சர்வதேச நாணய நிதிய குழு அடுத்த இலங்கை ஜனாதிபதிக்கு கட்டளை விதிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு, செப்டெம்பர் 21 அன்று ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அதன் சிக்கன திட்ட நிரலை துல்லியமாக நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பதை வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர், இலங்கையின் கொழும்பில் 27 செப்டம்பர் 2023 புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோது. [AP Photo/Eranga Jayawardena]

இத்தகைய தெளிவுபடுத்தல் மூலம், ஸ்தாபனக் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களால் கூறப்படும் அனைத்து பொய்களையும் சர்வதேச நாணய நிதியம் அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தல் முடிந்தவுடன், புதிய ஜனாதிபதி உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை எளிதாக்குவதற்காக அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை கிழித்து எறிந்துவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான நடவடிக்கைகளை சுமத்துவதுடன், எந்தவொரு எதிர்ப்பிற்கும் எதிராக பொலிஸ் அரச நடவடிக்கைகளை நாடுவார்.

ஆகஸ்ட் 2 அன்று விடுத்த ஒரு அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் அப்பட்டமாக எச்சரித்ததாவது: 'இலங்கை, கத்தி முனையில் வைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்ற ஒரு தீர்க்கமான கட்டத்தில், பொருளாதாரத்தை உறுதியான பாதையில் வைப்பதற்கு, மறுசீரமைப்பு வேகத்தை நிலைநிறுத்துவதும் அனைத்து வேலைத்திட்ட கடமைகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதையும் உறுதி செய்வதும் மிகவும் தீர்க்கமானதாகும்...'

நாட்டின் 3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பு கடனை தொடர்ந்து பெறுவதற்கு ஈடாக, அரசாங்கம் எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட, தேர்தலுக்குப் பிறகு சர்வதேச நாணய நிதிய தூதுக் குழு மீண்டும் கொழும்புக்கு வரும்.

ப்ரூயர் அத்தோடு நிற்கவில்லை. அடுத்த அரசாங்கத்தின் 2025 வரவுசெலவுத் திட்டம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவிகிதம் மத்திய கால வருமான மீதியை உறுதிசெய்ய 'பொருத்தமான வருவாய் நடவடிக்கைகளையும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடுகளையும்' அடித்தளமாக  கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வரி அதிகரிப்பு, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை காட்டுத் தீ வேகத்தில் விற்றுத் தள்ளுவது, அத்தோடு  பொது சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான செலவுகளை வெட்டித் தள்ளுவதும் தொடரும். எதற்காக? இலங்கையின் 'கடன் நிலைத்தன்மையை' மீட்டெடுப்பதற்காக - அதாவது சர்வதேச கடன் முதலைகளுக்கு திருப்பிச் செலுத்துவதற்கு, உழைக்கும் மக்களை அர்ப்பணிக்கச் செய்வதற்காக.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் ஆர்வமூட்டும் வருவாய் வசூலும், 'பாராட்டத்தக்க விளைவுகளைத் தருகிறது' என்று கூறிய ப்ரூயர், சந்தை-சார்பு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் 'மறுசீரமைப்பு திட்டத்திற்காக' முழு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், அதாவது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 1,122 பில்லியன் ரூபாயிலிருந்து (4 பில்லியன் டொலர்), 1,620 பில்லியன் ரூபா (5.4 பில்லியன் டொலர்) வரை வருமானத்தை எட்டியுள்ளதாக பெருமையாகக் கூறினார்.

இந்த வருவாய் வசூல் எங்கிருந்து வந்தது? பெறுமதி சேர் வரி (VAT) 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தப்பட்டதுடன் பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களும் மேலும் வெட்டப்பட்டன.

இதன் விளைவு சமூக சீரழிவு ஆகும். 2019 இல் 11 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2024 இல் 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அனைத்து தொழிலாளர்களின் உண்மையான ஊதியமும் சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளது. வருமானத்தில் ஏற்பட்டுள்ள சரிவு உணவுப் பாதுகாப்பற்ற நிலைமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றும் நிலை உயர்வதற்கு வழிவகுத்தது. ஜனத் தொகையில் சுமார் 42 சதவீதம் பேர் 'உணவை சமாளிக்கும்' முறைகளை பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த தொழிலாள வர்க்க விரோத சாதனை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்திய பெருமையுடன் மீண்டும் தேர்தலில் நிற்கிறார். 'சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட எந்த ஒப்பந்தங்களையும் மீறுவது சாத்தியமற்றது. தற்போதுள்ள இந்த இலக்குகள் மற்றும் அளவுகோல்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல,” என்று ஆகஸ்ட் 7 அன்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) ஆகிய இரண்டும் சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ள போதிலும், அதை மாற்றியமைக்க முடியும் என்று அறிவிக்கின்றன.

கடந்த வாரம் பெருவணிகத்தின் முன் பேசிய ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாச, 'இலங்கை மக்களின் குரல் கேட்கப்படுவதை உறுதிசெய்ய, நாம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேசுவோம்,' என்றார்.

