முன்னோக்கு

அமெரிக்கர்களுக்கு பைடென் நிர்வாகத்தின் செய்தி: கோவிட்-19 ஆல் இறக்க தயாராகுங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 இன் ஓமிக்ரோன் (B.1.1.529) வகை ஒரு 'கவலைப்படத்தக்க வைரஸ் வகை' என்று உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை அறிவித்த பின்னரும், அதன் உலகளாவிய பரவலை தடுக்க மட்டுப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளைத் தவிர உலக அரசாங்கங்கள் வேறெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில், ஓமிக்ரோன் வகையின் 159 நோயாளிகள் தென் அமெரிக்காவைத் தவிர மனிதர்கள் வாழும் ஒவ்வொரு கண்டத்திலும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் வகை குறித்து இன்னும் அதிகம் தெரிய வரவில்லை என்றாலும், அது கோவிட்-19 ஐ உண்டாக்கும் வைரஸான SARS-CoV-2 இன் கொடிய வகையான அதிகளவில் பரவக் கூடிய டெல்டா வகையை விட அதிகமாக பரவக்கூடியதாக இருக்கும் என்பதையே தெற்கு ஆபிரிக்காவில் இருந்து வரும் ஆரம்ப தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதிக ஓமிக்ரோன் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள தென்னாபிரிக்காவின் கௌடெங் மாகாணத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மருத்துவமனைகளில் புதிதாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. ஓமிக்ரோன் வகையில் 50 க்கும் அதிகமான உருமாற்றங்கள் இருப்பதை வைத்து பார்த்தால், இதில் 32 வகைகள் அந்த வைரஸின் உள்புரதத்தில் இருக்கின்ற நிலையில், அது தடுப்பூசியையே எதிர்க்கும் இதுவரையில் இல்லாத மிகவும் கொடிய வகையாக இருக்கலாம் என்று பல விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Dr. Anthony Fauci, director of the National Institute of Allergy and Infectious Diseases, pauses while speaking during a Senate Health, Education, Labor, and Pensions Committee hearing on Capitol Hill, Thursday, Nov. 4, 2021, in Washington. (AP Photo/Alex Brandon)

அமெரிக்காவில் போதுமான மரபணு தொகுப்புத் திட்டங்கள் இல்லாததால், ஓமிக்ரோன் வகை ஏற்கனவே அந்நாட்டில் கண்டறியப்படாமல் பரவிக் கொண்டிருக்கலாம். இது ஆழமடைந்து வரும் டெல்டா வகையின் அதிகரிப்புடன் பொருந்தி உள்ளது, இந்த வைரஸ் ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களில் 165,000 அமெரிக்கர்களைக் கொன்றுள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்தொற்றை ஏற்படுத்தி உள்ளது.

அபாயகரமான இந்த புதிய வகை வேகமாக பரவுவது, இந்நோய் பரவலைத் தடுப்பதற்காக அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்ற விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைச் சந்தித்துள்ளது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை உரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி பைடெனுக்கான தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர். ஆண்டனி பௌஸி இந்த ஓமிக்ரோன் வகையின் பரவலையும் மற்றும் மிகப் பரந்தளவில் இந்த பெருந்தொற்றின் பரவலையும் தடுக்க, எந்தவொரு சமூக பொதுமுடக்க நடவடிக்கைகளையும் நிராகரித்ததுடன், முகக்கவசம் அணிதல் அல்லது தடுப்பூசிகளைக் கட்டாயப்படுத்துவதைக் கூட, நிராகரித்தார்.

கடந்த வாரத்தில் 414,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் உத்தியோபூர்வமாக டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நிலைமைகளின் கீழ், அத்தகைய நடவடிக்கைகள் தேவையா என்று கூறுவது 'மிகவும் முன்கூட்டி கூறுவதாக' இருக்கும் என்று பௌஸி ABC News க்குத் தெரிவித்தார். ஓமிக்ரான் வகை நாடு முழுவதையும் அடித்துச் செல்லும் வரை எதுவும் செய்யக்கூடாது என்பதே வெள்ளை மாளிகையின் நிலைப்பாடு என்பதை பௌஸி தெளிவுபடுத்தி விட்டார்.

2020 நெடுகிலும் ட்ரம்ப் நிர்வாகம் செய்ததைப் போலவே, இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு பைடென் நிர்வாகத்தின் திட்டவட்டமான எதிர்ப்பு பொருளாதார பரிசீலனைகளால் மட்டுமே உந்தப்படுகிறது. ஓமிக்ரோன் வகையின் அபாயங்களைக் குறித்து வெள்ளிக்கிழமை செய்திகள் பரவிய போது, பங்குச் சந்தைகள் இந்தாண்டின் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தன. வெள்ளை மாளிகையில், உயிர்களைக் காப்பாற்றுவது குறித்து விவாதங்கள் இல்லை, மாறாக திங்கட்கிழமை வோல் ஸ்ட்ரீட்க்கு என்ன ஆகும், கிறிஸ்துமஸ் விற்பனை பருவம் முடியும் வரையில் எந்த நடவடிக்கையையும் நல்லமுறையில் எப்படி தாமதப்படுத்துவது என்றே விவாதிக்கப்பட்டன.

