சோ.ச.க./IYSSE பொதுக்கூட்டம்: அமெரிக்க மற்றும் இலங்கை தேர்தல்களின் அரசியல் படிப்பினைகள்

இந்த மொழிபயெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், கொழும்பு மஹாவலி மத்திய நிலையத்தில், டிசம்பர் 7 அன்று மாலை 4 மணிக்கு, 'அமெரிக்க மற்றும் இலங்கை தேர்தல்கள்: தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் படிப்பினைகள்' என்ற தலைப்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்துகின்றன.

அமெரிக்க ஜனாதிபதியாக பாசிச டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அமெரிக்காவிலும் உலக அளவிலும் நீண்டகால விளைவுகளைக் கொண்ட ஒரு அரசியல் பூகம்பத்தைக் குறிக்கிறது. அவரது தேர்தல் வெற்றியானது அவரது வெளிப்படையான பாசிசக் கொள்கைகளுக்கான மக்கள் ஆதரவின் விளைவு அல்ல, மாறாக, அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் எரியும் சமூகப் பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக அலட்சியம் காட்டிய. ஜனநாயகக் கட்சியினதும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசினதும் வங்குரோத்தின் விளைவாகும்..

ட்ரம்பின் தேர்தல் அமெரிக்க ஜனநாயகத்தின் முழுச் சீரழிவையும், ஆளும் வர்க்கம் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி திரும்புவதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, ​​தான் பதவியேற்றதும் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்தார்.

ட்ரம்ப், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு சமூக எதிர்ப்புரட்சியை கட்டவிழ்த்துவிடுவதற்கும், தனது அரசியல் எதிரிகளை, எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிஸ்டுகள் மற்றும் மார்க்சிஸ்டுகளை குறிவைத்து தாக்கவும், நிதிய தன்னலக்குழுவின் மற்றும் தன்னலக் குழுவுக்கான ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிப்பார். அவர் தனது நிர்வாகத்தில் உள்ள அனைத்து உயர் பதவிகளையும் நிரப்புவதற்கு பாசிஸ்டுகள், பில்லியனர்கள், அவரது உதவியாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் குழுவை நியமிக்கிறார்.

ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கிற்கு எதிராக உக்ரேனில் அமெரிக்கா தலைமையிலான போர்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதே போல் சீனாவுடனான அமெரிக்க மோதலுக்கான மேம்பட்ட தயாரிப்புகளுக்கு மத்தியில் ட்ரம்பின் பதவியேற்பு நடைபெறுகிறது. டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்டிய போர்-எதிர்ப்பு தோரணையை விரைவாக கைவிட்டு, அணு ஆயுத மோதலை நோக்கிய இந்த ஈவிரக்கமற்ற நகர்வைத் தொடர்கிறார்.

அமெரிக்க தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்ப்பின் பாரிய தாக்குதல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாது. புதிய நிர்வாகம் ஜனவரி 20 அன்று பதவியேற்கும் போது அதனுடன் தொழிலாள வர்க்கத்தின் பெரும் மோதல்களுக்கு அமைக்கிறது.

பாசிசத்தைத் தோற்கடிப்பதற்கும், உலகப் போரின் ஆபத்துக்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான ஒரே வழி, சோசலிசத்திற்கான போராட்டத்தில் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதே ஆகும். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோரும் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் ஆகியோர், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கும் எதிராக பிரச்சாரம் செய்தனர். அதே போல், ஏனைய பல்வேறு முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது வக்காலத்து வாங்கிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தனர்.

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமைக்கும், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன.

ஜே.வி.பி./தே.ம.ச. எந்த வகையிலும் ஒரு சோசலிச அல்லது மார்க்சிசக் கட்சி அல்ல, மாறாக, அது சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக வேரூண்றிய இலங்கை முதலாளித்துவத்தை பாதுகாக்கின்ற கட்சியாகும். 1980களின் பிற்பகுதியில் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான அதன் கொலைகார தேசபக்தி பிரச்சாரத்தில் ஏற்கனவே தெளிவாகத் தெரிந்த அதன் பாசிச நிலைப்பாடுகள், அது பெருவணிகம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளை சுமத்த முற்படுகையில் மீண்டும் வெளிப்படும்.

உழைக்கும் மக்கள், ஜே.வி.பி./தே.ம.ச. செயல்படுத்தும் வலதுசாரி, முதலாளித்துவ சார்பு கொள்கைகளுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக, திசாநாயக்கவின் வெற்றியானது நாட்டின் பாரம்பரிய ஆளும் கட்சிகள் மீதான கடும் வெகுஜன வெறுப்பையும், பரந்த மக்கள் ஏற்கனவே எதிர்கொண்டுள்ள துன்பங்களை அவர் எப்படியாவது போக்குவார் என்ற ஏக்கத்தையும் பிரதிபலிக்கின்றது.

இந்த மாயைகள் விரைவில் களையப்படும். ஜே.வி.பி./தே.ம.ச. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கொடுத்த அதன் தேர்தல் வாக்குறுதியை கைவிட்டுள்ளதுடன் அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான வரி உயர்வு, சுகாதாரம், கல்விச் செலவினங்களில் வெட்டுக்கள், 500,000 அரச தொழில்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரச நிறுவனங்களின் (SOEs) மொத்த மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவை இதில் அடங்கும்.

தவிர்க்க முடியாத தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கு, திசாநாயக்க அரச எந்திரத்தை தயாரித்து வருகிறார். கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவர் ஏற்கனவே கைவிட்டுவிட்டார். அதே நேரம், இந்தோ-பசிபிக் முழுவதும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புகளில் இலங்கை மேலும் ஒருங்கிணைக்கப்படும் என்பதை அவர் சமிக்ஞை செய்துள்ளார்.

வரவிருக்கும் வர்க்கப் போர்களுக்கு தொழிலாளர்களை அரசியல்ரீதியாக தயார்படுத்தவும் அணிதிரட்டவும் அமெரிக்காவில் உள்ள அதன் சகோதரக் கட்சியைப் போலவே, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் தலையிட்டது. அதன் வேட்பாளர்கள் அனைத்து முதலாளித்துவ கட்சிகளிடமிருந்தும் அவற்றின் போலி-இடது வக்காலத்து வாங்கிகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும் போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார வழிமுறைகளுக்கு எதிராகவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடினர். இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சியானது கொழும்பு ஸ்தாபனத்தை முழுவதுமாக ஊடுருவியுள்ள இனவாத மற்றும் பேரினவாத அரசியலை எதிர்த்தது.

பாசிசம், போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட விரும்பும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, அமெரிக்க மற்றும் இலங்கை தேர்தல்களை அடுத்து தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அவசர பணிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காப் போராடுவதற்கு அவசியமான சோசலிச மற்றும் சர்வதேச மூலோபாயம் பற்றி கலந்துரையாடுவதற்கு நமது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திகதி மற்றும் நேரம்:  டிசம்பர் 7, சனிக்கிழமை, மாலை 4 மணி.

இடம்: மகாவலி மத்திய நிலையம், கொழும்பு.

Loading