முன்னோக்கு

ட்ரம்ப் நிர்வாகமும் உக்ரேனில் தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்தியப் போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பதவியேற்பு நாளுக்கு இன்னும் எட்டு வாரங்கள் இருக்கையில், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அதன் திட்டநிரலைத் தயாரிப்பதில் நேரத்தை வீணடிக்கவில்லை. பில்லியனர்கள் மற்றும் பாசிசவாதிகள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு அமைச்சரவையை ட்ரம்ப் கூட்டியுள்ளார். இந்த அமைச்சரவை, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை இல்லாதொழிக்கும் அதேவேளையில் புலம்பெயர்ந்தவர்கள் மீது ஒரு பாரிய தாக்குதலைக் கட்டவிழ்த்து விடும் நோக்கத்துடன் உள்ளது.

செப்டம்பர் 27, 2024 அன்று நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவரில் நடந்த சந்திப்பின் போது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கைகுலுக்குகின்றனர். [AP Photo/Julia Demaree Nikhinson]

இதற்கு விடையிறுப்பாக, பைடென் முதல் பேர்ணி சாண்டர்ஸ் வரையில், உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப் மற்றும் அவர்களின் “குடியரசுக் கட்சி சகாக்களுடன்” “ஒத்துழைப்பு” மற்றும் “சமரசம்” ஆகியவற்றை வலியுறுத்தி, வரவிருக்கும் நிர்வாகத்துடன் “வேலைசெய்ய” சூளுரைத்துள்ளனர். ஜனநாயகக் கட்சியினரின் முதன்மையான கவலை ட்ரம்பின் எதேச்சதிகார நோக்கங்கள் அல்ல. மாறாக, பைடென் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய மைய இலக்காக, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதாகும்.

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகை கூட்டத்தில் போர் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. அப்போது பைடென் “உங்களுக்கு இடமளிக்கப்படுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு” முன்வந்துள்தாக ட்ரம்பிடம் தெரிவித்தார். வெளியேறும் மற்றும் வரவிருக்கும் ஜனாதிபதிகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால், போரை மிகப்பெரியளவில் விரிவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும், குறிப்பாக, ரஷ்யாவிலுள்ள தொலை தூர நகரங்களை இலக்கு வைத்து தாக்குவதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்தும் விவாதித்தனர். இது, இப்போது அவ்வாறே நடந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ட்ரம்ப் “மூன்றாம் உலகப் போர்” அபாயம் குறித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை விடுத்துவந்த அதேவேளையில், உக்ரேனிய மோதலை ஏதோவொரு விதத்தில் பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்குக் கொண்டுவருவதை அவர் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், தூக்கியெறியப்படும் முதல் வாய்வீச்சு அறிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். எவ்வாறிருந்த போதிலும், வரவிருக்கும் நிர்வாகம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதில் வெளியேறும் நிர்வாகத்திற்கு சளைத்ததாக இருக்காது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ட்ரம்பினால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியான மைக்கேல் வால்ட்ஸ் வெளியிட்ட ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், உக்ரேன் தொடர்பாக வாரயிறுதியில் ஃபாக்ஸ் நியூஸ் க்கு அளித்த ஒரு நேர்காணலில் பின்வருமாறு அறிவித்தார்:

இது ஒரு வாய்ப்புக்கான தருணம் என்று நினைக்கும் நமது எதிரிகளைப் பொறுத்த வரையில், அவர்கள் ஒரு நிர்வாகத்தை மற்றொன்றுடன் ஒப்பிட முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தவறு செய்கிறார்கள். இந்த மாற்றத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் ஒரு அணியாக கைகோர்த்து இருக்கிறோம்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு “தடையற்ற மாற்றத்தின்” ஒரு பகுதியாக, பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் பல கலந்துரையாடல்களை நடத்தியதாக வால்ட்ஸ் கூறினார். இந்த மோதலை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இப்போதும் அழைப்புவிடுத்த அதேவேளையில், “தடுப்பை மீட்டெடுக்க” வேண்டியதன் அவசியத்தையும், “போர் விரிவாக்க ஏணியில் முன்னேற” வேண்டும் என்றும் வால்ட்ஸ் வலியுறுத்தினார். -அதாவது, ஒரு “உடன்படிக்கையை” திணிக்க ஏதோவொரு வகையான பாரிய இராணுவ ஆத்திரமூட்டல் அல்லது முன்கூட்டிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

உக்ரேனில் இடம்பெறும் மோதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாய தேவைகளுக்கு மையமாக உள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டிற்கு முக்கியமானவை என்று கருதப்படும் உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டிலும் உள்ள மூலோபாய ஆதாரவளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான முயற்சி இதன் அடித்தளத்தில் உள்ள உந்து சக்தியாக உள்ளது.

ட்ரம்பின் ஒரு முக்கிய கூட்டாளியான குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சடரீதியான நோக்கங்களை அம்பலப்படுத்தி ஞாயிறன்று அறிவித்தார்:

இந்தப் போர் பணத்தை பற்றியது. ... இரண்டு முதல் ஏழு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கனிமங்கள் மற்றும் பூமியிலுள்ள அரிய தாதுக்களை கொண்டிருக்கின்ற ஐரோப்பாவிலுள்ள பணக்கார நாடு உக்ரேன்,. ... எனவே, டொனால்ட் ட்ரம்ப் நாம் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதற்கும், அரிய பூமி கனிமங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்துவதற்கும், உக்ரேனுக்கும் நமக்கும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறார்.

