ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவை இலக்கு வைத்து உக்ரேனில் தரை வழியாக தலையீடு செய்ய திட்டமிட்டுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரஷ்யாவுடன் முழுமையான போருக்கு அச்சுறுத்தும் ஓர் இராணுவ விரிவாக்கத்துக்கு பாரிய மக்கள் எதிர்ப்பையும் மீறி, இலண்டனும் பாரீஸும் உக்ரேனில் பெருமளவிலான தரைவழி தலையீட்டுக்கு திட்டமிட்டு வருகின்றன. மக்களின் முதுகுக்குப் பின்னால் கலந்துரையாடப்படும் இந்தத் திட்டங்கள், ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு அணுஆயுதப் போரைத் தூண்டுவதற்கு மட்டும் அச்சுறுத்தவில்லை. அவை ஐரோப்பிய இராணுவப் படைகளை கட்டியெழுப்ப நிதியளிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் (Jens Stoltenberg ) செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று தாலினில் உள்ள ஒரு விமானத் தளத்தில் நேட்டோ துருப்புகளை சந்திக்கிறார். [AP Photo/Leon Neal]

'ஐரோப்பிய துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்புவது பற்றிய கலந்துரையாடல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன' என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை, பிரெஞ்சு நாளிதழான லு மொன்ட் (Le Monde) வெளியிட்டுள்ளது: 'பாரிசும் லண்டனும் உக்ரேனில் இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்குவதை நிராகரிக்கவில்லை' என்று அது மேலும் தெரிவித்தது.

ஒரு பிரிட்டிஷ் இராணுவ ஆதாரத்தை மேற்கோளிட்ட லு மொன்ட் பத்திரிகையானது, 'உக்ரேன் மற்றும் பரந்த ஐரோப்பிய பாதுகாப்பின் மீது ஒருங்குவிந்த, ஐரோப்பாவில் உள்ள கூட்டாளிகளிடையே ஒரு கடுமையான மையத்தை உருவாக்கும் நோக்கம் உட்பட, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இடையே விவாதங்கள் நடந்து வருகின்றன.'

பிரிட்டனின் Storm Shadow ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர தாக்குதல்களைத் தொடங்கிய பின்னர், லண்டன் மற்றும் பாரிஸ் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இது வந்துள்ளது. பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஜோன்-நோயல் பரோட் (Jean-Noël Barrot) பிபிசியிடம் கூறுகையில், ரஷ்யா மீது 'தற்காப்புக்காக' பிரெஞ்சு SCALP ஏவுகணைகளை ஏவ உக்ரேனுக்கு பிரான்ஸ் அனுமதி கொடுத்ததாக தெரிவித்தார். இருப்பினும் ரஷ்யா மீது குண்டுவீச SCALP ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டனவா என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார். பிரெஞ்சு துருப்புக்களை களத்திற்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறு குறித்தும் வினவிய போது, 'நாங்கள் எந்த வாய்ப்பையும் நிராகரிக்கவில்லை' பரோட் பதிலளித்தார்.

ஐரோப்பிய நாடுகள் அவற்றின் பாதுகாப்பு செலவினங்களை பாரியளவில் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பரோட் 'நிச்சயமாக, நாம் இன்னும் அதிகமாக செய்ய விரும்பினால், இன்னும் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த புதிய சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டார்.

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உலகை மூன்றாம் உலகப் போருக்குள் இழுத்துச் செல்கின்றன என்பதை இந்தத் திட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன. இது உடனடியாக ரஷ்யாவுடன் ஒரு அணுவாயுதப் போரைத் தூண்டாவிட்டாலும் கூட, அது ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்துடன் ஒரு கடுமையான மோதலையும் தூண்டிவிடும். ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடந்த ஆண்டு பிரான்சின் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கில் அவரது கடைசி பெரும் அதிகரிப்புக்கு ஓய்வூதியங்களை வெட்டுவதன் மூலமாக நிதியளித்தார். வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய போராட்டங்களைத் தாக்குவதற்கு கலகம் ஒடுக்கும் பொலிஸுக்கு உத்தரவிட்டு, நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமலேயே உத்தரவாணைகள் மூலமாக இந்த வெட்டுக்களைத் திணித்த அவர், இறுதியில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரான்சின் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சார்ந்திருந்தார்.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான ஓர் ஆயுதமேந்திய மோதலுக்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய இராணுவங்களை தயாரிப்பு செய்வதற்கு அவசியமான பில்லியன் கணக்கான பவுண்டுகள் மற்றும் யூரோக்களை செலவிடுவதற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மீது ஆழமான மற்றும் கூடுதல் சமூக தாக்குதல்கள் அவசியமாகும்.

