முன்னோக்கு

பிரெஞ்சு அரசாங்க நெருக்கடி: பார்னியே மற்றும் மக்ரோனை வீழ்த்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பிரான்சின் பிரதமர் மிஷேல் பார்னியேரின் (Michel Barnier) சிறுபான்மை அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. பல பில்லியன் யூரோக்களை இராணுவத்துக்கும் பொலிசுக்கும் திசைதிருப்புவதற்காக, சமூக செலவினங்களை வெட்டித் தள்ளுகின்ற அதன் 2025 வரவு-செலவுத் திட்டத்திற்கு, நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கண்டுபிடிக்கத் தவறியதால், அரசாங்கத்துக்கு ஜனநாயக சட்டபூர்வமான தன்மை இல்லை என்பதை இவை அம்பலப்படுத்துகின்றன. நேற்று நடத்தப்பட்ட எலாப் (Elabe) கருத்துக்கணிப்பின்படி, பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும் என்றும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், திங்கள், ஜூன் 10, 2024. [AP Photo/Ludovic Marin]

மக்ரோன்- பார்னியே அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டிய சக்தி தொழிலாள வர்க்கமாகும். சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள், ரஷ்யாவுக்கு எதிரான போர் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு பிரான்சில் பெருவாரியான மக்கள் எதிர்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பு, பார்னியே மற்றும் மக்ரோன் இருவரையும் வீழ்த்தும் நோக்கில், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒரு இயக்கத்திற்கான தயாரிப்பு மற்றும் தொடக்கத்தில் வெளிப்பாட்டைக் காண வேண்டும்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அத்தகைய போராட்ட அமைப்பை ஜோன்-லூக் மெலோன்சோனின் (Jean-Luc Mélenchon) புதிய மக்கள் முன்னணி (NFP) மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் உள்ள அதன் கூட்டாளிகளிடம் விட்டுவிட முடியாது. கடந்த ஜூலை 7 தேர்தல்களுக்குப் பின்னர், பார்னியே அரசாங்கத்தை அமைக்க மக்ரோனுக்கு உதவுவதில் தீர்மானகரமான பாத்திரம் வகித்த புதிய மக்கள் முன்னணி, தேசிய நாடாளுமன்றத்தில் பார்னியேருக்கு எதிராக ஒரு கண்டன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலமாக அவரைக் கவிழ்க்க அச்சுறுத்தியுள்ளது. மரின் லு பென்னின் (Marine Le Pen) அதிவலது தேசிய பேரணி (RN) இந்த வாரம் பார்னியேரை எதிர்க்க அதன் நிலைப்பாட்டை மாற்றிய பின்னர், அதுபோன்றவொரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்த வாரம் அவரை பதவியிலிருந்து இறக்கக்கூடும்.

எவ்வாறிருப்பினும் மெலோன்சோன், பார்னியேரின் அரசாங்கத்தின் வீழ்ச்சியால் ஏற்படும் அரசியல் பணிகளுக்கு தொழிலாளர்களை தயாரிப்பு செய்யவில்லை. மாறாக, அவர்களை தாலாட்டி தூங்க வைக்கிறார். அணுஆயுத போருக்கு அச்சுறுத்தும் ரஷ்யா மீதான நேட்டோவின் குண்டுவீச்சுக்களுக்கு எதிராகவோ அல்லது உக்ரேனில் பிரெஞ்சு தரைப்படையின் நேரடியான தலையீட்டிற்கான திட்டங்களுக்கு எதிராகவோ அவர் தனது வாக்காளர்களை அணிதிரட்டவில்லை. உலகளாவிய வர்த்தகப் போர், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துதல், மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான பல ட்ரில்லியன் டாலர் தாக்குதல்கள் ஆகிய ட்ரம்பின் பாசிசவாத வேலைத்திட்டமானது, தொழிலாளர்கள் மீதான உலகளாவிய வர்க்கப் போரின் ஒரு பிரகடனம் என்பதையும் அவர் எச்சரிக்கவில்லை.

