும். மேலும், நிலத்தின் கீழே இருப்பதிலிருந்து ஆரம்பித்து (நிலக்கரி, தாதுப்பொருட்கள் எடுப்பதிலிருந்து) நிலப்பகுதி வரைக்குமான (உழுதல், விதைகளை விதைத்தல் ஆகியவை வரை) அனைத்து உற்பத்தியையும் கட்டுப்படுத்தும், ஒருங்கிணைக்கும் ஒரு சோசலிச கன்வேயரின் அமைப்பிற்குள் இன்றைய “கிராம பொருளாதாரம்” அதிகளவில் முழுமையாக ஒன்றிணைக்கப்படும்.

தன்னுடைய கன்வேயர் அனுபவத்தின் அடிப்படையில், ஒருவித சமூக மெய்யியலை (social philosophy) வயது முதிர்ந்த போர்ட் (Ford) கட்டமைக்க முற்படுகிறார். ஒரு மில்லியனராக உருவாகும் போதே, ஏராளமான பணத்துடன் வெறுமனே ஒரு குட்டி-முதலாளித்துவவாதியாக இருந்து கொண்டிருக்கும் ஒரு சுயதிருப்தியடைந்த மேம்போக்கான ஒருவரின் பொறுக்கமுடியாத குறுகியதன்மையுடன் மாபெரும் உற்பத்தியும், நிர்வாக அனுபவமும் பெரும் விந்தையான விதத்தில் கலந்திருப்பதை நாம் இந்த முயற்சியில் காணலாம். போர்ட் கூறுகிறார்: "உங்களுக்குச் செல்வச் செழிப்பையும், உங்கள் சக மனிதகுலத்தில் நலத்தையும் நாடுவீர்கள் என்றால், நான் செயல்படுத்துபோல நீங்களும் செயல்படுங்கள்." பிறருக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் விதத்தில் ஒவ்வொரு மனிதனும் தன் நடவடிக்கையில் இருக்க வேண்டும் என்று கான்ட் கூறியிருந்தார். தத்துவார்த்த ரீதியில் போர்ட் ஒரு கான்டியவாதி ஆவார். ஆனால் போர்டின் 200,000 தொழிலாளர்களுக்கு அவருடைய நடவடிக்கையே நடைமுறை "நெறியாக" இல்லை, மாறாக அவருடைய தானியங்கி கன்வேயர் இயக்கம் தான் நெறியாக இருக்கிறது: அதுதான் அவர்களுடைய வாழ்வின் சீரான போக்குகளை உறுதி செய்கிறது, அவர்களுடைய கைகள், கால்கள், சிந்தனைகள் ஆகியவற்றில் இயக்கத்தை உறுதிபடுத்துகிறது. "சககுடிமக்களின் நலன்களுக்கு" என்னும் விதத்தில், போர்ட் இடம் இருந்து போர்டிசம் பிரிக்கப்பட வேண்டும். அது சமூகமயமாக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட வேண்டும். சோசலிசம் இதைச் செய்யும்.