லு மொண்டின் கூற்றுப்படி, 55 சதவீத அரசுக்கு சொந்தமான, சர்வதேச பாதுகாப்பு ஆலோசனை (Défense Conseil International DCI) என்ற பிரெஞ்சு இராணுவ ஒப்பந்த நிறுவனம் தனது படைகளை உக்ரேனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. '80 சதவீத முன்னாள் சிப்பாய்களைக் கொண்ட DCI, ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் போலந்தில் செய்ததைப் போல, உக்ரேனிய சிப்பாய்களுக்கு பயிற்சியளிப்பதைத் தொடர தயாராக இருக்கும். தேவைப்பட்டால், கியேவிற்கு அனுப்பப்படும் பிரெஞ்சு இராணுவ தளவாடங்கள் பராமரிக்கப்படுவதையும் அது உறுதிப்படுத்த முடியும். இது தொடர்பாக உக்ரேனில் ஏற்கனவே இருக்கும் பிரிட்டிஷ் சக நிறுவனமான பாப்காக் தன்னிடம் உள்ள வசதிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு DCI யை அணுகியுள்ளது' என்று லு மொண்ட் தெரிவித்துள்ளது .

சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்சு பயிலகத்தின் (IFRI - French Institute of International Relations ) ஒரு மூலோபாயவாதியான எலீ டெனன்பாம் (Elie Tenenbaum) லு மொன்ட் க்கு கூறுகையில், பிரான்சும் 'மற்ற மாதிரிகளை' பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இதன் அர்த்தம், 'போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டால், நாட்டின் பாதுகாப்பையும் போர்நிறுத்தத்திற்கான ரஷ்யாவின் மரியாதையையும் உத்தரவாதம் செய்யும் பொருட்டு, உக்ரேனுக்கு மரபார்ந்த துருப்புகளை அனுப்ப' திட்டமிடுகிறது என்றும் இந்த துருப்புகள் ரஷ்யாவுடனான எல்லையில் 'கிழக்கு உக்ரேனில் நிலைநிறுத்தப்படும்' என்றும் லு மொன்ட் குறிப்பிட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தகைய திட்டங்கள் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பாரிய எதிர்ப்பை முகங்கொடுக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், யூரேசியா குழு கருத்துக்கணிப்பு ஒன்று 91 சதவீத அமெரிக்கர்களும் மேற்கு ஐரோப்பியர்களில் 89 சதவீதத்தினரும் உக்ரேனில் நேட்டோவின் தரை வழித் தலையீட்டை எதிர்க்கின்றனர் என்பதைக் கண்டறிந்தது. இருந்தபோதிலும், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் துல்லியமாக அத்தகைய திட்டங்களை தயார் செய்து கொண்டிருக்கின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான போர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் நடந்த விவாதங்களின் கவனமாக தூய்மைப்படுத்தப்பட்ட பதிப்பை லு மொண்ட் வழங்கியது. உக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ ஆதரவை குறைக்க விரும்புவதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஐரோப்பிய சக்திகள், அவற்றின் பங்கிற்கு, அவற்றின் சொந்த இராணுவ ஈடுபாட்டைத் தீவிரப்படுத்துவதன் அடிப்படையில் ட்ரம்புடன் ஓர் உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு அறிக்கையின்படி, குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு நேட்டோவில் சேர மாட்டோம் என்று கியேவ் வாக்குறுதியளிப்பதை உள்ளடக்கி, ட்ரம்பின் ஆலோசகர்கள் மத்தியில் உக்ரேனுக்கான பல்வேறு திட்டங்கள்பற்றி உலா வருவதாக குறிப்பிட்டுள்ளது. இதற்குப் பதிலாக, 'எதிர்கால ரஷ்ய தாக்குதலைத் தடுக்க அமெரிக்கா உக்ரேனுக்கு முழு ஆயுதங்களையும் தொடர்ந்து வழங்கும். அந்த திட்டத்தின் கீழ், முன்னரங்க எல்லை அடிப்படையில் மூடப்பட்டு, இரு தரப்பும் 800 மைல் இராணுவமயமற்ற மண்டலத்திற்கு உடன்படும்' என்று குறிப்பிட்டுள்ளது.