கியேவில் உள்ள அமெரிக்க கைப்பாவை ஆட்சி, இந்த அடிப்படையில் ட்ரம்பிடம் ஏதாவது ஒரு ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுகோள் விடுக்க முடியும் என்று நம்புகிறது. திங்களன்று வெளியான ஒரு கருத்துரையில், “அமெரிக்கா ஏன் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், உக்ரேன் ட்ரம்பை விற்கத் தயாராகிறது” என்ற தலைப்பில், வாஷிங்டன் போஸ்ட், போர் என்பது செலவு குறைந்த பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய வாய்ப்பு என்று ட்ரம்பை நம்ப வைக்க உக்ரேனிய அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து செய்தி வெளியிட்டது.

ட்ரம்பின் கொள்கைகள் குறித்த ஊகங்களை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி, ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் சொந்த நலன்களை இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்து வருகின்றன. பிரெஞ்சு நாளிதழ் லு மொன்ட்டின் (Le Monde) தகவல்படி, “ஜனவரி 20, 2025 அன்று டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன், வகைப்படுத்தப்பட்டுள்ள கியேவுக்கான ஆதரவை அமெரிக்கா திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளின் வெளிச்சத்தில் முக்கியமான கலந்துரையாடல்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன”.

கலந்துரையாடப்படும் விருப்பத் தேர்வுகளில் ஐரோப்பிய துருப்புக்களை நேரடியாக போரில் ஈடுபடுத்துவதும் ஒன்றாகும். லு மொன்ட் செய்தியின்படி, ஆரம்பத்தில் கடந்த பெப்ரவரியில் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனால் எழுப்பப்பட்ட திட்டங்கள் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. “குறிப்பாக உக்ரேன் மற்றும் பரந்த ஐரோப்பிய பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஐரோப்பாவில் நட்பு நாடுகளின் கடினமான மையத்தை உருவாக்கும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இடையே கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன” என்று ஒரு பிரிட்டிஷ் இராணுவ ஆதாரம் வெளிப்படுத்தியுள்ளது.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஜோன்-நோயல் பரோட் கடந்த வாரம் லண்டனுக்கு விஜயம் செய்தபோது, ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்கான ஆதரவில் “சிவப்புக் கோடுகளை அமைக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ கூடாது” என்றார். பிரெஞ்சு துருப்புக்களை உக்ரேனில் நிலைநிறுத்துவது பற்றி BBC ஆல் கேட்கப்பட்டபோது, பரோட், “நாங்கள் எந்த விருப்பத் தேர்வையும் நிராகரிக்கவில்லை” என்று விடையிறுத்தார்.

உண்மையில், உக்ரேனில் நடக்கும் யுத்தம், உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில், தீவிரமடைந்து வரும் உலகப் போரின் ஒரு அங்கம் மட்டுமே. இதில் காசாவில் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய இனப்படுகொலையும், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஆதரிக்கும் மிருகத்தனமான ஏகாதிபத்திய வன்முறையின் பிரச்சாரமும், சீனாவுடனான தீவிரமடைந்துவரும் அமெரிக்க மோதலும் உள்ளடங்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, உக்ரேனிய போர் விரிவாக்கம் ஒரு இடைவிடாத தர்க்கத்தைப் பின்பற்றி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ வெற்றி என்பது ரஷ்யா சம்பந்தமாக மட்டுமல்ல. மாறாக, இந்த பரந்த போரில் அதன் தாக்கங்களுக்காகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. சனிக்கிழமையன்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் எழுதியது போல, “உக்ரேனைக் கைவிடுவது அல்லது உக்ரேனை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பிராந்திய ரீதியாகக் குறைக்கும் ஒரு ஒப்பந்தம்”, மேற்கத்திய தீர்மானம் காலாவதி தேதியுடன் வருகிறது என்பதைக் குறிக்கும்.

ட்ரம்ப் நிர்வாகமும் பாசிசவாதிகள் மற்றும் இராணுவவாதிகளின் அதன் குழுவும் அதன் பங்கிற்கு, தீவிரமடைந்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் அதிகாரத்திற்கு வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய தாக்குதலை திணிக்கும் அதன் கனவுகள் பிரமாண்டமான எதிர்ப்பை எதிர்கொள்ளும். அதன் தேசியவாத கொள்கைகள் பூகோள ரீதியாக ஒன்றோடொன்று தொடர்புடைய உலகப் பொருளாதாரத்தின் யதார்த்தத்தை எதிர்கொள்ளும். அமெரிக்க ஆளும் வர்க்கம், கடந்த 30 ஆண்டுகளாக முடிவில்லா மற்றும் விரிவடைந்து வரும் போர்களில் செய்து வருவதைப் போல, அமெரிக்க முதலாளித்துவத்தின் உள் நெருக்கடியை, அது இராணுவ பலத்தைக் கொண்டு தீர்க்க முயலும்.

முதலாம் உலகப் போருக்கு மத்தியில் எழுதுகையில், லெனின் பின்வருமாறு விளக்கினார்:

ஏகாதிபத்திய போரின் அரக்கத்தனமான பயங்கரங்களும், ஒவ்வொரு இடத்திலும் வாழ்க்கைச் செலவு உயர்வால் விளைந்த துயரங்களும் ஒரு புரட்சிகர மனோநிலையை உருவாக்குகின்றன. ஆளும் வர்க்கங்களும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் சேவகர்களும், அரசாங்கங்களும் மேலும் மேலும் ஒரு முட்டுச் சந்துக்குள் சென்று கொண்டிருக்கின்றன. பிரம்மாண்டமான கொந்தளிப்புகள் இன்றி அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது.

மீண்டுமொருமுறை, பிரம்மாண்டமான கொந்தளிப்புகளை எதிர்பார்க்க முடியும்.

Loading