NBC இன் Meet the Press நிகழ்ச்சியில், பௌஸி கூறுகையில், கோவிட்-19 ஐ அகற்றுவதற்கான அல்லது முற்றிலும் ஒழிப்பதற்கான எந்த முயற்சிகளையும் பைடென் நிர்வாகம் எதிர்க்கிறது என்பதை மிகவும் திட்டவட்டமான வார்த்தைகளில் தெரிவித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் சக் டாட், 'இப்போது இதுவொரு சாதாரண தொற்றுநோய் (endemic) [அவர்களின் சொந்த வார்த்தை] என்பது மிகவும் தெளிவாக உள்ளதா? நான் என்ன கேட்கிறேன் என்றால், இது வேறு வழியில் எப்படி முடிவுக்குக் கொண்டு வரப்படும்?,” என்று வினவிய போது, பௌஸி கூறுகையில், “உங்களுக்கே தெரியும், நிச்சயமாக நாம் அதை ஒழிக்கப் போவதில்லை. நாம் ஒரேயொரு வைரஸை மட்டுந்தான் முற்றிலுமாக ஒழித்துள்ளோம், அது சிற்றம்மை. போலியோ மற்றும் தட்டம்மை போன்றவை இப்போது இல்லை என்பதைப் போல, அகற்றுதல் என்றால் நாட்டில் அது எங்கேயும் இல்லை என்று அர்த்தம். இந்த இடத்தை நாம் அடைவோம் என நான் நினைக்கவில்லை,” என்றார்.

இந்த வைரஸ் 'சாதாரண தொற்றுநோயாக' மாறும் என்பதில் டாட் உடன் உடன்பட்ட பௌஸி, தடுப்பூசிகள் மட்டும் நோய்த்தொற்றுகளையும் இறப்புக்களையும் 'ஏற்றுக் கொள்ளக்கூடிய' மட்டத்திற்கு குறைக்க செய்யும் என்ற பைடென் நிர்வாகத்தின் விஞ்ஞானபூர்வமற்ற மந்திரத்தையே மீளவலியுறுத்தினார். 'அது போகப் போவதில்லை,' என்ற அவர், 'எந்தளவுக்கு நாம் அதை குறைவாக பெறுகிறோமோ, அந்தளவுக்கு நல்லது. பெரும் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி இடப்பட்டு கூடுதல் தடுப்பு மருந்து கொடுக்கப்படும் போது குறைவான நோய்தொற்று ஏற்படும். ஆகவே சக், நான் ஏற்கனவே பல முறை கூறியதைப் போல, நாம் எப்படி இந்த வைரஸூடன் வாழ முடியும் என்பது நம் சொந்த பிடியில் உள்ளது,” என்றார்.

இந்த அறிக்கைகளும், ஓமிக்ரோன் வகைக்கு பைடென் நிர்வாகம் காட்டும் ஒட்டுமொத்த விடையிறுப்பும் முன்னணி விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டிக்கப்பட்டன. முன்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த டாக்டர் ஜோர்ஜ் காபல்லெரா அந்த நேர்காணலின் ஒரு துணுக்கை ட்வீட் செய்து கருத்துரைக்கையில், “நான் போதுமானளவுக்குப் பார்த்துவிட்டேன். நமக்கு தைரியமாக மூலோபாய மாற்றங்கள் தேவை, வெள்ளை மாளிகையின் தற்போதைய கோவிட் விடையிறுப்புக் குழு இந்த பணியைச் செய்யும் அளவுக்கு இல்லை,” என்றார்.

