wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 7

அக்டோபர் எழுச்சியும் சோவியத்தின் "சட்டபூர்வ தன்மையும்"

Use this version to print | Send feedback

செப்டம்பர் மாதம் ஜனநாயக மாநாடு கூட்டப்பட்டிருந்தபோது, நாம் உடனடியாக எழுச்சியை தொடக்கவேண்டும் என்று லெனின் கோரினார். "மார்க்சிச வழிவகையில் எழுச்சியை மேற்கொள்ளவேண்டும் என்றால், அதாவது ஒரு கலை போல், ஒரு கணம்கூட தாமதியாமல் நாம் எழுச்சிப் பிரிவுகளுக்கு ஒரு தலைமையிடத்தை அமைத்து, எமது படைகளை பகிர்ந்து அனுப்பி, நம்பிக்கை மிகுந்த பிரிவுகளை முக்கியமான இடங்களுக்கு அனுப்பி, அலெக்சான்டிரின்ஸ்கி தியேட்டரை சூழ்ந்துகொண்டு, பீட்டர் மற்றும் போல் கோட்டைகளை கைப்பற்றி இராணுவத்தின் உயர் அதிகாரிகளையும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும் கைதுசெய்து, அதிகாரிகள் பயிற்சிபெறுபவர்களுக்கும் எதிரிகளை நகரத்தில் முக்கிய இடங்களில் அனுமதிப்பதற்கு பதிலாக மடியவும் தயாராக இருக்கும் தாக்குதல் பிரிவுகளுக்கு எதிராக நகரவேண்டும். ஆயுதமேந்திய தொழிலாளர்களை திரட்டி அவர்களை ஒரு இறுதி மூர்க்கத்தனமான போருக்கு அழைப்பு கொடுக்க வேண்டும்; தந்தி, தொலைபேசி அலுலகங்களை உடனடியாக கைப்பற்றவேண்டும், எமது எழுச்சித் தலைமையகத்தை மத்திய தொலைபேசி அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவேண்டும்; அதை அனைத்து ஆலைகள், படைப்பிரிவுகள், அனைத்து போரிடும் இடங்கள் இவற்றுடனும் தொலைபேசியால் இணைக்க வேண்டும். எழுச்சி ஒரு கலையாக நடத்தப்பட்டால் அன்றி, தற்போதைய கணத்தில் மார்க்சிசத்திற்கு விசுவாசமாக இருப்பது, புரட்சிக்கு விசுவாசமாக இருப்பது என்பது இயலாது என்ற உண்மையை விளக்குவதற்கு நிச்சயமாக, இது எல்லாம் உதாரணம்தான்." [CW, Vol. 26, "Marxism and Insurrection" (September 13-14, 1917), p.27].

இப்பிரச்சினை பற்றிய மேற்சொன்ன முறைப்படுத்திக்கூறலானது, எழுச்சிக்கான தயாரிப்பு, அதை முடித்தல் ஆகிய இரண்டும் கட்சி அமைப்புக்களுக்கூடாக, கட்சியின் பெயரில் நடாத்தப்பட்டு பின்னர் சோவியத்துக்களின் பேராயத்தால் வெற்றியின் மீதான அங்கீகார முத்திரை இடப்படவேண்டும் என்று முன்னனுமானிக்கின்றது. மத்திய குழு இந்த முன்மொழிவை ஏற்கவில்லை. எழுச்சியானது சோவியத்துகளின் பிரிவுகளுக்குள் வழிநடத்தப்பட்டு இரண்டாம் சோவியத் பேராயத்துடனான நம்முடைய கிளர்ச்சியுடன் இணைக்கப்பட்டது. இந்தக் கருத்து வேறுபாடு பற்றிய விரிவான விளக்கம், இப்பிரச்சினை கொள்கையை பற்றி அல்ல என்றும் நடைமுறையில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்திருந்த விதிமுறை பற்றிய பிரச்சினை என்றும் தெளிவுபடுத்துகிறது.

எழுச்சியை ஒத்திப்போடுவது பற்றி எத்தகைய ஆழ்ந்த கவலையை லெனின் கொண்டிருந்தார் என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். கட்சித் தலைவர்களிடையே ஊசலாட்டம் பற்றியதில், வரவிருக்கும் தவிர்க்க இயலாத எழுச்சியை, வரவிருக்கும் சோவியத் பேராயத்துடன் இணைப்பது அவரைப் பொறுத்தவரையில் அனுமதிக்கப்படமுடியாத தாமதம், திடசித்தமில்லாமைக்கு கொடுக்கப்படும் சலுகை, ஊசலாடுவதன் மூலம் கால இழப்பு மற்றும் அடியோடு குற்றம் என்று தெரிந்தது. இந்த எண்ணத்தை செப்டம்பர் இறுதியில் இருந்து லெனின் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

"எமது கட்சித் தலைவர்களிடையேயும், மத்திய குழுவிலும் ஒரு போக்கு அல்லது ஒரு கருத்து நிலவி வருகிறது. சோவியத்துக்களின் பேராயம் கூடும் வரையில் பொறுத்திருக்கவேண்டும் என்றும் அதிகாரத்தை உடனடியாக எடுத்துக் கொள்ளுவதை எதிர்த்தும், உடனடி எழுச்சிக்கு எதிர்ப்பையும் இக்கருத்து கொண்டுள்ளது. அந்தப் போக்கு அல்லது கருத்து தோற்கடிக்கப்பட வேண்டும்." [CW, Vol.26, "The Crisis Has Matured" (September 29, 1917), p.82].

அக்டோபர் ஆரம்பத்தில் லெனின் எழுதினார்: "தாமதம் செய்வது பெரும் குற்றமாகும். சோவியத்துக்களின் பேராயத்திற்காக காத்திருப்பது சம்பிரதாயங்களின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டாகும், சம்பிரதாயங்களின் இழிவான விளையாட்டு மற்றும் புரட்சியைக் காட்டிக் கொடுத்தலாகும்." [CW, Vol.26, "Letter to the Central Committee, the Moscow and Petrograd Committees and the Bolshevik Members of the Petrograd and Moscow Soviets" (October 1, 1917), p. 141].

அக்டோபர் 8 பெட்ரோகிராட் மாநாட்டிற்கான தன் ஆய்வுக் கட்டுரையில் லெனின் கூறினார்: "நாம் கண்டிப்பாக அதற்காக காத்திருக்கவேண்டும் என்ற முன்கருத்தை கைவிடுவதற்காக சோவியத்துக்களின் பேராயத்தில் வைக்கப்படும் நம்பிக்கைகள் மற்றும் அரசியற் சட்ட பிரமைகளுக்கு எதிராக போரிடல் அவசியமானதாகும்". [CW, Vol.26, "Theses for a Report at the October 8 Conference of the Petrograd Organization, also for a Resolution and Instructions to Those Elected to the Party Congress" (September 29 - October 4, 1917), p. 144), ஜீ. 144]. இறுதியாக அக்டோபர் 24 அன்று லெனின் எழுதினார்: "எழுச்சியை இனியும் தாமதப்படுத்துதல் என்பது பெரும் தீமையை கொடுக்கும் என்பது இப்பொழுது முற்றிலும் தெளிவாகிவிட்டது. ...இன்று வெற்றியடைந்திருக்க முடியும் என்ற நேரத்தில் காலதாமதப்படுத்தும் புரட்சியாளர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது (புரட்சியாளர்கள் உறுதியாக இன்று வெற்றியடைவர்); நாளை ஒருவேளை தோல்வியை தழுவக்கூடும் என்று இருப்பதோடு, அனைத்தையும் இழக்கவும் நேரிடலாம்." [CW, Vol.26, "Letter to Central Committee Members" (October 24, 1917), pp.234 ‘35].