“ஆனால் கன்வேயரினால் தொழிலாளருக்கு ஏற்படும் சலிப்பூட்டும், பிரத்யேகதன்மையற்ற, ஆக்க உணர்வற்ற செயல்பாடு ஏற்பட்டுள்ளது பற்றி என்ற கூறுகிறீர்கள்?” என்று பார்வையாளர்களிடம் இருந்து வந்துள்ள குறிப்பு ஒன்று கேட்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்சினை கிடையாது. இதைப் பற்றி நீங்கள் முழுமையாகச் சிந்தித்தீர்கள் என்றால், இதைப் பற்றி நன்கு கலந்துரையாடினீர்கள் என்றால், பின்னர் இது உழைப்பு பிரிவினை மற்றும் பொதுவில் இயந்திரமுறைக்கு எதிராகத்தான் திரும்பும். இதுவொருபிற்போக்குத்தனமான பாதையாகும். சோசலிசமும், இயந்திரங்களுக்கு எதிரான எதிர்ப்பும் ஒருபோதும் எதையும் பொதுவாக கொண்டிருக்கவும் இல்லை, இனியும் இருக்கப்போவதும் இல்லை. அடிப்படையான, மிகத் தேவையான, மிக முக்கியமான பணி, தேவையை (want) இல்லாதொழிப்பதுதான். மனித உழைப்பின் மூலம் அதிகளவு உற்பத்திப் பொருட்கள் அளிக்கப்படுவது மிகவும் இன்றியமையாததாகும். உணவு, காலணிகள், உடைகள், செய்தித்தாள்கள்-தேவையான அனைத்துமே எவரும் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலைக்கு இடம் இல்லாமல் அதிகளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும். தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதே நேரத்தில் அத்துடன் பேராசையும் அகற்றப்பட வேண்டும். வளம், ஓய்வு நேரம், அவற்றுடன் களிப்புடன் அனைவரும் வாழ்வதற்கு நாம் வகை செய்ய வேண்டும். இயந்திரமயமாக்கல் மற்றும் தானியங்கிமயமாக்கல் (இவற்றின் முடிவான வெளிப்பாடு தான் கன்வேயர்) இல்லாமல் உழைப்புசக்தியிலிருந்து அதிகளவிலான உற்பத்தியைப் அடையமுடியாது. தொழிலாளரின் சலிப்பு என்பது குறைந்த பணி நேரம், அதிக எளிமைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் ஈடுகட்டப்படும். தனிநபரின் படைப்பாற்றலைக் கோரும் தொழில்துறையின் பல பிரிவுகளை எப்பொழுதும் சமூகம் கொண்டிருக்கும். அங்கு தான் உற்பத்தியில் தன் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்கள் செல்லுவர். தொழில்துறையின் மிக முக்கியமான பிரிவுகளின் மிக அடிப்படையான உற்பத்திமுறையைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்; இன்றைய இயந்திரவகைப்படுத்தும் முறையை தொழில்நுட்பத்தின் புதிய இராசயன, எரிசக்தித்துறை புரட்சிகள் ஏதோவொரு வகையில் சிறப்பாக மாற்றி அமைக்கும் வரை இது பொருந்தலாம். ஆனால் நாம் வருங்காலம் அதைப்பற்றிக் கவலைப்படட்டும் என்று விட்டுவிடுவோம். ஒரு துடுப்புப் படகில் செல்வதற்கு தனிநபரின் பெரும் படைப்பாற்றல் தேவை. நீராவிக்கப்பலில் பயணிப்பது “அதிக சலிப்பு கொடுப்பதுதான்” ஆனால் கூடுதலான வசதியும், நம்பகத் தன்மையையும் உடையது. இதைத் தவிர, பெருங்கடலை துடுப்புப் படகு மூலம் கடக்கவும் இயலாது. நாமோ மனிதத் தேவை என்னும் பெருங்கடலை கடக்க வேண்டும்.

ஆன்மீகத் (spiritual) தேவைகளைவிட உடல்ரீதியான (physical) தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் அறிவர். மிக அதிகமான உடல்ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்தல் விரைவில் போதும் என்ற நிலைக்குத் தள்ளும். ஆன்மீகத் தேவைகளுக்கு வரம்பே இல்லை. ஆனால் ஆன்மிகத் தேவைகள் சிறக்க வேண்டும் என்றால், உடல்ரீதியான தேவைகள் முழுமையாகத் திருப்தி அடையவேண்டும். அதே நேரத்தில் வேலையின்மை, வீடின்மை, வறுமை ஆகியவை இல்லாத நேரம் வரும் வரை மக்களுடைய ஆன்மீகத் தரத்தை உயர்த்தும் போராட்டத்தையும் ஒத்திப்போட முடியாது. எனவே செய்யவேண்டிய முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் வெகுஜன மக்களிடைய வளமை, நிறைவு, ஓய்வு ஆகியவற்றைக் கொடுக்காமல் உண்மையான புதிய கலாச்சாரத்தை தோற்றுவித்துவிடலாம் என்று நினைப்பது மோசமான, இழிந்த தொடர்-கனவாக தான் இருக்கும். தொழிலாளியினதும் விவசாயியினதும் அன்றாட வாழ்வில் வெளிப்படும் முன்னேற்றத்தின் மூலம், நம்முடைய முன்னேற்றத்தை நம்மால் மதிப்பிட முடியும்; மதிப்பிடுவோம்.