1984 இல் இருந்து தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் ஆணையத்தின் (NIAID) இயக்குனராக சேவையாற்றிய பௌஸி, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு நம்பத்தகுந்த பிரதிநிதி ஆவார். இந்த வைரஸை அகற்றுவது மற்றும் முற்றிலும் ஒழிப்பதற்கு அவரின் வெளிப்படையான எதிர்ப்பானது, இந்த மூலோபாயத்திற்குத் தொழிலாள வர்க்கத்திலும் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட விஞ்ஞானிகள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவுக்கு எதிராக நனவுபூர்வமாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் அகற்றுவதற்கான மூலோபாயத்தில், பாரிய பரிசோதனைகள், நோயின் தடம் அறிதல், நோய்தொற்று ஏற்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்தல் மற்றும் தரமான முகக்கவசங்களை பயன்படுத்துதல், மேம்பட்ட காற்றோட்ட வசதி, பயணக் கட்டுப்பாடுகள், உலகெங்கிலுமான மக்களுக்கு விரைவான தடுப்பூசி, அத்தியாவசிய வேலைகள் மற்றும் அனைத்து பள்ளிகளையும் தற்காலிகமாக மூடுதல், மற்றும் அதில் பாதிக்கப்படும் எல்லா தொழிலாளர்களுக்கும் முழுமையான வருமான பாதுகாப்பு உட்பட, எல்லா பொது சுகாதார நடவடிக்கைகளையும் உலகந்தழுவி அமலாக்க வேண்டும் என்பதைக் கொண்டுள்ளது. இந்த மூலோபாயத்தை வெற்றிகரமாக பயன்படுத்திய மிகப் பெரிய நாடு சீனா, அது மார்ச் 2020 இல் இந்த வைரஸை திறம்பட அகற்றியதற்குப் பின்னர் அதன் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே ஏற்பட்ட சிறிய சிறிய வெடிப்புகளைத் தவிர தொடர்ந்து இந்த வைரஸைத் தடுத்து நிறுத்தி உள்ளது.

இந்த மூலோபாயத்திற்கு பைடென் நிர்வாகத்தின் தெளிவான எதிர்ப்பு, தீர்க்கமான வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் பாரிய மரணங்களுக்கு இட்டுச் செல்லும் என்று தெரிந்தே தான் அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு மனிதப்படுகொலை கொள்கையைப் பகிரங்கமாக தழுவி உள்ளது. முற்றிலும் தடுக்கக்கூடிய புதிய மரணங்களுக்கு காரணமான SARS-CoV-2 மற்றும் அதன் வகைகள் உருவெடுத்துள்ளதையும், இந்த வைரஸை அகற்றாவிட்டால் இது தொடர்ந்து பரிணமித்து மிகவும் ஆபத்ததானதாக மாறும் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

கோவிட்-19 ஆல் வயதானவர்களும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் இறப்பதை ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவுகள் நன்மையாக பார்க்கின்றன. இந்த பெருந்தொற்றுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஆயுள்காலத்தைக் குறைப்பதன் மூலம் ஓய்வூதியங்கள், சமூக சேவைகள் மற்றும் மருத்துவக் கவனிப்பின் செலவுகளைக் குறைக்க அங்கே அதிகரித்தளவில் அழைப்புகள் இருந்து வந்தன. 2014 இல் “நான் 75 வயதில் இறப்பேன் என்று ஏன் நம்புகிறேன்,” என்ற தலைப்பில் The Atlantic இல் Ezekiel Emanuel எழுதிய ஒரு கட்டுரை இந்த நோக்கங்களின் மிக வெளிப்படையான சூத்திரமயப்படுத்தலாக இருந்தது. “இயற்கையே அதன் போக்கில் விரைவாகவும் உடனடியாகவும் எடுத்துக் கொண்டால், சமூகமும் குடும்பங்களும்—நீங்களும்—நன்றாக இருப்பீர்கள் என்றொரு வாதம்' என்ற துணைத் தலைப்பை அக்கட்டுரை கொண்டிருந்தது.

பைடெனின் கோவிட்-19 ஆலோசனை குழுவில் சில காலம் சேவையாற்றிய இமானுவலின் விருப்பம் பூர்த்தியாகி வருகிறது. இந்த பெருந்தொற்றின் முதலாம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் வயது வந்த ஆண்களின் ஆயுட்காலத்தில் 2.2 ஆண்டுகள் குறைந்தது, இது 1933 இல் உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களில் சேமிக்கத் தொடங்கியதற்குப் பின்னர் மிக மோசமான வீழ்ச்சியாகும்.

எல்லா விதத்திலும், பைடென் நிர்வாகம் ட்ரம்ப் நிர்வாகத்தின் பெருந்தொற்றுக் கொள்கைகளையே தான் தொடர்கிறது. இந்த வசந்த காலம் முழுவதிலும் ஜனநாயகக் கட்சி தலைமையிலான முக்கிய நகரங்களில் பள்ளிகளைத் திறக்க நிர்பந்தித்த பின்னர், பைடென் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பதை ஊக்கப்படுத்தவில்லை என்பதோடு, வெளியேற்றங்கள் மீதான பெடரலின் கடன் இடைநிறுத்த நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மேற்பார்வையிட்டார், அதேவேளையில் புதிய நோய்தொற்றுக்களைத் தடுக்க ஒரு மந்திரச் சாவியாக தடுப்பூசிகளைச் சார்ந்திருந்தார். இந்த மூலோபாயம் முற்றிலும் நம்பத்தகுந்ததில்லை என்பதை டெல்டா அதிகரிப்பு ஊர்ஜிதப்படுத்தியது, ஆனாலும் தடுப்பூசி-மட்டுமே என்ற அதே அணுகுமுறையைத் தொடர்ந்த வெள்ளை மாளிகை, தற்போதைய பேரிடருக்குக் களம் அமைத்துள்ளது.

