மத்திய கிழக்கில் பரந்த அளவில் போர் வெடிக்கும் நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது

செவ்வாய் இரவு இஸ்ரேல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அதிக நகரமயமாக்கப்பட்ட பகுதியில் ஈரானுடன் நட்பு கொண்டுள்ள ஹெஸ்பொல்லா போராளிகளின் உயர்மட்ட இராணுவத் தளபதி முஷின் ஷுக்கரை (Mushin Shukr) இலக்கு வைத்து ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலிய ஆட்சி அதன் “இலக்கு” தாக்குதலில் ஷுக்கர் கொல்லப்பட்டார் என்று கூறினாலும், ஹெஸ்பொல்லாவிற்கு நெருக்கமான ஆதாரங்கள் அவர் உயிர் பிழைத்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை (Ismail Haniyeh) இஸ்ரேல் புதன்கிழமை காலை தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்தது. இந்தப் படுகொலை காசாவில் ஒரு போர்நிறுத்த உடன்படிக்கைக்கான எந்தவொரு சாத்தியக்கூறையும் நாசப்படுத்துகிறது என்பது மட்டுமல்ல, மாறாக வாஷிங்டன் ஆதரவிலான சியோனிச ஆட்சி அதன் இனப்படுகொலை போரை ஒரு பிராந்தியந்தழுவிய மோதலாக மாற்ற தீர்மானகரமாக உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. 

ஜூலை 30, 2024 செவ்வாய்க்கிழமை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் தேடுகின்றனர். [AP Photo/Hussein Malla]

பெய்ரூட்டில் மேற்கொண்ட தனது தாக்குதலை நியாயப்படுத்த, இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை அன்று ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் ஒரு ஏவுகணைத் தாக்குதலில் ட்ரூஸ் சமூகத்தைச் சேர்ந்த 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதை பற்றிக் கொண்டது. இஸ்ரேலின் போர் வெறிப்போக்குடன், ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான ஆதாரமற்ற கண்டனங்கள் ஒருபுறம் இருக்க, சூழ்நிலை தெளிவாக இல்லை. கடந்த சனிக்கிழமை நடந்த ஏவுகணைத் தாக்குதலுக்கான பொறுப்பை ஹெஸ்பொல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல் பெய்ரூட்டின் தெற்கே மக்கள் நெருக்கம் நிறைந்த புறநகரில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் குறைந்தது ஐந்து மாடிகளை தகர்த்தது. லெபனானின் அரசு நடத்தும் NAA செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு ட்ரோன் மூலம் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் கட்டிடத்தைத் தாக்கின, சுற்றியுள்ள தெருக்களை இடிபாடுகள் மற்றும் குப்பைளாக ஆக்கின. 

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள், ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் அடங்குவர் என்று அது கூறியது. பாஹ்மன் மருத்துவமனை உட்பட சுற்றியுள்ள கட்டிடங்கள் சேதமடைந்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூத்த ஹெஸ்பொல்லா தளபதியை படுகொலை செய்யும் இஸ்ரேலிய முடிவு லெபனானில் ஒரு பரந்த மோதலைத் தூண்டிவிடும் நோக்கத்தை கொண்டுள்ளது; இது ஹெஸ்பொல்லாவுடன் போரை நாடவில்லை என்ற இஸ்ரேலின் கூற்றை கேலிக்கூத்தாக்குகிறது. ஷுக்கர், ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் (Hassan Nasrallah) மூத்த ஆலோசகர் மற்றும் ஹெஸ்பொல்லாவின் தலைமை இராணுவக் குழுவின் உறுப்பினரும் ஆவார். 

இஸ்ரேலிய பாசிச ஆட்சியின் அதி தீவிர வலதுசாரிகள் பல மாதங்களாக ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக ஒரு முழு அளவிலான போருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். மே மாதக் கடைசியில், இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச்  (Bezalel Smotrich) இராணுவம் தெற்கு லெபனான் மீது படையெடுத்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு வடக்கு இஸ்ரேல் மீதான ஹெஸ்பொல்லா தாக்குதல்களை தடுக்க ஒரு இடை தடுப்பு பகுதியை  உருவாக்க வேண்டும் என்று கோரினார். 