புரட்சியின் உலையில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கியத்தையும் கொண்டிருக்கும் இவ் அனைத்துக் கடிதங்களும் லெனினை பண்பிடுவதிலும் அப்பொழுது இருந்த நிலமையை பற்றிய மதிப்பீட்டை வழங்குவதிலும் அவை பயன்படுவதில் மிகச்சிறந்த மதிப்பைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் வெளிப்படுத்தப்படும் அடிப்படை மற்றும் எங்கும் ஊடுருவிப் பரவும் சிந்தனை - புரட்சி ஏதோ முடிவற்ற படம் என்றாற்போல், மென்ஷிவிக்குகளினதும் சமூக ஜனநாயகவாதிகளினதும் அணுகுமுறையாகிய விதிப்பயன்வாத, காலம்கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான கோபம், எதிர்ப்பு, சீற்றம் ஆகும். அரசியலில் உரிய காலம் என்பது முக்கிய காரணி என்று பொதுவாகக் கொண்டால், அதன் முக்கியத்துவம், போரிலும் புரட்சியிலும் நூறுமடங்கு அதிகரிக்கும். இன்று சாதிக்கக்கூடியதை நாளை சாதிக்கலாம் என்பது எப்பொழுதும் இயலாததாகும். ஆயுதமேந்தி எழுதல், விரோதியை சூழ்ந்து திகைக்க வைத்தல், அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது இன்று சாத்தியமாகலாம், ஆனால் நாளை அது முடியாமல் போகலாம். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது வரலாற்றின் போக்கை மாற்றுவதாகும். அத்தகைய வரலாற்று நிகழ்வு உண்மையில் ஒரு இருபத்தி-நான்கு மணி நேர இடைவெளியை சார்ந்து சுழன்று திரும்பும் என்பது யதார்த்தத்தில் உண்மையா? ஆம். அவ்வாறு முடியும். ஆயுதமேந்திய எழுச்சி என்ற நிலையை விடயங்கள் அடைந்த நிலையில், நிகழ்வுகள் அரசியல் என்ற நீண்ட அளவுகோலினால் அளக்கப்படக்கூடாது, மாறாக போர் என்ற குறுகிய அளவுகோலினால் அளக்கப்பட வேண்டும். சில வாரங்களை இழத்தல், சில நாட்களை இழத்தல், சில நேரம் ஒரு நாள் இழப்பு என்பதுகூட, புரட்சியை சரணடைதலுக்கு உட்படுத்திவிடுதல், சரணாகதி அடையச்செய்தலுக்கு ஒப்பானதாக்கிவிடும். கட்சித் தலைவர்களிடைய எதிர்ப்பு வலுவாக இருந்தது மற்றும் அத்தலைமை உள்நாட்டுப் போர்கள் உட்பட, அனைத்து போர்களிலும் பிரதான பங்கை வகிக்கிறது என்பதால், லெனின் எச்சரிக்கை ஒலியை எழுப்பியிராவிட்டால், இத்தகைய அழுத்தமும் விமர்சனமும் அவரிடத்தில் இருந்து வெளிப்பட்டிருக்காவிட்டால், அவரது உக்கிரமான மற்றும் ஆர்வமிக்க புரட்சிகர அவநம்பிக்கையாக அது இருந்திராவிட்டால், மிக தீர்மானகரமான தருணத்தில் தன்னை முன்னணியில் இருத்திக் கொள்ளுவதில் கட்சி தோல்வியடைந்திருக்கக்கூடும்.

