மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வாரம், வடக்கு ஸ்பெயினில் உள்ள பாஸ்க் நாட்டின் தலைநகரான விட்டோரியாவில் உள்ள ஜேர்மன் வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடஸ்-பென்ஸ் ஆலையில் வாகனத் தொழிலாளர்கள் கோடை விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கினர். தொழிற்சங்கங்கள் ஜூன் மாதம் முன்வைத்த புதிய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் அதைச் செய்கின்றனர், இந்த ஒப்பந்தம், ஆலையில் கூறப்படும் பில்லியன் யூரோ முதலீட்டிற்கு ஈடாக காட்டுமிராண்டித்தனமான ஊதிய வெட்டுக்களை திணிக்கிறது.
ஆனால், தெற்கு ஸ்பெயினில் உள்ள வலென்சியாவில் உள்ள அல்முசாபெஸ் (Almussafes) தளத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை ஒத்திவைப்பதாக ஃபோர்ட் இன் சமீபத்திய அறிவிப்பு, மெர்சிடஸ் இன் வாக்குறுதிகளை வேறு வெளிச்சத்தில் வைக்கிறது. வலென்சியாவில், மொத்தமுள்ள 6,000 ஊழியர்களில் 3,000 பேர் வேலை வெட்டுக்களால் அச்சுறுத்தப்படுகின்றனர். ஆலையின் 46 ஆண்டுகால வரலாற்றில் தொழிலாளர்கள் மீதான மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும். சமூக-ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் (UGT) சார்லூயிஸில் உள்ள ஃபோர்டு ஆலைக்கு எதிரான சகோதர ஆட்குறைப்பு போரில் ஆலை 'வெற்றி பெறுவதை' உறுதி செய்வதற்காக அதைத் தூண்டியது.
UGT உம் ஃபோர்டும் கையெழுத்திட்ட மின்மயமாக்கல் ஒப்பந்தம் நான்கு ஆண்டுகால ஊதிய முடக்கத்தை விதிக்கிறது. சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (Consumer Price Index - CPI) 10.4 சதவிகிதமாக உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டுக்குள் இது 30 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமான உண்மையான ஊதிய குறைப்புகளை ஏற்படுத்தும். இது ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆயிரக்கணக்கான யூரோக்கள் குறைவதைக் குறிக்கிறது. இந்த வெட்டுக்களுக்கு ஈடாக, ஃபோர்டுக்கான புதிய மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான முதலீட்டை அல்முசாபெஸ் ஆலை பெறும் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், கடந்த வாரம் ஃபோர்டு நிறுவனம், ஆலையில் முதலீடு செய்வதற்கான இலவச பொதுப் பணத்தை கைவிடுவதாக அறிவித்தது, இது ஆலையை மூடுவதற்கான முடிவு இன்னும் மேசையில் உள்ளது என்பதைக் குறிக்கிறது.
ஃபோர்டில் கிடைக்கும் படிப்பினை தெளிவாக உள்ளது: அதாவது, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், பெருநிறுவன நிர்வாகம் மற்றும் ஸ்பெயினின் PSOE-பொடேமோஸ் அரசாங்கம் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும் சம்பளத்தையும் பாதுகாக்க முடியாது. மெர்சிடஸ், ஃபோர்ட் மற்றும் பிற வாகன உற்பத்தியாளர்களின் திட்டங்களுக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்க தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொண்டு சுயாதீனமான சாமானிய தொழிலாளர்கள் பாதுகாப்பு குழுக்களை உருவாக்குவதே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழியாகும். வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளின் இழப்பில் தொழில்துறையை மறுசீரமைக்க அவர்கள் இரக்கமின்றி திட்டமிட்டுள்ளனர்.
மெர்சிடிஸ் மீதான கோபம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில், விட்டோரியாவில் பணவீக்க விகிதத்திற்குக் குறைவான ஊதிய தீர்வுகளுக்கு எதிரான கசப்பான போராட்டம் வெடித்தது. ஆனால் UGT தொழிற்சங்கம் மற்றும் பொடேமோஸுடன் சேர்ந்த தொழிலாளர் ஆணையம் (Confederación Sindical de Comisiones Obreras, CCOO) ஆகியவை ஊதிய வெட்டுக்களை விதித்தன.
5,000 மெர்சிடஸ் வாகனத் தொழிலாளர்கள் 95 சதவிகித தொழிலாளர்களின் ஆதரவுடன் ஒன்பது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் உற்பத்தி முற்றிலும் முடங்கியது. இதை மூன்று நாள் நடவடிக்கையாக மட்டுப்படுத்துவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சியை மீறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நீடித்தனர்.