கலாச்சாரப் புரட்சி

ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதென்பது நம்முடைய பொருளாதாரப் பணிகள், மற்றும் சமூக அல்லது கலாச்சார கட்டமைப்பு ஆகிவற்றிற்கு அப்பாற்பட்டு ஒரு சுயாதீனமான பணியாக முடிக்க முடியாது என்பது இப்பொழுது அனைவருக்கும் தெளிவாகியிருக்கும் என்று நினைக்கிறேன். வணிகம் “தொழிலாளர் கலாச்சாரத்தின்” ஒரு பகுதியா? ஒரு கோட்பாட்டு ரீதியான கண்ணோட்டத்திலிருந்து இந்த வினாவிற்கு நாம் எதிர்மறையாகத் தான் விடை கொடுக்க முடியும். ஆனால் இங்கு கோட்பாட்டுரீதியான பார்வை பயன்படாது. இடைமருவு காலச் சகாப்தத்தில், அதுவும் நாம் உள்ள ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு பொருளின் சமூக வடிவத்தை உற்பத்திப் பொருட்கள் பெறும் - நீண்ட காலத்திற்கு அவ்வாறே தொடரும். ஆனால் பொருள் கவனமாகக் கையாளப்பட வேண்டும், அதாவது, நாம் அதை விற்கவும், வாங்கவும் முடிய வேண்டும். அப்படி இல்லாவிடின், நாம் ஆரம்ப கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு ஒரு பொழுதும் செல்ல முடியாது. லெனின் நாம் வணிகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார், அதுவும் ஐரோப்பிய கலாச்சார உதாரணங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். வணிக கலாச்சாரம் என்பது, நாம் நன்கு அறிந்துள்ளபடி, இடைமருவு காலகட்டத்தின் மிக முக்கியமான கூறுபாடுகளில் ஒன்றாகும். தொழிலாளர் அரசாங்கம் மற்றும் அத்துடனான ஒத்துழைப்புடன் தொடர்புபட்ட வணிக கலாச்சாரத்தை நாம் “பாட்டாளி வர்க்க கலாச்சாரம்” எனக் கூறலாமா என்பது எனக்குத் தெரியாது - ஆனால் அது சோசலிச கலாச்சாரத்தை நோக்கிய ஒரு முன்னேற்றப்படி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

லெனின் கலாச்சாரப் புரட்சியை பற்றிப் பேசியபொழுது, வெகுஜனத்தின் கலாச்சார தரத்தை உயர்த்தும் அடிப்படைப் பொருளுரையாகத்தான் அதை அவர் கண்டார். மெட்ரிக் முறை பூர்ஷ்வா விஞ்ஞானத்தின் விளைபொருளாகும். ஆனால் நூறு மில்லியன் விவசாயிகளுக்கு இந்த சிக்கலற்ற அளவு முறையைக் கற்பிப்பது என்பது பெரும் புரட்சிகர, கலாச்சார கடமையாகும். டிராக்டர்கள் பயன்படுத்துதல் மற்றும் மின்சக்தியைப் பயன்படுத்தாமல் இதைச் சாதிப்பது இயலாது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. தொழில்நுட்பம் கலாச்சாரத்தின் அடிப்படையாகும். கலாச்சார புரட்சியின் முக்கியமான கருவியாக தொழில்நுட்ப புரட்சியாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளித்துவ சொத்துடமை முறை என்னும் சமூக வடிவங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் கூறுகிறோம். பாட்டாளி வர்க்கப் புரட்சியை செயல்படுத்தியபின், சமூக வடிவங்களின் வளர்ச்சி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் தங்கியுள்ளது, அதாவது தொழில்நுட்பத்தால் என்று நாம் கூறுகின்றோம். இந்தச் சங்கிலியில் பெரும் பிணைப்பை (Great link), இதை நாம் கைப்பற்றி கொண்டோமேயானால், கலாச்சாரப் புரட்சியை சாதிக்கமுடியும், அது தொழிற்துறைமயமாக்கலின் பிணைப்பில் உள்ளது- ஆனால் இது இலக்கியம் அல்லது மெய்யியலின் பிணைப்பில் இல்லை. இந்த சொற்கள் மெய்யியல் மற்றும் கவிதை குறித்த ஒரு தவறான கருத்தாகவோ அல்லது மரியாதைக்குறைவான மனோநிலையாகவோ புரிந்து கொள்ளப்படாது என்று நான் நம்புகிறேன். சிந்தனை பொதுமைப்படுத்தாமலும் மற்றும் கலை இல்லாமல், மனித வாழ்வு வெறுமையாகவும் வறியதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. கலாச்சாரப் புரட்சி என்பது உண்மையில் அவர்கள் கலாச்சாரத்தை அடைவதற்குரியதாக திறந்துவிட வேண்டும் - வெறும் அதன் எச்சங்களைப் பெறுவதை மட்டும் அல்ல. ஆனால் அதை அடைவது மிகப் பெரிய பொருள்சார் முன்னிபந்தனைகளைத் தோற்றுவிக்காமல் இயலாது. எனவேதான் கண்ணாடிக் குவளைகளை (Bottles) உற்பத்தி செய்யும் இயந்திரம் நமக்கு இப்பொழுது கலாச்சாரப்புரட்சியில் முதல்தரக் காரணியாகவும், அதே நேரத்தில் வீரம் செறிந்த பாடல் பத்தாம் தரக் காரணியாகவும் உள்ளது.