அதே நேரத்தில், புரட்சிக்கான தயாரிப்பை மேற்கொண்டு, இரண்டாம் சோவியத் பேராயத்திற்கு தயாரிப்பு செய்தல் என்ற மூடுதிரையின் கீழ் செயல்படுத்துவது, அதைக் காப்பதற்காக என்ற கோஷத்தின் கீழ் செயல்படுத்துவது என்பது நமக்கு மதிப்பிற்கப்பாற்பட்ட நலன்களை கொடுக்கும் என்பதும் மிகத் தெளிவுதான். பெட்ரோகிராட் சோவியத் என்ற முறையில் கெரென்ஸ்கியின் உத்தரவான கோட்டைக் காவற்படையில் மூன்றில் இரு பகுதியினரை முன்னணிக்கு அனுப்பவேண்டும் என்பதை நாம் செயலற்றதாக்கியதில் இருந்து, உண்மையில் நாம் ஆயுதமேந்திய எழுச்சி என்ற நிலைமைக்குள்தான் நுழைந்திருந்தோம். பெட்ரோகிராடில் அப்பொழுது இல்லாமல் இருந்த லெனின் இந்த உண்மையின் முழு முக்கியத்துவத்தை மதிப்பிடமுடியாது. எனக்கு நினைவுள்ளவரை, அக்காலத்தில் அவர் எழுதிய கடிதங்கள் அனைத்திலும் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆயினும்கூட, பெட்ரோகிராட் முகாம் மாற்றப்படவேண்டும் என்பதை நாம் எதிர்த்த, (அக்டோபர் 16ல்) புரட்சிகர இராணுவக் குழுவைத் தோற்றுவித்த அந்தக்கணத்தில், அக்டோபர் 25 எழுச்சியின் விளைவு முக்கால் பகுதி அல்லது அதற்கும் மேலாகவே தீர்க்கப்பட்டுவிட்டது, அனைத்து படைப் பிரிவுகள் நிறுவன அமைப்புக்கள் ஆகியவற்றில் நமது ஆணையர்களை நியமித்தததன்மூலம்¢ பெட்ரோகிராட் பகுதியின் இராணுவத் தலைமை மட்டுமின்றி, அரசாங்கமும் கூட முற்றிலுமாய் தனிமைப்பட்டது. உண்மையில் இங்கு நாம் ஒரு ஆயுதமேந்திய எழுச்சியைத்தான் கொண்டிருந்தோம்; அதாவது தற்காலிக அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோகிராட் படைப்பிரிவுகள் மேற்கொண்டிருந்த ஆயுதமேந்திய ஆனால் குருதி சிந்தாத எழுச்சி எனலாம்; இது புரட்சி இராணுவக் குழுவின் தலைமையின்கீழ், அரச அதிகாரத்தை இறுதியில் நிர்ணயிக்கக் கூடிய இரண்டாவது சோவியத் காங்கிரசை பாதுகாப்பை தயார்செய்தல் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது. தன்னுடைய ஊகத்தின்படி, மாஸ்கோவில் குருதி சிந்தாத வெற்றியை அடையலாம், எனவே அங்கு எழுச்சியை தொடங்கலாம் என்ற லெனினுடைய ஆலோசனை, அவர் தலைமறைவாக இருந்த காலத்தில், அக்டோபர் மாதத்தின் நடுப் பகுதியில் தலைநகரின் கோட்டைக் காவற்படையில் "அமைதியான" எழுச்சிக்கு பின்னர், மனநிலையில் மட்டுமல்லாமல் இராணுவத்தின் கீழ் மட்ட வீர்களின் மத்தியில் அமைப்பு ரீதியான உறவுகளிலும் கூட, மற்றும் இராணுவ அதிகாரப் படிமுறை அமைப்புக்களிலும் ஏற்பட்டிருந்த தீவிரத் திருப்பம் எவ்வாறு முற்போக்குத்தன்மைக்கு சென்றிருந்தது என்பதை மதிப்பிடும் வாய்ப்பு அவருக்கு இல்லாமற் போனது என்ற உண்மையிலிருந்து ஊற்றெடுத்தது. படைப்பிரிவுகள், புரட்சிகர இராணுவக் குழுவின் கட்டளைகளின்படி நகரத்தில் இருந்து புறப்பட மறுத்த கணத்தில் இருந்து, தலைநகரில் நமக்கு வெற்றிகரமான எழுச்சி ஏற்பட்டுவிட்டது; மேலிருக்கும் எஞ்சியிருந்த முதலாளித்துவ ஜனநாயக அரசு வடிவமைப்பில் இருந்து சிறிதளவே கண்காணிப்பு இருந்தது. அக்டோபர் 25 எழுச்சியானது ஒரு துணைத் தன்மை உள்ளதாகத்தான் இருந்தது. இதனால்தான் இது துல்லியமாக வலிகுறைந்ததாக இருந்தது. ஆனால் பெட்ராகிராடில் மக்கள் கமிசார்கள் அவையின் அதிகாரம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் மாஸ்கோவிலோ, போராட்டம் நீடித்தும், குருதி சிந்திய வகையிலும் இருந்தது; பெட்ராகிராட் மாற்றத்திற்கு முன்பாக மாஸ்கோவில் எழுச்சி தொடக்கப்பெற்றிருந்தால், அது இன்னும் கூடுதலான காலத்திற்கு நீண்டிருக்கும், விளைவும் ஐயத்திற்குரியதாக இருந்திருக்கும். மாஸ்கோவில் தோல்வி என்றால் பெட்ரோகிராடில் ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவ்வகையிலும் வெற்றிவருவது என்பது எவ்வகையிலும் விலக்கப்படவில்லை. ஆனால் நிகழ்வுகள் உண்மையில் நடந்தவிதமானது, மிகவும் சிக்கனமாகவும், மிகவும் சாதகமாகவும் மிகக் கூடுதலாக வெற்றிகரமானதாகவும் நிரூபித்தது.

அதிகாரம் கைப்பற்றப்படுவது, இரண்டாம் சோவியத் பேராயத்தின் தொடக்கத்துடன் ஒரே காலத்தில் நிகழச்செய்வது ஏறத்தாழ இயலக்கூடியதாக இருந்தது, இதற்குக் காரணம் அமைதியான, கிட்டத்தட்ட "சட்ட பூர்வமான" ஆயுதமேந்திய எழுச்சி, ஏற்கனவே குறைந்தபட்சம் பெட்ரோகிராடிலாவது, முக்கால் பகுதி, இல்லாவிட்டால் பத்தில் ஒன்பது பகுதி கூட அடையப்பட்டுவிட்டது என்பதால் மட்டும் தான். இந்த எழுச்சியை "சட்ட பூர்வமானது" என்று நாம் குறிப்பிடுவது அது இரட்டை அதிகாரத்தின் "சாதாரணமாக" நிலைமையின் வளர்ச்சி என்ற அர்த்தத்தில் ஆகும். பெட்ரோகிராட் சோவியத்தில் சமரசவாதிகள் ஆதிக்கம் செலுத்திய காலத்திலேயே, அடிக்கடி அரசாங்கத்தின் முடிவுகளை சோவியத் திருத்தியிருக்கிறது அல்லது மாற்றியிருக்கிறது. வரலாற்று ஏடுகளில் "கெரென்ஸ்கியின் காலம்" என்று குறிக்கப்பட்டுள்ள ஆட்சிக்காலத்தின் அரசியலமைப்பு நடைமுறையாக இது இருந்தது என்றுகூடக் கூறலாம். போல்ஷிவிக்குகளாகிய நாம் பெட்ரோகிராட் சோவியத்தில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபோது, நாம் இரட்டை அதிகாரத்தின் வழிவகைகளை தொடரவும், ஆழப்படுத்தவும் செய்தோம். படைகள் முன்னணிக்கு அனுப்பப்படவேண்டும் என்ற உத்தரவை மாற்றும் பொறுப்பை நாமேதான் மேற்கொண்டோம். அந்தச் செயலின்மூலமே, அதிகாரபூர்வமான இரட்டை ஆட்சிமுறையின் மரபுகளினாலும் வழிவகைளினாலும் பெட்ரோகிராட் காவற்படைப்பிரிவுகளின் உண்மையான எழுச்சியை மூடிமறைத்தோம். அத்தோடு நின்றுவிடவில்லை. இரண்டாம் சோவியத் பேராயத்திற்கு அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்ற பிரச்சினையை சம்பிரதாயமாக எமது போராட்டமாக ஏற்றுக் கொண்டாலும், நாம் ஏற்கனவே இரட்டை அதிகாரத்தில் இருந்த மரபுகளை வளர்த்து, அவற்றை ஆழ்ந்த தன்மை உடையதாகச்செய்து, அனைத்து ரஷ்ய அளவில் போல்ஷிவிக் எழுச்சிக்கு சட்டபூர்வமான சோவியத் கட்டமைப்பை தயாரித்தும் விட்டோம்.