'எங்களால் பயிற்சி மற்றும் பிற ஆதரவைச் செய்ய முடியும், ஆனால் துப்பாக்கியின் குழல் ஐரோப்பியராக இருக்கப் போகிறது' என்று ட்ரம்பின் இடைக்கால குழுவின் ஒரு உறுப்பினர் கூறியதாக ஜேர்னல் மேற்கோளிட்டது. மேலும் அவர், 'உக்ரேனில் அமைதியை நிலைநாட்ட நாங்கள் அமெரிக்க ஆண்களையும் பெண்களையும் அனுப்பவில்லை. அதற்கு நாங்கள் பணம் கொடுப்பதில்லை. போலந்துக்காரர்கள், ஜேர்மானியர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களை அதைச் செய்யச் சொல்லுங்கள்' என்று குறிப்பிட்டார்.

அதுபோன்றவொரு கொள்கை உக்ரேனில் சமாதானத்திற்கு ஒரு நீடித்த அடித்தளத்தை வழங்கும் என்ற வாதம் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. உக்ரேன் நேட்டோவில் இணைவதைத் தடுக்க கிரெம்ளின் அதன் மீது படையெடுத்தது. நேட்டோ கூட்டணியில் சேரும் முடிவை இரண்டு தசாப்தங்களுக்கு கியேவ் ஒத்திவைக்கும் உடன்பாட்டை அது ஏற்கும் என்று நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை. இன்னும் பரந்தளவில், உக்ரேனிலான ஐரோப்பிய தீவிரப்பாடு சீனா, ஈரான் மற்றும் சிரியா போன்ற ரஷ்யாவின் கூட்டாளிகளுக்கு எதிரான ஐரோப்பிய போர் திட்டங்களுடன் பிணைந்துள்ளது.

இதுபோன்ற போர்கள் ரஷ்ய-உக்ரேனிய எல்லையில் எந்தவொரு பாதுகாப்பான மற்றும் நீடித்த சமாதானத்தையும் தடுக்கும் என்பதோடு, மோதலின் ஒரு வெடிப்பார்ந்த தீவிரப்பாட்டை ஏற்படுத்தும். உண்மையில், சமீபத்திய நாட்களில் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் பகிரங்க அறிக்கைகளில், பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை சுயாதீனமாக வலியுறுத்துவதற்காக, ஒரு உலகப் போரைத் தீவிரப்படுத்துவதில் பங்கேற்க உத்தேசித்திருப்பதை பிரெஞ்சு இராணுவத் தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.