மெய்யியலாளர்கள் உலகைப் பற்றி போதுமான விளக்கம் கொடுத்துவிட்டனர், இப்பொழுதுள்ள பணி அதை மாற்றுவதுதான் என்று மார்க்ஸ் ஒரு முறை கூறினார். இச்சொற்கள் மெய்யியலுக்கு உரிய மதிப்பைக் கொடுக்கவில்லை என்ற பொருளைத் தராது. எல்லாக் காலங்களிலும் விளங்கிய பெரும் ஆற்றல் மிகுந்த மெய்யியலாளர்களில் மார்க்ஸும் ஒருவர் தான். மொத்தமாக மெய்யியலின் மற்றும் கலாச்சாரத்தின் மேலதிக அபிவிருத்தி, பொருள்சார் மற்றும் ஆன்மிகம் இரண்டுமே, சமூக உறவுகளில் ஒரு புரட்சியைக் கோருகின்றன என்பதையே சொற்கள் குறிக்கின்றன. எனவே மார்க்ஸ் மெய்யியலில் இருந்து பாட்டாளி வர்க்க புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் - மெய்யியலுக்கு எதிராக அல்ல, அதற்கு ஆதரவாகத்தான். இதே உணர்வில், இப்பொழுது நாம் கூறலாம்: புரட்சி மற்றும் தொழிலாள வர்க்கம் குறித்து கவிஞர்கள் கவிதைகள் இயற்றுவது சிறந்தது தான். ஆனால் ஒரு சக்தி வாய்ந்த டர்பைன் (turbines விசை உருவாக்கும் இயந்திரம்) இயந்திரம் எழுப்பும் ஒலி அதையும்விடச் சிறந்தது. சிறிய வட்டங்களின் சொத்துக்களாக எப்பொழுதும் இருக்கும் பல எளிமையான பாடல்களை (songs of medicre value) நாம் கொண்டிருக்கிறோம் ஆனால் நாம் மிக, மிகக் குறைவான ஒரு சில டர்பைன்களைத் தான் கொண்டுள்ளோம். இதன் மூலம் எளிமையான பாடல்கள் டர்பைன் இயந்திரம் தோன்றுவதற்குத் தடை என்று நான் கூறவிரும்பவில்லை. நிச்சயமாக அப்படியொரு குற்றச்சாட்டைக் கூற முடியாது. ஆனால் பொது மக்கள் கருத்திற்குச் சரியானநிலைநோக்கு, அதாவது, தோற்றப்பாடுகளின் இடைத்தொடர்பு பற்றிய புரிதல் - எதற்காக எங்கிருந்து என்பதை நன்கு அறிந்து கொள்ளுதல் - முற்றிலும் அவசியமாகும். கலாச்சாரப் புரட்சி என்பதை மேம்போக்குத்தனமான கருத்துவாத வழியிலோ, அல்லது குறுகிய உணர்வுடனோ நாம் புரிந்து கொள்ளக்கூடாது. நாம் வாழ்வின் நிலைமைகளை மாற்றுவது குறித்தும், வேலை முறைகள் மாற்றப்படுவது குறித்தும், ஒரு பெரும் மக்களின், ஏராளமான மக்கள் குடும்பங்களின் அன்றாடப் பழக்க வழக்கங்களை மாற்றுவது குறித்தும்பேசிக் கொண்டிருக்கிறோம். சக்திவாய்ந்த டிராக்டர்களின் பயன்பாட்டு முறை, முதல்தடவையாக வரலாற்றில் விவசாயியை தன் முதுகைக்கூனாமல் நிமிர்த்தி வைத்துச் செயல்புரிய வைக்கும், கண்ணாடிக் குவளைகளை உற்பத்தி செய்யும் இயந்திரம் நூறாயிரக்கணக்கான குவளைகளை உற்பத்தி செய்யும்போது கண்ணாடியை ஊதித் தயார் செய்பவர்களின் நுரையீரல்கள் விடுதலை பெறும், நூறாயிரக்கணக்கான பரி வலு ஆற்றலை உருவாக்கும் இயந்திரங்களால் மட்டும் தான், அனைவருக்கும் விமானப் பயணம் கிடைக்கும். இந்த விடயங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு சிறுபான்மைக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் ஒரு கலாச்சாரப் புரட்சிக்கு உத்தரவாதம் அளிக்கும். இத்தகைய கலாச்சாரப் புரட்சிதான் சரியாக அப்பெயரைப் பெற்றிருக்கும். அதன் அஸ்திவாரங்களில் தான் ஒரு புதிய மெய்யியலும் தத்துவமும், புதிய கலையும் செழிக்கத்தொடங்கும்.