சோவியத் அரசியலமைப்பு பிரமைகள் பற்றிக் கூறி, பரந்தமக்களை நாம் தாலாட்டி உறங்கவைக்கவில்லை; ஏனெனில் இரண்டாம் சோவியத் பேராயத்திற்கான ஒரு போராட்டம் என்ற முழக்கத்தில் நாம் எமது பக்கத்திற்கு புரட்சிப் படையின் துப்பாக்கிகளை வென்று எமது வெற்றிகளை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தியிருந்தோம். இதைத்தவிர, சமரசவாதிகளை, நம்முடைய எதிரிகளை சோவியத் சட்ட நெறி என்ற பொறிக்குள்ளும் சிக்கவைப்பதில் நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வெற்றிபெற்றோம். அரசியலில் தந்திரங்களை கையாள்வது என்பது, அதிலும் புரட்சியில் எப்பொழுதுமே ஆபத்தானதாகும். எதிரியை ஏமாற்றுவதில் நீங்கள் தோற்றுவிடக்கூடும்; ஆனால் அதற்குப்பதிலாக உங்களைப் பின்பற்றும் மக்கள் ஏமாந்துவிட நேரிடும். மிகச்சிறந்த மூலோபாய வல்லுநர்களால், வகுக்கப்பட்ட உள்நாட்டுப்போரை தவிர்ப்பதற்கான கைதேர்ந்த திட்டம் என்பதால் மட்டும், "நம்முடைய தந்திரம் 100 சதவிகிதம் வெற்றியடைந்தது எனக் கூறுவதற்கில்லை, மாறாக சமரசவாதிகளின் ஆட்சி அதன் வெளிப்படையான முரண்பாடுகளால் சிதறுண்டுபோனதிலிருந்து இயல்பாகவே பெறப்பட்டதன் காரணத்தாலாகும். தற்காலிக அரசாங்கம் காவற்படை அகற்றப்பட வேண்டும் என்று விரும்பியிருந்தது. படைவீரர்கள் முன்னணிக்கு செல்லவும் விரும்பவில்லை. இந்த இயல்பான விருப்பமின்மைக்கு நாம் ஓர் அரசியல் வெளிப்பாட்டைக் கொடுத்தோம்; அதற்கு ஒரு புரட்சிகர இலக்கையும், ஒரு "சட்ட பூர்வமான" திரையையும் அளித்தோம். அதன்மூலம், முன்னோடியில்லாத வகையில் படைமுகாம்களில் நாம் ஒருமித்த ஆதரவை அடைந்தோம்; அதை பெட்ரோகிராட் தொழிலாளர்களுடன் நெருக்கமாக பிணைத்தோம். இதற்கு மாறாக, எமது எதிராளிகளோ அவர்களுடைய மோசமான நிலை, முட்டாள்தனம் இவற்றின் காரணமாக, சோவியத் என்ற திரையை, அதன் பெயரளவிலான மதிப்பைக் கொண்டு ஏற்க விருப்பம் கொண்டனர். தாங்கள் ஏமாற்றப்பட வேண்டும் என்று எண்ணி ஏங்கினர். அவர்களுக்கு அதிகமாக இருந்தது; அத்தகைய அவர்கள் விருப்பத்தை அவர்களே நிறைவேற்றிக்கொள்ள நாம் அதிக வாய்ப்புக்களை கொடுத்தோம்.

சோவியத் சட்டபூர்வமான தன்மைக்காக சமரசவாதிகளுக்கும் எமக்குமிடையே ஒரு போராட்டம் இருந்தது. பரந்தமக்களுடைய மனத்தில் சோவியத்துக்கள்தாம் அனைத்து அதிகாரத்தின் மூலாதாரம் என்று இருந்தது. சோவியத்துக்களில் இருந்துதான் கெரென்ஸ்கி, டெசெரேடெல்லி, ஸ்கோகிலேவ் ஆகியோர் வந்தனர். ஆனால் நாமும் "அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே" என்ற எமது அடிப்படை முழக்கத்துடன் சோவியதுக்களுடன் நெருக்கமாகப் பிணைந்திருந்தோம். முதலாளித்துவ வர்க்கத்தினர் தங்களின் மரபுவழி அதிகாரத்திற்கு வரும் உரிமையை அரசு டுமாவில் இருந்து பெற்றனர். சமரசவாதிகள் தாங்கள் அதிகாரத்தை பின் தொடர்ந்ததை சோவியத்துக்களிடம் இருந்து பெற்றனர்; நாமும் அவ்வாறேதான் பெற்றோம். ஆனால் சோவியத்துக்களை ஒன்றும் இல்லாமற் செய்துவிடவேண்டும் என்று சமரசவாதிகள் முயன்றனர்; நாமோ சோவியத்துக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு பாடுபட்டோம். சமரசவாதிகள் சோவியத்தின் பாரம்பரியங்களில் இருந்து முறித்துவிடாமல் அதை நாடாளுமன்ற வாதத்துடன் இணைப்பதற்காக ஒரு பாலத்தை கட்டுவதற்கு அவசரப்பட்டனர். இதைக் கருத்திற்கொண்டு அவர்கள் ஜனநாயக மாநாடு அவையை கூட்டி, நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பை உருவாக்கினர். நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பில் சோவியத்துக்கள் பங்கேற்பது அவ்வழிவகைக்கு ஒப்புதல் கொடுப்பது போன்ற தோற்றத்தை கொடுத்தது. சோவியத் சட்டபூர்வமான தன்மை என்ற இரையைக் காட்டி, புரட்சியை கைப்பற்ற சமரசவாதிகள் முயன்றனர்; தூண்டிலில் அது விழுந்ததும் அதை முதலாளித்துவ நாடாளுமன்ற வாதத்தின் வழிக்குள் இழுத்திட முற்பட்டனர்.