இதற்கு விடையிறுக்கையில், தேசியப் பாதுகாப்பு மந்திரி இட்டாமர் பென்-க்விர் ஒரு இடைத்தடை பகுதியை தோற்றுவிப்பது மட்டும் போதாது என்றும், மாறாக இஸ்ரேலிய இராணுவம் லெபனானை புயல் வேகத்தில் கைப்பற்றி “ஹெஸ்பொல்லாவை முழுவதுமாக அழிக்க வேண்டும்” என்றும் கோரினார். அதற்கு அடுத்த மாதம், ஹெஸ்பொல்லா ராக்கெட்டுகள் தீப்பற்றி எரிந்த வடக்கு இஸ்ரேலுக்கு அவர் விஜயம் செய்தார், “அவர்கள் எங்களை இங்கே எரிக்கிறார்கள். ஹெஸ்பொல்லாவின் கோட்டைகள் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும், அவை அழிக்கப்பட வேண்டும். போர்”! என்று கூச்சலிட்டார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான போருக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. கடந்த வாரம் வாஷிங்டனுக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு அவர் காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் போர்வெறி மொழியில் உரையாற்றி இரு கட்சிகளின் ஆதரவையும் பெற்றார். சனிக்கிழமை கோலன் குன்றுகள் மீதான தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்காக அவர் தனது பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டார், அங்கு அவர் இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்களைச் சந்தித்து, ஹெஸ்பொல்லா “இதற்கு முன்னர் ஒருபோதும் கொடுத்திராத ஒரு பெரும் விலையை” கொடுக்க வேண்டியிருக்கும் என்று சூளுரைத்தார். 

ஞாயிறன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் கிழக்கு லெபனானில் பேக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஹெஸ்பொல்லாவிற்கு சொந்தமான ஆயுதக் கிடங்குகள் மற்றும் உள்கட்டுமானங்கள், தெற்கு நகரமான டைருக்கு அருகே ஷப்ரிஹா மற்றும் புர்ஜ் அல்-ஷெமாலி மற்றும் கஃபார் கிலா, ரப் எல்-தலத்தீன், கியாம் மற்றும் டயர் ஹர்ஃபா கிராமங்கள் மீது குண்டுகளை வீசின.

திங்களன்று இரவு, இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியாவில் ஒரு புதிய தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. தெற்கு லெபனானில் நடந்த தாக்குதல்களில் டிரோன், பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்கள் ஏழு வெவ்வேறு பகுதிகளில் லெபனிய ஹெஸ்பொல்லா குழுவின் 10 இடங்கள் மீது நடத்தப்பட்டன. 

இத்தாக்குதல்கள் ஹெஸ்பொல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அக்டோபர் 7ல் இருந்து நடந்து வரும் மோதலில் கணிசமான விரிவாக்கத்தை பிரதிபலிக்கையில், செவ்வாய் இரவு பெய்ரூட்டில் நடந்த தாக்குதல் ஹெஸ்பொல்லாவிடம் இருந்து விடையிறுப்பைத் தூண்டி மத்திய கிழக்கு முழுவதும் பதட்டங்களை மேலும் அதிகரிப்பதற்கும் கணக்கிடப்பட்டது. 

இந்த தாக்குதல் எதிர்ப்பு அலையைத் தூண்டியுள்ளது. லெபனான் வெளியுறவு மந்திரி அப்துல்லா பௌ ஹபீப் (Abdallah Bou Habib) பெய்ரூட் மீதான தாக்குதலைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையில் புகார் அளிக்கப் போவதாகக் கூறினார். பெய்ரூட் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஈரான் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏப்ரலில், இஸ்ரேல் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது ஓர் ஆத்திரமூட்டும் தாக்குதலை நடத்தி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் இரண்டு உயர்மட்ட தளபதிகளையும் மற்றும் குறைந்தபட்சம் ஐந்து பேரையும் கொன்றதுடன், ஈரானுடன் பிராந்தியந் தழுவிய ஒரு போரைத் தூண்ட அச்சுறுத்தியது. 