பனிப்போரின் முடிவுக்குப் பின்னர் 'நாம் வடிவமைத்த' உலகம் 'சிதைந்து கொண்டிருக்கிறது' என்று பிரெஞ்சு இராணுவ தளபதி ஜெனரல் பியர் ஷில் (Pierre Schill ) கடந்த வாரம் பாரிஸில் உள்ள இராணுவப் பள்ளியில் ஒரு உரையில் பிரெஞ்சு அதிகாரிகளிடம் தெரிவித்தார். 'சூழலின் நிலையற்ற தன்மை நம்மை தீவிரமாக சிந்திக்க கட்டாயப்படுத்துகிறது. நாளை உக்ரேனுக்கோ அல்லது லெபனானுக்கோ கொடுக்கப்படும் பாதுகாப்பு உத்தரவாதங்களில் நம் பங்கு என்னவாக இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? … பயமுறுத்துவது, பயப்படுவதே எங்கள் குறிக்கோள்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரெஞ்சு ஆயுதப்படைகளின் தலைமை தளபதி தியெரி பர்க்கார்ட் (Thierry Burkhard) லு பிகாரோ க்கு (Le Figaro) கூறுகையில், நேட்டோவுடன் நெருக்கமாக வேலை செய்து, உக்ரேன், தூரக் கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு பிரான்ஸ் துருப்புகளை அனுப்ப தயாராக இருக்க வேண்டும் என்றார். 'இந்த நெருக்கடி பகுதிகள் அனைத்தும் அவற்றின் சொந்த குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன. மேலும், ஒன்று அல்லது மற்றொன்றுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தெளிவாக இல்லை. இந்த போர் அரங்குகளை எல்லாம் நாம் நிர்வகிக்க வேண்டும். … இதற்கு ஒரு உலகளாவிய தொலைநோக்கும், அனைத்திற்கும் மேலாக நமது கூட்டாளிகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையும் அவசியப்படுகிறது. எந்தவொரு தனி நாடும் இந்த நெருக்கடிகளை தனியாக நிர்வகிக்க முடியாது' என்று அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய இராணுவ தலையீட்டின் இத்தகைய அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஏனைய பிரதான சக்திகளுக்கும் இடையிலான மோதலை தீவிரப்படுத்துவது மட்டுமல்ல, மாறாக 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை உலகப் போராக வெடித்த ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களையும் தீவிரப்படுத்துகின்றன. உண்மையில், உக்ரேனில் ஐரோப்பிய தலையீடு குறித்த விவாதம், உக்ரேனின் பரந்த கனிம, தொழில்துறை மற்றும் விவசாய வளங்களை எந்த ஐரோப்பிய சக்திகள் கட்டுப்படுத்தும் என்ற கேள்வியை உடனடியாக எழுப்புகிறது.

தற்பொழுது பிரெஞ்சு இராணுவம் ஐரோப்பாவின் மேலாதிக்க பொருளாதார சக்தியான ஜேர்மனியின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. உக்ரேனில் ஐரோப்பிய தலையீட்டிற்கான திட்டங்கள் 'இந்த இராணுவ கூட்டணியின் தலைவர்களைக் குறித்த கேள்வியை எழுப்புகின்றன. ஜேர்மனி தற்போது அதன் உள்நாட்டு அரசியல் சிக்கல்களால் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக தோன்றுகிறது,' என்று IFRI இன் டெனன்பாமை மேற்கோளிட்டு லு மொன்ட் எழுதுகிறது: 'ஐரோப்பாவில் ஒரே இரண்டு அணுஆயுத சக்திகளான பிரான்சும் ஐக்கிய இராஜ்ஜியமும் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும். பால்டிக் அரசுகள், போலந்து மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளும் முக்கியமானவர்களாக இருப்பதாகத் தெரிகிறது' என்று அது தெரிவித்தது.

ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் என்னதான் போட்டி படையெடுப்புத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டாலும், முதலாளித்துவ ஊடகங்கள் உக்ரேனிய போரை போலியான பாசாங்குத்தனங்களின் கீழ் பொதுமக்களுக்கு சித்தரித்துள்ளன என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன. இது, ரஷ்யாவிடமிருந்து உக்ரேனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான போர் அல்ல. மாறாக, இது உக்ரேனிய பொருளாதாரத்தை பெரும் சக்திகளுக்கு இடையே பங்கிட்டுக் கொள்வதைத் தீர்மானிக்க, அனைத்திற்கும் மேலாக ஏகாதிபத்திய சக்திகளால் தொடுக்கப்பட்ட ஒரு போராகும்.

போர் இன்னும் கூடுதலாக பேரழிவுகரமாக விரிவாக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு, பிரான்ஸ், பிரிட்டன், ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை இந்த அபாயங்கள் குறித்து விழிப்பூட்டுவதும், ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் அவசியமாகும்.

Loading