ஆனால் நாமும் சோவியத் சட்டபூர்வமான தன்மையை பயன்படுத்திக் கொள்ளுவதில் ஆர்வத்தை கொண்டிருந்தோம். ஜனநாயக மாநாட்டின் முடிவில் சமரசவாதிகளிடம் இருந்து ஒரு இரண்டாம் சோவியத் பேராயம் கூட்டப்படும் என்ற உறுதிமொழியை பிழிந்து எடுத்தோம். இந்த காங்கிரஸ்தான் அவர்களை மிகப்பெரிய தர்மசங்கட நிலையில் தள்ளியது. ஒரு புறத்தில், சோவியத் சட்டபூர்வமான தன்மையை முறித்துக் கொள்ளாமல் அதைக் கூட்டுவதை அவர்கள் எதிர்க்க முடியாது; மறுபுறமோ, அதன் சேர்க்கையின் தன்மையினால் பேராயம் அவர்களுக்கு சிறிதே நன்மையளிக்கும் என்று முன்னறிகுறிகாட்டியதால் அவர்கள் உதவ முடியாது. இதன் விளைவாக, இன்னும் கூடுதலான வலியுறுத்தல் மூலம், நாம் இரண்டாம் பேராயம்தான் நாட்டிற்கு உண்மையான தலைமை என்ற முறையில் கூட்டப்படவேண்டும் என்றும் நம்முடைய முழுத் தயாரிப்பு பணியையும் ஆதரவையும் சோவியத்துக்களின் பேராயம் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் தவிர்க்கமுடியாத தாக்குதல்களில் இருந்து காக்கப்படுவதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டோம். சமரசவாதிகள் சோவியத்துக்களில் இருந்து புறப்படும் நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பு என்ற தூண்டில் மூலம் நம்மை சோவியத் சட்ட முறைமைக்கு தூண்டில் போட்டு இழுக்க முற்பட்டார்கள் என்றால், நாம் நம்முடைய பங்கிற்கு அதே சோவியத் சட்டபூர்வதன்மை என்ற பெயரில் இரண்டாம் பேராயம் மூலமாக அவர்களை பொறியில் சிக்கவைக்க முற்பட்டோம். கட்சியால் அதிகாரம் கைப்பற்றப்படும் என்ற அப்பட்டமான முழக்கத்தின் கீழ் ஆயுதம்தாங்கிய எழுச்சிக்கு தயார் செய்வது ஒன்று, ஆனால் தயாரித்துவிட்டு எழுச்சியை சோவியத்துக்களின் பேராயத்தின் உரிமைகளை காப்பாற்றுவதற்காக என்ற முழக்கத்தின் கீழ் செய்வது என்பது, வேறு விஷயம். இவ்வகையில், இரண்டாம் சோவியத் பேராயம் அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றிய பிரச்சினையை ஏற்றுக் கொள்ளுவது, காங்கிரசே அதிகார பிரச்சினையை தீர்த்துவிடும் என்ற கபடமற்ற நம்பிக்கை ஒன்றும் சம்பந்தப்படவில்லை. சோவியத் வடிவமைப்பை பற்றிய அத்தகைய மூடவழிபாடு நமக்கு முற்றிலும் விருப்பத்திற்கு ஒவ்வாதது. அதிகாரத்தை வெற்றி கொள்ளுவதற்கு தேவையான அனைத்து பணிகளும், அரசியல் மட்டுமின்றி, அமைப்பு ரீதியான, இராணுவம்-தொழில்நுட்ப ரீதியான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவையான அனைத்து வேலைகளும் முழு வேகத்தில் நடைபெற்று வந்தன. ஆனால் இந்தப் பணிகள் அனைத்திற்கும் சட்டபூர்வ மறைப்பு ஒன்று வரவிருக்கும் காங்கிரஸ் பற்றிய குறிப்பின்மூலம் அளிக்கப்பட்டது; அதுதான் அதிகாரப் பிரச்சினைக்கு தீர்வை காணும் என்றும் கூறப்பட்டது. இத்தகைய வழியில் தாக்குதலை முழுமையாக நடத்திக் கொண்டே, நாம் ஏதோ பாதுகாத்துக் கொள்ளுவதற்கு பாடுபடுவதாக காட்டிக் கொண்டோம்.

மறுபக்கத்தில், இதற்கு எதிரிடையாக தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று கரிசனையோடு கருதியிருந்தால், தற்காலிக அரசாங்கம், சோவியத்துக்களின் பேராயத்தை தாக்கி, அது கூடுவதை தடைசெய்து, அரசாங்கத்திற்கு பெரும் பாதிப்பைத் தரக்கூடிய உந்துதுதலான ஆயுதமேந்திய எழுச்சியை எதிர்த்தரப்பிற்கு கொடுத்திருக்க வேண்டும். மேலும், நாம் தற்காலிக அரசாங்கத்தை சாதகமற்ற அரசியல் நிலைமையில் மட்டும் வைத்துவிடவில்லை; அவர்களுடைய சோம்பேறித்தனமான, குழப்பமடைந்த மனங்களை தாலாட்டி உறங்க வைத்திருந்தோம். இவர்கள் நாம் சோவியத் நாடாளுமன்ற முறையைப் பற்றித்தான் அக்கறை கொண்டிருந்தோம் என்று தீவிரமாக நம்பினர்; பெட்ரோகிராட், மாஸ்கோ சோவியத்துக்களில் ஏற்கப்பட்டிருந்த தீர்மானங்களின் அடிப்படையில் ஒரு புதிய பேராயம், அதிகாரம் பற்றிய புதிய தீர்மானத்தை ஏற்கும் என்றும், அதைப் பின்னர் அரசாங்கம் புறக்கணிக்கலாம் என்றும், நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பு, வரவிருக்கும் அரசியல் அமைப்பு நிர்ணய சபை இரண்டையும் அதற்கு போலிக் காரணமாக பயன்படுத்தப்பட முடியும் என்றும், அதையொட்டி நம்மை ஏளன நிலைக்குத் தள்ளிவிடலாம் என்றும் நினைத்தனர். இத்தகைய வழிவகையைத்தான் அறிவார்ந்த மத்தியதர அறிவாளிகள்போல் நடிக்கும் முட்டாள்கள் கடைப்பிடிக்க இருந்தனர் என்பதற்கு கெரென்ஸ்கியின் மறுக்க முடியாத சான்று உள்ளது. தன்னுடைய நினைவுக் குறிப்புக்களில், அக்டோபர் 25 அன்று, தன்னுடைய படிப்பு அறையில், அவருக்கும் டான் இன்னும் மற்றவர்களுக்கும் இடையே அப்பொழுது ஏற்பட்டுவிட்ட ஆயுதமேந்திய எழுச்சியை பற்றி சீற்றமான விவாதங்கள் இருந்தன என்று கெரென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். "முதலில் என்னைவிட அவர்களுக்கு கூடுதலாக எல்லாம் தெரியும் என்று டான் அறிவித்தார்; என்னுடைய "பிற்போக்கு அலுவலர்களிடம்" இருந்து வரும் அறிக்கைகளின் செல்வாக்கின் கீழ், நான் நிகழ்வுகளைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிவருகிறேன் என்று அவர் கூறினார். குடியரசின் பெரும்பாலான சோவியத்துக்கள் ஏற்றிருந்த தீர்மானம் பற்றி எனக்கு அவர் கூறினார்; அது அரசாங்கத்தின் 'சுயமதிப்பை தாக்கியது என்றும், அது பெரும் மதிப்புடையது, மக்களுடைய உள்ளத்தில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு மிகவும் அடிப்படையானது, அதன் 'விளைவு மாற்றம் ஏற்கனவே உணரப்பட்டுவிட்டது' என்றும் போல்ஷிவிக்குகளின் பிரச்சாரம் 'மிக விரைவில் சரிந்து விடும்' என்றும் அவர் கூறினார். இதற்கு மாறாக, டானின் சொற்களிலேயே, போல்ஷிவிக்குகள் சோவியத் தலைவர்களின் பெரும்பான்மையினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் 'சோவியத் பெரும்பான்மையின்' விருப்பத்திற்கு அடிபணிந்து நிற்பதற்குத் தயாராக இருப்பதும், "நாளையே" தங்களுடைய விருப்பத்திற்கும் அனுமதிக்கும் உட்படாமல் வெடித்தெழும் எழுச்சியை அடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுவர் என்ற கருத்து இருந்தது! போல்ஷிவிக்குகள் தங்களுடைய இராணுவப் பிரிவுகளை "நாளையே" (எப்பொழுதும் நாளை!) கலைத்துவிடுவர் என்று குறிப்பிட்ட பின்னர், முடிவாக எழுச்சியை அடக்க நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் "மக்களுக்கு எரிச்சல் ஊட்டியுள்ளதாகவும், என்னுடைய குறுக்கீட்டினால் நான் பொதுவாக சோவியத் பிரதிநிதிகளை போல்ஷிவிக்குகளுடன் எழுச்சியை கரைத்துவிடுவதற்காக நடத்தும் பேச்சு வார்த்தைகளை வெற்றியுடன் முடிவுறச் செய்யாமல் இடையூறுக்குள்ளாக்கி விடுகிறேன் என்றும் அறிவித்தார்.