அவர் வாய் கிழி பொய் சொல்கிறார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, நாடு கடன் தவணையைத் தவறிய பின்னர், 2022 மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் முதலில் கடன் கோரியபோது, ​​அதனை ஆதரித்தவர்களில் முதன்மையானவர் பிரேமதாச ஆவார். ப்ளூம்பெர்க் டெலிவிஷனிடம் பேசிய அவர், “நாம் அனைவரும் ஒரு கசப்பான மாத்திரையை அல்லது பல மாத்திரைகளை கூட விழுங்க வேண்டியிருக்கும்… இது தீவிர சிக்கனத்தின் காலமாக இருக்கும். இந்த யதார்த்தத்தை இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

விக்கிரமசிங்க மற்றும் பிரேமதாச ஆகியோரில் இருந்து வேறுபட்டிராத, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதிய கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். ஆகஸ்ட் 8 அன்று டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'நாங்கள் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை தொடர்வோம்... சர்வதேச நாணய நிதிய அணுகுமுறையானது நாடு நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வர உதவுவதாகும்' என அவர் கூறினார்:

பிரேமதாசவைப் போலவே, திஸாநாயக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்தார். எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதிய தூதுக் குழு வலியுறுத்தியது போல், இலங்கை 'ஒரு தீர்க்கமான கட்டத்தில்' உள்ளது. சர்வதேச நாணய நிதியம் அடுத்த வரவு-செலவுத் திட்டத்திற்கான அளவுகோலை ஏற்கனவே நிர்ணயித்துள்ளதுடன், சமாளிப்பு வியூகங்களுக்கு இடமில்லை.

அனைத்து முதலாளித்துவ சார்பு வேட்பாளர்களும் சர்வதேச நாணய நிதியக்கு அடிபணிவது தவறான சிந்தனையின் விளைவு அல்ல மாறாக அவர்களின் வர்க்க நிலையிலிருந்து பாயும் நிலைப்பாடாகும். லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் விளக்கியது போல், இலங்கை போன்ற முதலாளித்துவ வளர்ச்சி காலதாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவம், சர்வதேச நிதி மூலதனத்திற்கு தலைமுதல் கால்வரை கட்டுப்பட்டதாகும். அதனால் உழைக்கும் மக்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பூர்த்தி செய்ய அது இயல்பாகவே இலாயக்கற்றது.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, அனைத்து வெளிநாட்டுக் கடனையும் தள்ளுபடி செய்யவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை முழுமையாக நிராகரிக்கவும் அழைப்பு விடுக்கிறார்.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள கடன்களுக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பல்ல. கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை, மானியங்களை மீண்டும் வழங்கவும், விலைகளைக் குறைக்கவும், பொது சுகாதாரம் மற்றும் கல்வியை உயர்த்தவும் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் கூறுகிறோம்.

சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்தில் பெரும்பகுதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை. வாழ்க்கை நிலைமைகள் ஏற்கனவே தீகைப்பூட்டும் வகையில் மோசமடைந்துள்ள உழைக்கும் மக்கள் மீது இது இன்னும் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களும் விற்கப்பட வேண்டும் அல்லது வணிகமயமாக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் அரசாங்க துறை வேலைகள் அழிக்கப்படும். மேலும் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகள் மேலும் தனியார்மயமாக்கப்படும்.

தொழிலாளர்கள் எதிர்வரும் போராட்டங்களுக்குத் தயாராக வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களை எச்சரிக்கிறது. அவ்வாறு செய்யும்போது, தொழிற்சங்கங்களால் ​​மட்டுப்படுத்தப்பட்ட, நாசப்படுத்தப்பட்ட மற்றும் இறுதியில் மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுக்கப்பட்ட சமீபத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து தேவையான படிப்பினைகளை அவர்கள் பெற வேண்டும்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முடியும் என்ற மாயையை தொழிற்சங்கங்கள் ஊக்குவித்துள்ளன. சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுவானது, அடுத்த அரசாங்கத்தின் மீது எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதனால் சிறிதளவு கூட விட்டுக்கொடுப்புகளை செய்ய முடியாது என்பதை முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளது.

தொழிலாள வர்க்கம் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைவதன் மூலம் மட்டுமே அதன் நலன்களைப் பாதுகாக்க முடியும். உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்க அனைத்து வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும், தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளிலும் மற்றும் கிராமப்புறங்களிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கூட்டுவதற்கான அதன் அழைப்பை முன்நிலைப்படுத்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்துகிறது. முதலாளித்துவக் கட்சிகளின் அரட்டைக் கடையான பாராளுமன்றத்திற்கு எதிராக, தொழிலாள வர்க்கம் தனது வர்க்க நலன்களைப் பாதுகாக்க, ஒரு அரசியல் மூலோபாயம் மற்றும் வேலைத் திட்டத்தை வகுக்க அதன் சொந்த இடத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறது. தனியார்மயமாக்கம் வேண்டாம்! அரச நிறுவனங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க வேண்டும்! வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கு! இவை, சோசலிச வழியில் சமூகத்தை மறுசீரமைக்க, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டில் கலந்துரையாடப்பட வேண்டிய கோரிக்கைகள் ஆகும்.

Loading