மார்க்ஸ் கூறினார்: “ஒரு சகாப்தத்தின் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனைகள் அந்த சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே. ஆனால் இதர வர்க்கங்களை விட மாறுபட்ட விதத்தில் இது பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையிலும் கூட உண்மைதான். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரும், முதலாளித்துவம் இதை நீடித்து நிலைபெற செய்ய முயன்றது. அதன் முழு கலாச்சாரமும் இந்த நோக்கத்திற்காக பின்பற்றப்பட்டது. அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ள நிலையில், பாட்டாளி வர்க்கம், தவிர்க்க முடியாமல் அதன் ஆட்சிக் காலத்தை எவ்வளவு விரைவில் குறைக்க முடியுமோ, ஒரு வர்க்கமற்ற சோசலிசச் சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு, அவ்வளவு வேகமாகச் செயல்பட வேண்டும்.

அறநெறிகளின் கலாச்சாரம்

ஒரு பண்பட்ட வகையில் வணிகம் நடத்துவதென்பது, பிறவற்றோடு, ஏமாற்றுதல் கூடாது அதாவது, நம்முடைய தேசிய வணிக மரபுடன் முறித்துக் கொள்ளக்கூடாது என்ற பொருளைத் தரும்: “நீ பிறரை ஏமாற்றாவிட்டால், விற்பனை செய்ய முடியாது” என்று அது உள்ளது. பொய் கூறுவதும், ஏமாற்றுவதும் தனிநபர் சிதைவு மட்டும் அல்ல, ஒரு சமூக ஒழுங்கின் செயற்பாடும் (அல்லது நடவடிக்கையும்) ஆகும். போராட்டத்தின் ஒரு வழிவகை தான் பொய் சொல்லுதல், அதன் விளைவாக, அது நலன்களின் முரண்பாடுகளிலிருந்து பிறக்கிறது. மிக அடிப்படையான முரண்பாடுகள் வர்க்க உறவுகளிலிருந்து தோன்றுகின்றன. இன்னும் சொல்லப்போனால், வர்க்க சமூகத்தையும் விட ஏமாற்றுதல் தொன்மையானது என்று கூறலாம். மிருகங்கள் கூட “தந்திரத்தையும்” ஏமாற்றுவதையும் உயிர்வாழப் போராடும்போது வெளிப்படுத்துகின்றன. ஏமாற்றுத்தனம் - இராணுவ தந்திர சூழ்ச்சி - மிகப் பழங்குடியினரிடையே பெரும் பங்கைக் கொண்டிருந்தது. அத்தகைய ஏமாற்றுத்தனம் இன்னும் நேரடியாக விலங்கின வகையிலான வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து விளைந்தது. ஆனால் “நாகரிகம் அடைந்த” கணத்திலிருந்து, அதாவது வர்க்க சமூகம் தோன்றியதிலிருந்து, இந்த பொய் கொடூரமான அளவிற்கு சிக்கல் வாய்ந்ததாகப் போயிற்று, ஒரு சமூகச் செயற்பாடாயிற்று, வர்க்க வழிவகைகளில் பிரிந்தது, மனித “ கலாச்சாரத்தின்” ஒரு பகுதியாக ஆயிற்று. ஆனால் கலாச்சாரத்தின் இந்தப் பகுதியை சோசலிசம் ஏற்காது. சோசலிச அல்லது கம்யூனிச சமூகத்தில் உறவுகள், அதாவது சோசலிச சமூகத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி நிலையில், முற்றிலும் வெளிப்படையாக இருக்கும்; ஏமாற்றுத்தனம், பொய்கள், தவறாக எடுத்துரைத்தல், கள்ளக் கையெழுத்து இடுதல், துரோகம் செய்தல், நம்பிக்கைத் துரோகம் ஆகிய இணை வழிவகைகள் அதற்குச் சிறிதும் தேவையில்லை.