தொழிலாள வர்க்கம் எதிர்தாக்குதலைத் தொடுக்குவதற்குப் பதிலாக, பார்னியேரின் வீழ்ச்சி ரஷ்யாவுடனான சமாதானம் மற்றும் மெலோன்சோனின் சொந்த அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (LFI – La France Insoumise) ஆதரவிலான ஒரு அரசாங்கத்தின் மூலமாக ஒரு தேசிய அடித்தளத்தில் இந்த பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று மெலோன்சோன் கூறி வருகிறார். பாராளுமன்றத்தில் திட்டமிடப்பட்ட இறுதி 2025 வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, பார்னியே ஒரு கண்டனத் தீர்மானத்தில் வீழ்ச்சியடைவார் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயினும், வரவிருக்கும் அரசாங்க பேச்சுவார்த்தைகளில் அடிபணியா பிரான்ஸ் கட்சியின் ஆதரவிலான நிதி அமைச்சக அதிகாரத்துவவாதி லூசி காஸ்டெஸை பிரதமராக ஆதரிப்பதற்கான முன்னோக்கை மட்டுமே அவர் வழங்குகிறார்:

மிஷேல் பார்னியேரின் அரசாங்கம் டிசம்பர் 15 மற்றும் 21 க்கு இடையில் வீழ்ச்சியடையும். அரச தலைவர் [அதாவது, மக்ரோன்] வெளியேற முடிவு செய்யும் வரை, ஒரு புதிய அரசாங்கத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அடிபணியா பிரான்ஸ் கட்சியை பொறுத்த வரையில், லூசி காஸ்டெட்ஸ் (Lucie Castets) இந்த பதவிக்கான எங்கள் வேட்பாளராக இருக்கிறார், இப்போதும் இருக்கிறார்.

மாஸ்கோவுடன் வேகமாக நெருங்கி வரும் அமைதிப் பேச்சுக்களில் குறுக்கீடு செய்ததால், ரஷ்யா மீது குண்டு வீசுவதற்கு உக்ரேனிய ஆட்சிக்கு ஏவுகணைகளை வழங்குவதற்கான வாஷிங்டன் மற்றும் லண்டனின் முடிவையும் மெலன்சோன் விமர்சித்தார்:

ரஷ்யாவின் தொலைதூர இடங்களுக்கு ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளன. இது முழுமையான போரை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். பைடென் நிர்வாகத்தின் ஒரு அபத்தமான மற்றும் குற்றவியல் மூலோபாயம், உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் விளிம்பில் வருகிறது. இத்தகைய முட்டாள்தனத்தை ஆதரிப்பவர்கள் பழிவாங்கத் தயாரா?

இத்தகைய எளிமையான தேசிய நாடாளுமன்ற கணிப்புகள் முற்றிலும் யதார்த்தமற்றவை. புதிய மக்கள் முன்னணி (NFP) லூசி காஸ்டெட்ஸ்களை ஆதரிக்கிறது. ஆனால், ஒரு பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. அங்கு மக்ரோன் சார்பு மற்றும் RN பிரதிநிதிகள் இந்த கோடையில் செய்ததைப் போலவே, இப்போது காஸ்டெட்ஸ்களை தடுக்க ஒன்றிணைய முடியும். நேட்டோ ரஷ்யாவுடன் சமாதானத்திற்கு தயாராகி வரவில்லை. ரஷ்யா மீதான அமெரிக்க-பிரிட்டன் குண்டுவீச்சை விமர்சிப்பதை ட்ரம்ப் தவிர்த்துள்ளார் என்பது மட்டுமல்ல, மாறாக பிரிட்டனும் பிரான்சும் உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் அழைப்பை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: பேரழிவுக்கு இட்டுச் செல்லும் பிற்போக்குத்தனமான மற்றும் முட்டாள்தனமான கொள்கைகளில் மெலோன்சோனுக்கு ஒரு வரலாறு உள்ளது. இந்த ஆண்டு, அவர் பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் நடுத்தர வர்க்க பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து புதிய மக்கள் முன்னணி கூட்டணியை உருவாக்கினார். புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டத்தில், மெலோன்சோன் சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர் கூறியதைப் போல, உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புகளை “அமைதிகாப்பவர்களாக” அனுப்புவதற்கும், கலகம் ஒடுக்கும் போலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளைப் பலப்படுத்துவதற்கும், மற்றும் காஸா இனப்படுகொலை மீதான விமர்சனங்களை “ஆற்றில்” வீசுவதற்கும் ஆதரவளிக்க உடன்பட்டார்.