பெய்ரூட் தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக CNN தெரிவிக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் திங்களன்று தனது இஸ்ரேலிய பிரதிநிதி யோவ் கேலண்டுடன் தொலைபேசியில் பேசினார். உத்தியோகபூர்வ குறிப்பு ஹெஸ்பொல்லாவுடனான மோதலுக்கு ஒரு இராஜதந்திர தீர்வு தேவை குறித்து உதட்டளவில் பேசினாலும், ஆஸ்டின் “இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அதன் தற்காப்பு உரிமைக்கான அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை” வெளிப்படுத்தினார், இது நடைமுறையளவில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தடையற்ற உரிமையை வழங்கியது. 

முஷின் ஷுக்கரை குறிவைக்கும் முடிவு தற்செயலாக எடுக்கப்பட்டதல்ல. 2019 ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை “சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி” என்று அழைத்த பின்னர் அவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் வெகுமதி அறிவித்தது. “அக்டோபர் 23, 1983 அன்று பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க மரைன் கார்ப்ஸ் பாசறை மீது குண்டு வீசப்பட்டதில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்” என்று அது கூறியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க கருவூலத்துறை ஷுக்கர் மற்றும் இரண்டு பிற ஹெஸ்பொல்லா தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை சுமத்தியது. 

செவ்வாய்கிழமை தாக்குதலைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடிய அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், “[அதன்] பாதுகாப்பாக இருப்பதற்கும் மற்றும் [அதன்] தன்னைப் பாதுகாப்பதற்குமான இஸ்ரேலின் உரிமையை ஐயத்திற்கிடமின்றி ஆதரிப்பதாக” விரைவாகவும் அழுத்தமாகவும் அறிவித்தார். இக்கருத்தை  வலியுறுத்தும் வகையில், இஸ்ரேல் குறிப்பாக “பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது, அது ஹெஸ்பொல்லா ஆகும்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். 

இஸ்ரேலின் தற்காப்பு உரிமை என்றழைக்கப்படுவதன் பெயரில், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை இராஜதந்திர, நிதி மற்றும் இராணுவ ரீதியில் முழுமையாக ஆதரித்து, அதன் அட்டூழியங்களை நியாயப்படுத்தியுள்ளன. கோலன் குன்றுகளில் குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படுவதில் ஹெஸ்பொல்லா “அனைத்து சிவப்புக் கோடுகளையும் கடந்துவிட்டதாக” இஸ்ரேல் அறிவிக்கின்ற அதேவேளையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனிய குழந்தைகளைப் படுகொலை செய்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசாவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாக உள்ளது, அதேவேளையில் மிகவும் மதிக்கப்படும் லான்செட் மருத்துவ இதழின் ஒரு மதிப்பீடு அந்த எண்ணிக்கையை மிக அதிகமாக 186,000 என்று காட்டுகிறது.

இப்பொழுது வாஷிங்டன் ஒரு இஸ்ரேலிய போருக்கு ஆதரவு கொடுக்கிறது. அது மத்திய கிழக்கை இன்னும் கூடுதலான பேரழிவு தரும் மோதலில் ஆழ்த்தி அப்பகுதி முழுவதையும் தீக்கிரையாக்கும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது. ஒரு இராஜாங்க தீர்வுக்கான அதன் பெயரளவிலான அழைப்புகளுக்கு இடையே, அமெரிக்க ஏகாதிபத்தியம், சியோனிச ஆட்சியைப் போலவே, காஸா மோதலை, அப்பிராந்தியம் முழுவதிலும் ஈரானுடன் இணைந்த குழுக்களுக்கு எதிராகவும், மற்றும் எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாக இருக்கும் ஈரானுக்கு எதிராகவும் கூட ஒரு மிகப் பெரிய போரின் பாகமாக காஸா மோதலைக் கருதுகிறது. 

Loading