இந்த பெருந்தொற்றின் ஒரு கொடிய புதிய வகை வைரஸின் எழுச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் கோவிட்-19 ஐ அகற்றுவதற்கு பைடென் நிர்வாகத்தின் திட்டவட்டமான எதிர்ப்பானது, மனித உயிரைக் காப்பாற்றுவதற்கு விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்களின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு புதிய வகையும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு இருந்தாலும், மொத்த கிரேக்க எழுத்துக்களும் பயன்படுத்தப்படும் வரையில் அது உருமாறவும், இந்த வைரஸ் பாரிய பெருந்திரளான மக்களிடையே தொடர்ந்து பரவவும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து அனுமதிப்பார்கள் என்பதையே ஓமிக்ரோன் வகையின் வெளிப்பாடு எடுத்துக் காட்டுகிறது.

அனைத்திற்கும் மேலாக, மார்ச் 2020 இன் ஆரம்ப பொது முடக்கங்களை ஏற்படுத்திய திடீர் தன்னிச்சையான வேலைநிறுத்த அலையைப் போல, பொது முடக்கத்தைக் கோரி தொழிலாள வர்க்கத்திற்குள் ஓர் இயக்கம் அபிவிருத்தி அடையும் என்பதைக் குறித்து நிதிய தன்னலக்குழு பீதியுற்றுள்ளது. ஒரு விரிவாக உலகளாவிய அகற்றும் மூலோபாயத்தின் பாகமாக பள்ளிகளும் அத்தியாவசியமற்ற வேலையிடங்களும் மூடப்பட்டால் அது மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றும், ஆனால் அது முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுபோக்கின் இதயதானத்தில் உள்ள உபரிமதிப்பைப் பிழிந்தெடுக்கும் நிகழ்முறையைத் துண்டிக்கும். இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து 2 ட்ரில்லியன் டாலருக்கு அதிகமாக குவித்துக் கொண்டுள்ள பில்லியன்களின் தனிப்பட்ட செல்வவளம் மீது எந்தவொரு பாதிப்பும் சகித்துக் கொள்ளப்படுவதில்லை.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரையில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸைப் படிப்படியாக அகற்றுவதை நோக்கமாக கொண்ட ஒரு மூலோபாயம் மூலமாக ஓமிக்ரோன் போன்ற மிகவும் அபாயகரமான வகைகள் உருவாவதைத் தடுக்க முடியும் என்று, உலகின் முன்னணி விஞ்ஞானிகளைப் பின்பற்றி, உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து எச்சரித்துள்ளது. 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கை மற்றும் தடுப்பூசியை மட்டும் நம்பியிருப்பதைப் போன்ற 'தணிப்பு' கொள்கைகள் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற கருத்து உட்பட இன்று வரை செயல்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளை மக்கள் நிராகரிப்பதே இந்த மூலோபாயத்தின் தொடக்கப் புள்ளியாகும்.

வரையறைகளின்படி, இந்த பெருந்தொற்றுக்கு எந்த தேசிய தீர்வும் இல்லை. கோவிட்-19 ஐ அகற்றுவதற்கான போராட்டம், தொழிலாளர்களால் அவர்களின் சொந்த கரங்களில் எடுக்கப்பட்டு உலகளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் முற்போக்கான பிரிவுகளை இணைத்து, பெருநிறுவன இலாபங்களை விட நிபந்தனையின்றி மனித உயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த பாரிய இயக்கத்தை வழிநடத்தும் கோட்பாடாக இருக்க வேண்டும்.

உலகளவில் கோவிட்-19 ஐ அகற்றுவதற்கான போராட்டத்திற்கு, இந்த பெருந்தொற்று நெடுகிலும் கொள்கைகளைத் தீர்மானித்துள்ள நிதிய நலன்களை மிகவும் விரிவாக அம்பலப்படுத்த அவசியப்படுகிறது. இந்த காரணத்திற்காக தான், உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுத்துள்ள கோவிட்-19 மீது உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை எல்லாவற்றையும் மிகவும் முக்கியமானதாகவும், ஒவ்வொரு நாட்டிலும் முறைப்படி அபிவிருத்தி செய்ய வேண்டியதாகவும் ஆகிறது. மதிப்பீட்டின்படி உலகளவில் 12 மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ள இந்த கொள்கைகளுக்குப் பொறுப்பான அதே குற்றவாளிகள் தான் உலகெங்கிலும் மற்றொரு பாரிய மரண அலையைக் கட்டவிழ்த்து விட இப்போது அச்சுறுத்தி வருகிறார்கள். இது தடுக்கப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்.

Loading