இந்த சித்திரத்தை முடிவு செய்வதற்கு, இக்குறிப்பிடத்தக்க தகவலை டான் எனக்குச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்திலேயே, "செங்காவலர்களின்" ஆயுதமேந்திய பிரிவுகள் அரசாங்க கட்டிடங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றி ஆக்கிரமித்திருந்தன என்பதை நான் குறிப்பிடவேண்டும். டானும் அவருடைய தோழர்களும் குளிர்கால அரண்மனையில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்திற்குள்ளேயே, தற்காலிக அரசாங்கத்தின் கூட்டத்தில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த அமைச்சர் கார்ட்டஷேவ் மில்லியோனி தெருவில் கைது செய்யப்பட்டு நேரடியாக ஸ்மோல்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்; அங்கு போல்ஷிவிக்குகளுடன் தன்னுடைய சமாதானப் பேச்சு வார்த்தைகளை தொடர்வதற்காக டான் வந்தார். அந்த நேரத்தில் போல்ஷிவிக்குகள் மிகப் பெரிய ஆற்றலுடனும் திறமையுடனும் தங்களை நடத்திக் கொண்டிருந்தனர் என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எழுச்சி முழு வேகத்தில் இருந்தபோது, "செம்படையினர்" நகரம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இக்காரணத்திற்காகவே அனுப்பப்பட்டிருந்த சில போல்ஷிவிக்குத் தலைவர்கள் "புரட்சிகர ஜனநாயகத்தின்" பிரதிநிதிகள் பார்க்க வேண்டும், ஆனால் குருடர்களாக இருக்க வேண்டும், கேட்கவேண்டும், ஆனால் செவிடர்களாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் பெரும் வெற்றி பெற்றனர். இரவு முழுவதும் இந்தக் கெட்டிக்காரர்கள் எழுச்சி பற்றிய சமரசத்திற்கும் எழுச்சியை அழிப்பதற்கும் அடிப்படையாக உதவும் என்று கருதப்பட்ட பல்வேறு சூத்திரங்கள் மீதாக முடிவிலா வகையில் மற்றவர்களுடன் சச்சரவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த 'பேச்சு வார்த்தைகள்' வழிமுறையில் போல்ஷிவிக்குகள் நிறைய கால அவகாசத்தை பெற்றனர். ஆனால் சமூகப் புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகளின் போரிடும் படைகள் காலத்தே திரட்டப்படவில்லை. ஆனால் இதுதான் நிரூபிக்கப்பட்ட விஷயமாகும்." (A. Kerensky, "From Mar," pages 197-98)

மிக நன்றாகவே எழுதப்பட்டுள்ளது! நிருபிக்கப்பட்டுவிட்டது (Q.E.D)! மேற்கூறிய நிகழ்வுக் குறிப்பில் இருந்து சோவியத்தின் சட்டபூர்வதன்மை பற்றிய தூண்டிலில் சமரசவாதிகள் நன்கு அகப்பட்டுக் கொண்டிருந்தனர். சில போல்ஷிவிக்குகள் சிறப்பாக, மென்ஷிவிக்குகளையும், சமூகப் புரட்சியாளர்களையும் எழுச்சியை அழிப்பதில் தீவிரம் காட்டுவோம் எனக்கூறுவதற்காக வேடம் புனைந்து ஏமாற்றினர் என்பது உண்மையல்ல. உண்மையில் போல்ஷிவிக்குகள் தீவிரமான முறையில் எழுச்சியை தகர்க்கவேண்டும் என்பவர்களுடன் மற்றும் அனைத்துக் கட்சிகளும், சமாதான முறையில் மேற்கொள்ளக்கூடிய சோசலிச அரசாங்க சூத்திரத்தை நம்பியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தனர். ஆயினும், புறநிலைரீதியாக, இந்த நாடாளுமன்றவாதிகள் எழுச்சிக்கு ஐயத்திற்கிடமின்றி ஒரு பணியைத்தான் செய்தனர்; தங்களுடைய பிரமைகளாலேயே, எதிரியைப் பற்றிய பிரமைகளாலேயே உணர்வுகளுக்கு உணவளித்தனர். ஆனால் இப்பணியை அவர்கள் செய்ய முடிந்ததற்கு, கட்சி அவர்கள் ஆலோசனைகள், எச்சரிக்கைகள் ஆகியவற்றை மீறி, எழுச்சியை சிறிதும் தளர்வற்ற ஆற்றலுடன் மேற்கொண்டு இறுதிவரை கொண்டுசென்றதுதான் காரணமாகும்.

சிறிய, பெரிய நிகழ்வுகளின் தொகுப்பு என்ற அசாதாரணமான சூழ்நிலையின் இணைப்பு எங்கும் படர்ந்து நிறைந்திருந்த இச்செயலின் வெற்றியை உறுதியாக்கத் தேவைப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, இனிப் போரிடத் தயாராக இல்லை என்ற நிலையில் இருந்த ஒரு இராணுவமும் தேவைப்பட்டது. புரட்சியின் முழுப்போக்குமே, அதுவும் பெப்ரவரியில் இருந்து அக்டோபர் முடிய ஆரம்பக் கட்டங்களில், மில்லியன் கணக்கான அதிருப்தியடைந்திருந்த விவசாயிகள் அடங்கிய இராணுவம் நாட்டில் புரட்சிக் காலத்தில் இல்லாமல் இருந்திருந்தால், நிலைமை வேறுவிதமாக இருக்கும் என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். இந்த நிலைமைகள்தான் பெட்ரோகிராட் படைமுகாமை கொண்டு நடத்திய வெற்றிகரமான சோதனையை இறுதியில் முடிவிற்கு கொண்டுவரமுடிந்தது; அந்த எழுச்சிதான் அக்டோபர் புரட்சியின் வெற்றிகரமான முடிவை முன்கூட்டியே நிர்ணயித்தது.