தொழிலாளர்கள் மெர்சிடஸ்-பென்ஸ் நிர்வாகத்தின் அச்சுறுத்தலை எதிர்த்தனர். வாகனத் தொழிலாளர்களின் போராட்டங்களில் இப்போது மீண்டும் மீண்டும் முக்கிய கருப்பொருளாக இருப்பது என்னவென்றால், மெர்சிடஸ் நிறுவனம் மின்சார வாகன உற்பத்திக்காக 1.2 பில்லியன் யூரோ ‘முதலீட்டுத் திட்டத்திற்கு’ உறுதியளித்துள்ளதுதான். எவ்வாறாயினும், அதற்கு ஈடாக அவர்கள் உண்மையான ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் கடுமையான வெட்டுக்களைக் கோரினர், அதிலும் நிறுவனம் கடந்த ஆண்டின் நிகர இலாபம் 16 பில்லியன் யூரோக்கள் என்று அறிவித்திருந்தாலும் கூட.
மற்ற வாகன உற்பத்தியாளர்களைப் போலவே, மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனமும், ஏற்கனவே உலகளவில் பல்லாயிரக்கணக்கான வேலைகளை அழித்துவிட்ட உலகளாவிய வாகனத் தொழில்துறையின் மறுசீரமைப்பின் சுமைகளை வாகனத் தொழிலாளர்களை சுமக்க வைப்பதில் உறுதியாக உள்ளது. முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தயவில், தொழிலாளர்களை நன்கு சுரண்டப்படும் தற்காலிக தொழிலாளர்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
மெர்சிடஸ் ஒரு புதிய சுற்று தாக்குதல்களை நடத்தியது, அவர்கள் தாக்குதல்களை நடத்த தொழிற்சங்கங்களை நம்பியிருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 2008 ஆம் ஆண்டு பொருளாதாரச் சரிவிலிருந்து, CCOO உம் UGT உம் சனிக்கிழமை இரவு நேர மாற்றுப்பணிகள், அதிக நெகிழ்வுத் தன்மை மற்றும் ஈரடுக்கு ஊதிய முறை ஆகியவற்றைச் சுமத்துவதற்கு பணிக்குழுவில் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றின. ஒரு புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதைப் பயன்படுத்தி, மெர்சிடஸ் ஒரு புதிய சுற்று வெட்டுக்களுக்கு கோரிக்கை விடுத்தது.
ஜூன் மாதத்தில், பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததால், நிறுவனம் 2022 க்கு 2 சதவீதமும், 2026 வரை ஆண்டுக்கு 1.8 சதவீதமும் ஊதிய உயர்வை வழங்கியது. ஆறாவது இரவு பணி மற்றும் வார இறுதி வேலைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீண்ட வேலை நேரத்தையும் அது கோரியது.
இந்த கோரிக்கை பாரிய தொழிலாளர் கோபத்தை தூண்டிய நிலையில், CCOO மற்றும் UGT தொழிற்சங்கங்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகின. விட்டோரியாவின் தெருக்களிலும், தொழிற்சாலையில் நடந்த மறியல் போராட்டங்களிலும், தொழிலாளர்கள், ‘6வது இரவுப் பணி இல்லை,’ ‘நுகர்வோர் விலைக் குறியீடு [CPI] ஆம் அல்லது ஆம்,’ [ஸ்பெயினின் மெர்சிடஸ் பொது இயக்குநர் எமிலியோ] டிட்டோஸ், ஞாயிறு வேலைச் சோம்பேறி,’ மற்றும் ‘UGT உம் CCOO உம், விலைபோனவைகள்’ என்று கோஷமிட்டனர்.
CCOO உம் UGT உம் மெர்சிடஸ் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, அதில் பிந்தையது ஆறாவது இரவுப் பணிக்கான கோரிக்கையை திரும்பப் பெற்றது, எஞ்சிய வெட்டுக்கள் தொடர்ந்து நீடித்தாலும் தொழிற்சங்கங்கள் அதை ஒரு வெற்றியாகக் காட்டிக்கொள்ள அது அனுமதித்தது.
பாஸ்க் பிரிவினைவாத தொழிற்சங்கங்களான ELA, LAB மற்றும் ESK ஆகியவையும் CCOO மற்றும் UGT தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பில் துணை நின்றன. CCOO உம் UGT உம் ஆதிக்கம் செலுத்தும் தொழிலாளர் குழுவை விமர்சிப்பவர்களாகக் காட்டிக்கொண்டு, அவர்கள் வேலைநிறுத்தத்தை சில நாட்களுக்கு நீட்டிக்க அழைப்பு விடுத்தனர், அதே நேரத்தில் போராட்டத்தை மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்த மறுத்தனர். அவர்கள் பணிக்குழுவைக் கட்டுப்படுத்தும் போது, CCOO மற்றும் UGT ஐப் போல அவர்களும் அதே பாத்திரம் வகிப்பதை முன்னரே காட்டியுள்ளனர்: Guipuzcoa இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில், பணவீக்கத்திற்கு மிகவும் கீழாக, 4 சதவிகித ஊதிய உயர்வுக்கு அவர்கள் கையெழுத்திட்டனர்.
இந்த தொழிற்சங்கங்கள் ஸ்பெயினிலோ அல்லது சர்வதேச அளவிலோ வாகனத்துறையில் உள்ள மற்றவர்களுடனான அணிதிரட்டலை ஒருங்கிணைக்க ஒருபோதும் முயலவில்லை. அதே மாதத்தில், ஃபோர்ட் மற்றும் மெர்சிடஸ் நிறுவனங்களுக்காக பெரிய வாகனங்களை ஒருங்கிணைக்கும் VFS Southampton Ltd. நிறுவனத்தில் பணிபுரியும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள், ஊதியப் பிரச்சினை குறித்து வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அச்சுறுத்தினர். அமெரிக்காவில், சான் டியாகோவின் மெர்சிடஸ்-பென்ஸ் விற்பனை ஒப்பந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தவறான தகவல் மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் –அதாவது, சலுகைகளை ஏற்கவில்லை என்றால் ஆலையை மூடுவோம் என்ற நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை CCOO உம் UGT உம் மறு ட்வீட் செய்தன – தொழிற்சங்கங்கள் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தன. பெப்ரவரியில் ஃபோர்ட் வாலென்சியாவில் UGT பயன்படுத்திய இழிவான தந்திரோபாயங்களைப் பிரதிபலிக்கும் வகையில், அவர்கள் பாரம்பரிய வாக்குச்சீட்டு வாக்கெடுப்பை நடத்த மறுத்து, ஒப்பந்தத்தின் கருத்தை வெளியிடாமல் தங்கள் செயலி மூலம் வாக்கெடுப்பை நடத்தினர். இதனால் வாக்குகளை எண்ண முடியாத நிலை ஏற்பட்டது.
இறுதியில், 57 சதவிகித தொழிலாளர்கள் ஒப்பந்தத்திற்கு வாக்களித்தனர், இது தொழிலாளர்கள் மீதான வரலாற்று தாக்குதலை பிரதிபலிக்கிறது. இது 2022 ஆம் ஆண்டிற்கு 6 சதவிகித ஊதிய உயர்வையும் – அதாவது உத்தியோகபூர்வ பணவீக்க புள்ளிவிபரங்களில் இருந்து நான்கு புள்ளிகள் கீழாக - 2026 ஆம் ஆண்டு வரை ஆண்டிற்கு 2.25 சதவிகித ஊதிய உயர்வு அல்லது பணவீக்கத்திற்கு 8 புள்ளிகள் கீழாக ஊதிய உயர்வுகளை நிர்ணயிப்பதன் மூலம் உண்மையான ஊதியங்களைக் குறைக்கிறது. இது வரவிருக்கும் ஆண்டுகளில் ஒரு தொழிலாளிக்கு ஆயிரக்கணக்கான யூரோக்கள் இழப்பைக் குறிக்கிறது.
எவ்வாறாயினும், வாக்கெடுப்பு பாரிய தொழிலாளர் அதிருப்தியை சுட்டிக்காட்டியது. ‘ஆம்’ வாக்குகளுக்கு சிறந்த ஊதியம் பெறும் அலுவலக ஊழியர்கள் ஆதரவு அளித்தனர், ஒப்பந்தத்திற்கான ஆதரவு வாகன ஒருங்கிணைப்புப் பிரிவில் 38 சதவிகிதமாகவும், வர்ணம் பூசும் பிரிவில் 46 சதவிகிதமாகவும் மற்றும் இறுதிக்கட்ட ஒருங்கிணைப்புப் பிரிவில் 48 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. பெரும்பாலும் வெட்டுக்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் குழு தான் அதை பெருமளவில் எதிர்க்கிறது என்பதை வாக்கெடுப்பு காட்டுகிறது.
பாஸ்க் நாட்டில் உள்ள CCOO பொதுச் செயலாளர் லோலி கார்சியா ஆம் வாக்கெடுப்பை வரவேற்று, “எட்டப்பட்ட ஒப்பந்தம் ஒரு நல்ல ஒப்பந்தம் என்று நாங்கள் நம்புகிறோம், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் எதையும் இழக்கவில்லை, ஏனெனில் பிற்போக்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.
தொழிலாளர்கள் தற்போது புதிய கூட்டு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் கீழ் பணிபுரியும் அதேவேளை, மெர்சிடஸ் அதன் 1.2 பில்லியன் யூரோ முதலீட்டிற்கான அறிவிப்பை பின்பற்றவில்லை.
மெர்சிடஸில் மீண்டும் ஒரு போர் உருவாகி வருகிறது, மேலும் வாகனத் தொழிலாளர்களுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் உள்ளனர் – அதாவது, மில்லியன் கணக்கான வாகனத் தொழிலாளர்களும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பிற தொழிலாளர்களும் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான எதிர்ப்பை அணிதிரட்டவும், மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் நிறுவனங்கள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து இந்தப் போராட்டங்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்திற்கும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees - IWA-FRC) உருவாக்குவதே தற்போதைய அவசரப் பணியாகும்.
மேலும் படிக்க
- திட்டமிடப்பட்ட ஆலை மூடலுக்கு எதிராக இந்திய ஃபோர்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்
- போர்டு நடவடிக்கைக் குழு (ஜேர்மனி): நமது வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேசரீதியான போராட்டத்திற்காக
- ஃபோர்டு சார்லூயிஸ் ஆலை மூடல் அறிவிக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பின்னர், தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும் தொழிற்சங்கமும் தொழிலாளர்களை அமைதியாக இருக்க கோருகின்றன