தேர்தலின் போது, மக்ரோன்-NFP கூட்டணி அதிவலதைத் தடுத்து நிறுத்துமென சூளுரைத்து, சோசலிஸ்ட் கட்சி அல்லது மக்ரோன்-ஆதரவு வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக நூற்றுக்கணக்கான அடிபணியா பிரான்ஸ் கட்சி வேட்பாளர்களை மெலோன்சோன் திரும்பப் பெற்றார்.

“செல்வந்தர்களின் ஜனாதிபதிக்கு” தொழிலாளர்களை அடிபணிய செய்ததன் மூலமாக மெலோன்சோன் துல்லியமாக எதிர்நிலையைப் பெற்றார். பிரான்சில் பாரிய வேலைநிறுத்தங்கள் இடம்பெற்ற போதிலும், பிரெஞ்சு இராணுவத்தை கட்டியெழுப்புவதற்காக, கடந்த ஆண்டு மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்க்கும் 91 சதவீத பிரெஞ்சு மக்களை மெலோன்சோன் புறக்கணித்தார். மேலும், ரஷ்யாவுக்கு எதிரான முழுமையான போரையும் இதேபோன்றே பெரும்பான்மையான மக்கள் எதிர்த்து வருகின்றனர். மாறாக, மெலோன்சோன் நூற்றுக்கணக்கான மக்ரோன் அல்லது சோசலிஸ்ட் கட்சி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உதவினார்.

தேர்தலுக்குப் பின்னர் மக்ரோன், மெலோன்சோன் உடனான தனது கூட்டணியைக் கிழித்தெறிந்து, புதிய மக்கள் முன்னணி அதிக வாக்குகளை வென்றிருந்த போதிலும் கூட, பார்னியரை பதவியில் அமர்த்தினார். பார்னியேருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாததால், மக்ரோன் அதிவலது RN கட்சியுடன் கூட்டணி வைத்தார். அதிவலது RN கட்சியும், ஆரம்பத்தில் பார்னியேருக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என்று ஒப்புக்கொண்டது. ஜனநாயகத்தின் இந்த கேலிக்கூத்துக்கு எதிராக செப்டம்பரில் ஒரு பாரிய போராட்டத்தை நடத்திய புதிய மக்கள் முன்னணி, பின்னர் மக்ரோன், பார்னியே மற்றும் லு பென்னிடம் சரணடைந்தது.

இப்போது, ​​ட்ரம்பின் தேர்தல் வெற்றி மற்றும் போர் விரிவாக்கம் ஆகியவை, ஐரோப்பிய அரசியலின் கடுமையான, அதிவலது மறுசீரமைப்புக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. ட்ரம்ப் வெற்றி பெற்ற அடுத்த நாளே ஜேர்மன் அரசாங்கம் வீழ்ந்தது. 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அரசு செலவினங்களைக் வெட்டித்தள்ளும் அமைச்சகத்தின் தலைவராக, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்துள்ளார். ஐரோப்பாவில் பாரிய வேலைநீக்கங்களும் ஆலை மூடல்களும் பெருகி வருகின்ற நிலையில், பிரதமர் பார்னியேரால் ஒரு வரவு-செலவு திட்டத்தை நிறைவேற்றவோ அல்லது பிரான்சின் 3 ட்ரில்லியன் யூரோ கடனைத் திருப்பிச் செலுத்தவோ முடியாது என்று அஞ்சி, நிதியியல் சந்தைகளும் பிரெஞ்சு அரசு கடன் மீது ஊக வணிகம் செய்யத் தொடங்கியுள்ளன.

நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை போருக்குத் திருப்பி வங்கிகளுக்குச் செலுத்தும் முயற்சியில் இது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எரியும் கேள்விகளை எழுப்புகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இழிவான முறையில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான கடந்த ஆண்டு இடம்பெற்ற பாரிய வேலைநிறுத்தங்களை இரத்து செய்த போதிலும், அவை வெடிப்பார்ந்த எதிர்ப்புக்களை முகங்கொடுக்கின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். ஆளும் வர்க்கம் பிரெஞ்சு அரசியலை மறுசீரமைக்க, எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் எலோன் மஸ்க் போன்று, ஒரு அரச அமைச்சகத்தின் தலைவராக பிரான்சின் பணக்காரரான பேர்னார்ட் ஆர்னோல்ட்டை நியமித்து, ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார அமைப்பை அழிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க முடியுமா?

இந்த வாரம், இந்த பிரச்சினைகள் ஆளும் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், பார்னியருக்கு RN ஆதரவை திடீரென விலக்கிக் கொண்ட லு பென், அவரை வீழ்த்த NFP உடன் வாக்களிப்பதாக சூளுரைத்தார். இத்தகைய சூழ்ச்சிகளுக்கு தொழிலாளர்கள் எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாது. லு பென் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தின் ஒரு மறுபிறப்பை இயக்கத்திற்கு கொண்டு வரவில்லை. ஐரோப்பிய முதலாளித்துவம் கடந்த உலகப் போருக்குப் பின்னர், 80 ஆண்டுகளுக்கு முன்பு லு பென்னின் அரசியல் மூதாதையர்கள் ஐரோப்பாவில் நாஜி ஆட்சியுடன் ஒத்துழைத்ததில் இருந்து தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக மிக வெடிக்கும் மோதலை இயக்கி வருகிறது.

இதுபோன்றவொரு சூழ்நிலையில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரேயொரு சாத்தியமான கொள்கை மட்டுமே உள்ளது. ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை, பாசிசம் மற்றும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுக்கு எதிராக, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய கிளர்ச்சி இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். அத்தகைய இயக்கத்திற்கு போராட்ட அமைப்புக்கள் அடிமட்டத்தில் இருந்து நேரடியாக கட்டியெழுப்பப்பட வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து இவை சுயாதீனமாக இருக்க வேண்டும். அதிகாரத்துவங்களின் வங்குரோத்து தேசியக் கொள்கைகள் உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்க அனுமதிக்க முடியாது.

தொழிலாளர்கள் ஆலை மூடல்கள் மற்றும் கடன் நெருக்கடிகளால் நியாயப்படுத்தப்படும் சமூக வெட்டுக்கள் மற்றும் போர் செலவினங்களை அதிகரிப்பதற்கான அழைப்புகளை நிராகரிக்க வேண்டும். உண்மையில், வங்கிகள் மற்றும் பெரிய பெருநிறுவனங்களுக்கு அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வழங்கப்பட்ட அரச நிதிகளை உள்ளடக்கிய பல டிரில்லியன் யூரோ பிணை எடுப்புகள் மூலம் கடன்களின் பெரும்பகுதி திரட்டப்பட்டது. மக்கள் மீது போர் மற்றும் சமூக தாக்குதல்களைத் திணிக்க அரசு கடன்களுக்கு எதிராக ஊக வணிகம் செய்யும் வங்கிகள் அல்லது நிதியாளர்களின் நிதிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

அத்தகைய இயக்கம், அரசு அதிகாரத்தை தொழிலாளர்களின் போராட்ட அமைப்புகளுக்கு மாற்றுகின்ற மற்றும் திவாலான முதலாளித்துவ ஒழுங்கமைப்பை ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்யும் ஒரு முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே கட்டியெழுப்பப்பட முடியும்.

மேலும் படிக்க

Loading