இத்தகைய வினோதமான இணைப்பான ஒரு "வறண்ட", கிட்டத்தட்ட புலனாகாத எழுச்சி மற்றும் கோர்னிலாவ் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுக்கு எதிரான சோவியத்தின் சட்டபூர்வதன்மையை பாதுகாப்பில் இணைத்துக் கூறுதலை ஒரு புனிதமான விதியென்று சொல்லிவிட முடியாது. மாறாக இத்தகைய பரிசோதனை வேறு எங்கும் இந்த வடிவமைப்பில் செயல்படுத்தப்படமுடியாது என்பதை நாம் உறுதியுடன் கூறமுடியும். ஆனால் இதைப்பற்றிய கவனமான ஆய்வு மிக இன்றியமையாததாகும். ஒவ்வொரு புரட்சியாளருக்கும் எவ்வாறு பலவகையான வழிமுறைகளும் செயற்பாடுகளும் இயக்கப்பட முடியும் என்பதை அவர் கண் முன் வைத்து அவருடைய தொடுவானத்தின் பரப்பை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு; ஆனால் இலக்கு மனத்தில் தெளிவாகக் கொள்ளப்பட்டு நிலைமை மிகச் சரியாக மதிப்பீடு செய்யப்படவேண்டும்; போராட்டத்தை இறுதிவரை நடத்திச் செல்லும் உறுதிப்பாடு இருக்க வேண்டும்.

மாஸ்கோவில் எழுச்சி இன்னும் நீடித்து கூடுதலான தியாகங்களுக்கும் உட்பட நேர்ந்தது. படைகளை பொறுத்தவரையில், சில பிரிவுகளை முன்னணிக்கு அனுப்பவேண்டும் என்ற முடிவில், மாஸ்கோ காவற்படை முகாம் பெட்ரோகிராட் காவற்படைமுகாம் போல் அதே புரட்சி தயாரிப்பை கொண்டிருக்கவில்லை என்பது ஒரு பகுதியான விளக்கமாகும். பெட்ரோகிராடில் ஆயுதமேந்திய புரட்சி என்பது இரண்டு தவணைகளில் செய்யப்பட்டன என்பதை நாம் ஏற்கனவே கூறியுள்ளோம்; அதை மீண்டும் கூறுகிறோம்: முதலாவதாக, அக்டோபர் முன்பகுதியில் சோவியத்தின் முடிவிற்கு கீழ்ப்பணிந்த பெட்ரோகிராடு படைப் பிரிவுகள் அத்தகைய நிலைப்பாட்டை கொண்டதற்கு காரணம் அவ்வீரர்களுடைய விருப்பத்துடன், சோவியத்தின் கட்டளை முழுமையாக இயைந்திருந்தது ஆகும்; எனவே அவர்கள் தலைமை அலுவகத்தில் இருந்து வந்த உத்தரவை சிறிதும் பொருட்படுத்தவில்லை; இரண்டாவதாக அக்டோபர் 25 அன்று, பெப்ரவரியில் வந்த அரசாங்க அதிகாரம் என்ற தொப்புள்க்கொடியான மெல்லிய இணைப்பை துண்டிப்பதற்கு சிறிய, துணை எழுச்சி இருந்தாலே போதும் என்றிருந்தது. ஆனால் மாஸ்கோவில் எழுச்சி ஒரே கட்டத்தில் நடந்தது, அது நீடித்த தன்மையைக் கொண்டதற்கு அநேகமாக அதுதான் காரணமாகும்.

ஆனால் இங்கு வேறு ஒரு காரணமும் இருந்தது: தலைமை போதுமான உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை. மாஸ்கோவில் இராணுவ நடவடிக்கையில் இருந்து பேச்சுவார்த்தைகளுக்கு செல்லுதல் என்ற ஊசலாடும் தன்மை, பேச்சு வார்த்தைகளில் இருந்து இராணுவ நடவடிக்கைக்கு செல்லுதல் என ஆயிற்று. ஊசலாடுதல் என¢பது தலைமையிடம¢ இருந்து தொண்டர்களுக்கு சென்றால் அரசியலில் அது பொதுவாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்; பின்னர் ஆயுதமேந்திய எழுச்சிக்கான சூழ்நிலையின் கீழ் அவை உயிராபத்தை கொடுத்துவிடும். ஆளும்வர்க்கம் ஏற்கனவே தன்னுடைய வலிமையில் நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தது (இல்லாவிடில், பொதுவில் வெற்றிக்கு ஒரு நம்பிக்கை இருந்திராது); ஆனால் அதிகாரக்கருவி இன்னும் அதனுடைய கரங்களிலேயே இருந்தது. புரட்சிகர வர்க்கத்தின் பணி இந்த அரச கருவியை வெற்றி கொள்ளுதல் என்று ஆயிற்று. தொழிலாளர்களை எழுச்சிக்கு இட்டுச் செல்லுவதில் கட்சி தலைமை தாங்கிய வகையில், இதையொட்டி தேவையான முடிவுகளை பெறவேண்டியது அவசியமாயிற்று. அதாவது போர் என்றால் போர்தான் (A la guerre comme a la guerre). போர்ச்சூழலில், ஊசலாடுதலும், காலதாமதப்படுத்தலும் வேறு எந்தக் காலத்தையும் விட அனுமதிக்க இயலாதவையாகும். போரின் அளவு கோல் குறுகிய காலமாக இருக்க வேண்டும். சில மணி நேரங்கள் தாமதம்கடத்துவது கூட, ஆளும் வர்க்கத்திற்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் நடவடிக்கைகளை மீட்டுவிடும், அதேவேளை அதனை எழுச்சியாளர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டுவிடும். இதுதான் துல்லியமாக சக்திகளின் உறவைத் தீர்மானிக்கிறது, அது முறையே, எழுச்சியின் முடிவை தீர்மானிக்கிறது. இந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது மாஸ்கோவில் நடைபெற்ற செயற்பாடுகளின் போக்கை, அரசியல் தலைமையுடன் அது கொண்டிருந்த உறவுகளுடன் வைத்து படிப்படியாக ஆராய்தல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு தேசிய கூறின் தலையீட்டால், சிக்கலான, சில சிறப்பான சூழ்நிலையின் கீழ் ஒரு உள்நாட்டுப் போர் ந¤கழும¢போது, வேறு சில நிகழ்வுகளை குறிப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அத்தகைய ஆய்வு, உண்மை நிகழ்வில் கவனத்துடன் சீரணிக்கப்பட்டதின் அடிப்படையில், உள்நாட்டுப் போர் பற்றிய நம்முடைய அறிவை பெரிதும் விரிவாக்கும்; அதையொட்டி சில வழிவகைகள், விதிகள், பொதுவாகவே உள்நாட்டுப்போரில் கையாளப்படவேண்டிய முறைகள் பற்றிய ஒரு வகை "கையேடு" ஆக அது அமையும். ஆனால் அத்தகைய ஆய்வின் அரசியல் முடிவுகளின் பகுதியை மட்டும் எதிர்பார்த்து, உள்நாட்டுப் போரின் போக்கு மாகாணங்களில் பெரும்பாலும் பெட்ரோகிராடில் ஏற்பட்ட விளைவைத்தான் கொள்ளும் என முன்கூட்டிக் கூறமுடிந்தது; மாஸ்கோவில் சற்று தாமதம் ஏற்பட்டபோதிலும்கூட இதே முடிவுதான் ஏற¢படும் என இருந்தது. பெப்ரவரி புரட்சி பழைய கருவியை பழுதுடையதாக்கி விட்டது. தற்காலிக அரசாங்கம் அத்தகைய பழுதடைந்த கருவியைத்தான் மரபுரிமையாகப் பெற்றது; எனவே அது அதைப் புதுப்பிக்கவோ, வலுப்படுத்தவோ இயலாமல் போயிற்று. இதன் விளைவாக அதன் அரச கருவி பெப்ரவரியில் இருந்து அக்டோபர் வரை, அதிகாரத்துவத்தின் செயலற்ற தன்மையின் எச்சமாகத்தான் செயல்பட முடிந்தது. மாகாண அதிகாரத்துவம் பெட்ரோகிராட் எதைச் செய்ததோ, அதைச் செய்வதற்கு பழக்கப்பட்டுவிட்டது. இது பெப்ரவரியிலும் நிகழ்ந்தது, அக்டோபரிலும் மறுமுறை நிகழ்ந்தது. தன்னை வலிமைப்படுத்திக்கொள்ள நேரமில்லாமல் இருந்த ஒரு ஆட்சியை அகற்றுவதற்கு நமக்கு இது மாபெரும் சாதகமாக அமைந்தது. பெப்ரவரி அரச கருவியின் மிகக் கூடுதலான உறுதியற்ற தன்மையும் நம்பகமற்ற தன்மையும், உச்சத்தில் புரட்சிகர பரந்த மக்களுக்கும், கட்சிக்கும் கூட பெரும் தன்னம்பிக்கையை துளித்துளியாக புகட்டியதன் மூலம் நம்முடைய பணியை மிக எளிதாக்கின.