ஆனால் அந்த நிலையிலிருந்து இன்றும் நாம் வெகுதூரத்தில் உள்ளோம். நம்முடைய உறவுகளிலும், அறிநெறிகளிலும் இன்னமும் பண்ணை அடிமை காலம் மற்றும் பூர்சுவா ஒழுங்கில் வேர்களைக் கொண்ட பல பொய்கள் நிலவுகின்றன. பண்ணையடிமைக்கால கருத்தியலின் உயர்ந்த வெளிப்பாடு மதம். நிலபிரபுத்துவ-மன்னர்முறை சமூகத்தின் உறவுகள் குருட்டுத்தனமான மரபைத் தளமாக கொண்டு, மதக் கற்பனை கதையின் மட்டத்திற்கு உயர்த்திவிடப்பட்டன. இயற்கை நிகழ்விற்கும் சமூக அமைப்புக்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றிக் கற்பனையாகவும், தவறாகவும் விளக்குவது தான் கற்பனை கதையாகும். ஆனால் ஏமாற்றப்பட்டவர்கள், அதாவது ஒடுக்கப்பட்டமக்கள் மட்டுமில்லாமல், எவருடைய பெயரில் இந்த ஏமாற்றுத்தனம் நடக்கிறதோ ஆட்சியாளர்கள் -அவர்களும் இக்கற்பனைக் கதைகளை பெரும்பாலும் நம்பினர், உண்மையான மனச்சாட்சியுடனேயே அதை பின்தொடர்ந்தனர். மூடநம்பிக்கைகளில் புனையப்பட்ட ஒரு புறநிலைரீதியாக தவறான கருத்தியல், அகநிலைரீதியான பொய்மையைக் குறிக்க வேண்டும் என்ற தேவையில்லை. சமூக உறவுகள் சிக்கல் பெற்றுள்ள தன்மையில் தான், அதாவது முதலாளித்துவ சமூக ஒழுங்கு வளர்ச்சியுற்றுள்ள நிலையில், மதத்தின் கற்பனைக் கதைகள் வளர்ச்சி அடைந்துள்ள தன்மையில், அத்துடன் மதத்தின் கற்பனைக் கதைகள் பெருகிய முரண்பாடுகளை காட்டும் நிலையில், மதம் இன்னும் கூடுதலான தந்திர வகை, மிக நயமான ஏமாற்றுத்தனங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரமாகப் போகிறது.

வளர்ச்சியுற்ற முதலாளித்துவ கருத்தியல் பகுத்தறிவார்ந்ததும் மற்றும் கற்பனைக்கதைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. தீவிரமயப்பட்ட பூர்சுவாசி மதம் இல்லாமலேயே வாழ முயன்று, மரபின் மீதல்லாது பகுத்தறிவைத் தளமாகக் கொண்ட அரசை கட்டமைக்கின்றனர். இதன் வெளிப்பாடுதான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளுடன் கூடிய ஜனநாயகம் ஆகும். ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரம் அன்றாட உண்மைகளுக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் இடையே அரக்கத்தனமான முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இந்த முரண்பாட்டை நிறைவு செய்ய பொய்மையின் ஓர் உயர்ந்த வடிவம் தேவைப்படுகிறது. மிக அரசியல்ரீதியாக, முதலாளித்துவ ஜனநாயக நாடுகளை விட அதிகமான முறையில் வேறு எங்கும் மக்கள் பொய் கூறுவதில்லை. மேலும் இது ஒன்றும் புறநிலைரீதியான கற்பனைக்கதை வகையிலான “பொய்மை” அல்ல. மாறாக அசாதாரண சிக்கலின் ஒருங்கிணைந்த வடிவங்களைப் பயன்படுத்தி முழு நனவுடன்மக்கள் தோற்றுவிக்கும் ஏமாற்றுத்தனமாகும். பொய்யின் தொழில்நுட்பம் மின்சார தொழில்நுட்பத்திற்குக் குறைவில்லாமல் செயல்படுத்தப்படுகிறது. மிக “வளர்ச்சியுற்ற” ஜனநாயக நாடுகளான பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை மிகவும் ஏமாற்றுத்தனமான செய்தி ஊடகத்தைக் கொண்டுள்ளன.

ஆனால் அதே நேரத்தில் பிரான்சில் அவர்கள் நம்மைவிட நேர்மையாக வணிகம் செய்கின்றனர் என்பதை நாம் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். எப்படிப் பார்த்தாலும், வாங்குபவர்களுக்கு ஒப்புமை சொல்ல முடியாத அளவிற்கு கவனம் கொடுக்கின்றனர். ஓரளவு வசதியான வாழ்க்கைத் தரங்களைப் பெற்ற அளவில், முதலாளித்துவம் ஆரம்பகால திரட்சியின் ஏமாற்றுத்தன வழிவகைகளை கைவிடுகிறது. இது ஒன்றும் கோட்பாடுரீதியான அறநெறிக்கு கருத்துகளுக்கு உகந்து இருக்க வேண்டும் என்பதற்காக இல்லாமல், பொருள்சார் காரணங்களுக்காக நடக்கிறது. அற்ப ஏமாற்றுத்தனம், மோசடி, பேராசை ஆகியவை ஒரு நிறுவனத்தின் புகழைக் கெடுத்து, அதன் வருங்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். “நேர்மையான” வணிகத்தின் கொள்கைகள், வணிகத்தின் நலன்களில் இருந்தே விளைகின்றன, அதன் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட தரத்திலிருந்து தோன்றுகின்றன, அறநெறிக் கட்டுப்பாட்டிற்குள் நுழைகின்றன, “அறநெறி” விதிகள் ஆகின்றன, பின்னர் அவை பொது மக்கள் கருத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உண்மைதான், இந்தப் பகுதியிலும் கூட, ஏகாதிபத்தியப் போர் பாரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, ஐரோப்பாவைப் மிகப் பிற்காலத்திற்கு தள்ளியது. ஆனால் போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் “ஸ்திரப்படுத்தும்” முயற்சிகள் வணிகத்தின் காட்டுமிராண்டித்தன, தீய வடிவமைப்புக்களைக் கடந்தது. எப்படிப் பார்த்தாலும், நம்முடைய சோவியத் வணிகத்தை முழுமையாக எடுத்துக்கொண்டால், அதாவது ஆலையில் இருந்து தொலைக் கிராமத்தில் நுகர்பவர் வரை, பின் முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளைவிட மிகப் பெரிய அளவிற்குப் கலாச்சாரக்குறைவுடன்தான் நாம் வணிகம் செய்கிறோம் எனக் கூற வேண்டும். இது நம் வறுமையிலிருந்து விளைகிறது, பொருட்கள் பற்றாக்குறையால் ஏற்படுகிறது, நம்முடைய பொருளாதார, கலாச்சாரபிற்போக்குத்தனத்தால் தோன்றுகிறது.

ஆனால், நம்முடைய புதிய அரசாங்கமும் சமூக வடிவங்களும் ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே ஒருபோதும் எட்டப்பட்டிராத நேர்மையின் ஓர் உயர்ந்த தன்மையின் வாய்ப்பையும், அவசியத்தையும் உருவாக்கி வருகிறது. இதே நிலையை நம்முடைய பொதுவான உறவுகள் மற்றும் அன்றாட வாழ்வில், இருக்கிறது என்று கூறமுடியாது. இங்கு நம்முடைய பின்தங்கிய பொருளாதார மற்றும் கலாச்சாரத் தன்மை - பொதுவாக நம் கடந்தகாலத்தின் முழு மரபியத்திலும் - மகத்தான அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுத்து வருகின்றன. 1920களில் இருந்ததை விட நாம் சிறந்தே வாழ்கிறோம். ஆனால் மிகவும் முக்கியமான வாழ்க்கைத் தேவைகளின் தட்டுப்பாடு நம் வாழ்விலும், நம் அறநெறிகளிலும் அதன் அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறது - இன்னும் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கும் விட்டுச் செல்லும். இங்கிருந்துதான் பெரிய, மற்றும் சிறிய முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் ஏற்படுகின்றன, பெரிய சிறிய விகிதமற்ற தன்மையுடன் பிணைகின்றன, முரண்பாடுகளுடன் போராட்டம் பிணைந்துள்ளது, மற்றும் போராட்டத்துடன் தந்திரம், பொய்கள், ஏமாற்றுத்தனம் அனைத்தும் கட்டுண்டு நிற்கின்றன. ஆனால் இங்கே தான் தப்பிப்பதற்கான ஒரேயொரு வழியும் உள்ளது: உற்பத்தி, வணிகம் இரண்டிலும் நம் தொழில்நுட்பத்தின் தரத்தை உயர்த்துதல், இந்த வழிவகைகளில் சரியான நிலைநோக்கு இருப்பதே நம் “அறநெறிகளின்” சிறப்புக்களுக்கு வழிவகுக்கும். எழுச்சி பெறும் தொழில்நுட்பத்திற்கும் அறநெறிகளுக்கும் இடையேயான இடைத்தொடர்பு நம்மை நாகரிகம் மிக்க ஒத்துழைப்பாளர்கள் என்ற சமூக கட்டமைப்பிற்குப் பாதை வகுக்கும், அதாவது ஒரு சோசலிச கலாச்சாரத்திற்கு வழிவகுக்கும்.

குறிப்புக்கள்

[1] கிரிபோடெவின் Woe from Wit (1824) என்னும் நாடகத்தின் முக்கிய பாத்திரம்தான் பமுசோவ். ஓர் உயர்ந்த பதவியில் உள்ள மாஸ்கோ அதிகாரத்துவ, உத்தியோகப் போக்கை உடைய அவர் தன்னுடைய மேலதிகாரிகள் முன்பு குழைந்து இருப்பார். ஆனால் தனக்கு கீழ் இருப்பவர்களிடம் திமிராக நடந்து கொள்வார். மிகவும் பிற்போக்குத்தனமானவர் என்ற முறையில் புதுமையையும், “தடையற்ற சிந்தனையையும்” இரண்டையும் கண்டு மிகவும் அஞ்சுவார். இந்தக் குறிப்பை ஒரு நயமான பத்தியில் லெனின் பயன்படுத்துகிறார்: “நம்முடைய கட்சியின் பமுசோவ்கள் மார்க்சிசத்திற்கான தீவிர, இரக்கமற்ற நிலைப்பாடு என்ற பங்கைக் காட்டுவதற்கு எதிராக இல்லை; ஆனால் உள்பிளவிற்கு ஆதரவளித்தல் என்று வரும்போது அவர்கள் மார்க்ஸிசத்திலிருந்து மிகத் தீவிர பின்வாங்குதல்களை மூடி மறைப்பதற்கு எதிராக இல்லை.” (V. I. Lenin, "From the Editors," PSS, vol. 17, p.185) [Ashukin & Ashukina, Krylatye slova, M., 1986, p.657].

[2] அதீத காமம் அல்லது குறும்புத்தனம் என்றவகையில், ஒரு போலித்தன பிராய்ட் முறை என்பது இப்பிரச்சினையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அப்படி பொறுப்பற்றுச் சொற்களை உதிர்த்தல் விஞ்ஞானத்துடன் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை; அது இழிந்த மனநிலையைத்தான் பிரதிபலிக்கும்: ஈர்ப்புவிசையின் மையம் மூளையிலிருந்து முதுகுத்தண்டிற்கு மாற்றப்படுகிறது.... லியோன் ட்ரொட்ஸ்கி

Loading