இதேபோன்ற நிலைமைதான் ஜேர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் நவம்பர் 9, 1918க்கு பின்னர் நிலவியது. ஆனால் அங்கு சமூக ஜனநாயகம் அரச கருவியில் ஏற்பட்டிருந்த வெடிப்புக்களை நிரப்பி, ஒரு முதலாளித்துவ குடியரசு ஆட்சி ஏற்படுத்துவதற்கு உதவியது; இந்த ஆட்சியானது, உறுதிப்பாட்டுக்கு ஒரு முன்மாதிரி என்று கொள்ளப்பட முடியாது என்றாலும், ஏற்கனவே இது ஆறாண்டு காலமாக நீடித்துள்ளது. ஏனைய முதலாளித்துவ நாடுகளை பொறுத்தவரையில், அவற்றிற்கு இந்த சாதகமான தன்மை இருக்காது; அதாவது முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சி அருகருகே இருந்த நிலை கிடையாது. அவர்களுடைய பெப்ரவரி புரட்சி எப்பொழுதோ முடிந்து விட்டது. உண்மையில் இங்கிலாந்தில் பண்டைய நிலப்பிரபுத்துவ முறையின் பல எச்சங்கள் இன்னும் உள்ளன; ஆனால் இங்கிலாந்தில் சுயாதீனமான பூர்சுவா புரட்சி வரும் எனக் கூறுவதற்கான அடிப்படைகளே முற்றிலும் கிடையாது. நாட்டில் இருந்து முடியரசு, பிரபுக்கள், மற்ற பழையனவற்றை அகற்றுவது என்பது, ஆங்கிலேய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வரும்போது அதன் துடைப்பத்தால் அது முதலில் பழையதை ஒரே வீச்சில் அகற்றும்போதுதான் சாதிக்கப்பட முடியும். மேற்கில் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது முற்றிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாளித்துவ அரசை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. அதனால் உறுதியான அரச கருவியோடு அது போராட்டம் நடத்த வேண்டும் என்ற பொருள் இல்லை; ஏனெனில் பாட்டாளி வர்க்க புரட்சிக்கான சாத்தியப்பாடு உள்ளது என கூறுவதே முதலாளித்துவ அரசு முற்றுமுழுதான சிதைவடையும் நிலையில் உள்ளது என்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றது. எமது நாட்டில் பெப்ரவரிக்கு பின்னர் தன்னை வலுப்படுத்திக்கொள்ள இயலாத ஒரு அரச கருவியை எதிர்கொண்ட வகையில் அக்டோபர் புரட்சி ஏற்பட்டது என்று கூறினால், மற்ற நாடுகளில் எழுச்சி என்பது அதிகளவில் சிதைய தலைப்பட்டிருக்கும் அரச கருவியை எதிர்கொள்ளும்.

மூன்றாம் அகிலத்தின் நான்காவது உலக காங்கிரசின் போதே நாம் சுட்டிக் காட்டியபடி, பழைய முதலாளித்துவ நாடுகளில், அக்டோபருக்கு முந்தைய எதிர்ப்பு சக்திகள் என்பது நமது நாட்டில் இருப்பதைவிட பொதுவாக அதிகமாக இருக்கலாம் என்பதை ஒரு பொது விதியாக முன்வைத்துக் கொள்ள முடியும்; வெற்றியை அடைவது தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் கடினமாக இருக்கும்; ஆனால் வேறு ஒரு வகையில், நாம் அக்டோபரில் கண்டதைவிட அதிகாரத்தை கைப்பற்றுவது அவர்களுக்கு உடனடியாக இன்னும் கூடுதலான, உறுதியான நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ளுவது எளிதாகும். நமது நாட்டில் தொழிலாள வர்க்கம் முக்கிய நகரங்களிலும் தொழில் மையங்களிலும் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர்தான் உள்நாட்டுப் போர் உண்மையான அளவில் வந்தது; அது சோவியத் ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் நீடித்திருந்தது. மத்திய, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது இன்னும் கடினமாக இருக்கும் என்பதற்கு பல குறிப்புக்களும் உள்ளன; ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு அதிக தடையின்றி அரசாங்கத்தை இயக்குவது முடியும். இத்தகைய வருங்காலத்தை பற்றிய முன்கருத்துக்கள் இயல்பாகவே ஊகக் கருத்துக்கள்தாம். எந்த ஒழுங்கில் புரட்சி ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் நடக்கும், எந்த அளவிற்கு இராணுவ தலையீடு இருக்கும், சோவியத் ஒன்றியம் அக்காலக்கட்டத்தில் எத்தகைய பொருளாதார, இராணுவ வலிமையை கொண்டிருக்கும் என்பதையெல்லாம் பொறுத்து பல விளைவுகள் ஏற்படும். ஆனால் எப்படிப் பார்த்தாலும், எமது நாட்டில் இருந்ததை காட்டிலும் கூடுதலாகவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகாரத்தை கைப்பற்றும் உண்மை வழிவகையில் கூடுதலான, தீவிர, வலுவான, தயாரிப்புடைய எதிர்ப்பை ஆளும் வர்க்கங்களிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும் என்பது அடிப்படையான, மறுக்கமுடியாத எதிர்பார்ப்பாகும். எனவே நாம் ஆயுதமேந்திய எழுச்சியை குறிப்பாகவும், உள்நாட்டு போரை பொதுவாகவும் ஒரு கலையென பார்ப்பது ஒரு இன்றியமையாத கடமையாகும்.

 

 


Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved