சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுடன் தமிழன் பத்திரிகை நடத்திய நேர்காணல்

இலங்கையில் வெளிவரும் தமிழ் நாளிதழான தமிழன் பத்திரிகை, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவை நேர்காணல் செய்து, கடந்த செப்டெம்பர் 15 அன்று ஞாயிற்றுக் கிழமை பிரசுரித்திருந்தது. பத்திரிகையின் முழு பக்கமொன்றில் வெளியான அந்த செவ்வியை முழுமையாக இங்கு பிரசுரித்துள்ளோம். பத்திரிகையின் ஊடகவியலாளர் கே. சுபானி இந்த நேர்காணலைச் செய்துள்ளார்.

சாமானியர்களின் ஆட்சியே நாட்டுக்குத் தேவை! என்கிறார் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன

பாணி விஜேசிறிவர்தன

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்க இம்முறை அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். இதனால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகின்றது. இவ்வாறான நிலையில் இத்தேர்தலை நீங்கள் எவ்வாறு அணுகுகின்றீர்கள்?

ஜனாதிபதி தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதானது, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தில் ஆழமடைந்துள்ள நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும். பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளை அமைத்தவர்களும் போட்டியிடுகின்றனர். சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யை எடுத்துக்கொண்டாலும் அதில் இருந்து பிரிந்து சென்றவர்களே முன்னிலை சோசலிசக் கட்சியை அமைத்து இன்று மக்கள் போராட்ட முன்னணி என்ற பெயரில் நுவன் போபகேவை தேர்தலில் நிறுத்தியுள்ளனர். பிரதான கட்சிகள் அனைத்தும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது தொடுத்த தாக்குதல்களின் விளைவாக மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளன. அதன் விளைவாகவே அவை பிளவடைந்துள்ளன. ஜே.வி.பி.யும் தனித்து போட்டியிட முடியாமையின் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியை அமைத்துக்கொண்டது.

நாம் இந்தத் தேர்தலை, எமது சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை மக்கள் மத்தியில் முன்வைப்பதற்கான இன்னொரு ஊடகமாகவே பயன்படுத்திக்கொள்கிறோம். இந்த தேர்தலில், “ஏகாதிபத்திய போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக சோசலிச வேலைத் திட்டம்” என்பதே எமது தொனிப்பொருளாகும்.

மூன்று முனைகளில் ஏகாதிபத்தியப் போர் தீவிரப்படுத்தப்படப்படுகின்றது. காசா மீதான தாக்குதல் முழு மத்திய கிழக்குக்கும் விரிவாக்கப்படுகின்றது. உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் உக்கிரமடைந்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட உக்ரேனிய இராணுவம் ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்ற நிலையில், அது எந்த சந்தர்ப்பத்திலும் அணுவாயுத மோதலாக மாறலாம். மறுபக்கம் அதே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், சீனாவுக்கு எதிரான போரைத் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலைமையில், அணுவாயுத மோதலின் பேரழிவு ஆபத்து பாரதூரமாக எம்முன்னே வந்திருக்கின்றது.

இந்த நிலைமையானது பூகோள முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் வெளிப்பாடாகும். இந்த பேரழிவுகரமான நிலைமை பற்றி எம்மைத் தவிர வேறு எந்தவொரு வேட்பாளரும் பேசுவதில்லை. அவர்கள் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய திட்டங்களுடன் அணிசேர்ந்துள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சியானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு உலகப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச ரீதியில் போராடி வருகின்றது. நாம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதை மைய விடயமாக முன்வைக்கின்றோம்.

சிக்கன வெட்டுக்களைப் பற்றி கூறுவதெனில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன வெட்டுக்களை ஆழப்படுத்தியுள்ளார். தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்பட்டுள்ளது. மந்த போசனமும் வறுமையும் அதிகரித்துள்ளன. முதலாளித்துவ கட்டமைப்புக்குள் இவற்றை தோற்கடிக்க முடியது. ஆட்சிக்கு வரும் எந்த முதலாளித்துவக் கட்சியும் இந்த வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்லும். அதனால் நாம் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதை இலக்காகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசில் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை இந்த ஜனாதிபதி தேர்தலில் வலியுறுத்துகிறோம்.

இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப நாம் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்கின்றோம். வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், தொழிலாளர் வசிப்பிடங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். அந்த நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களதும் கிராமப்புற ஒடுக்கப்பட் மக்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அந்த மாநாடு, பாராளுமன்றத்துக்கு முற்றிலும் வேறுபட்டது. பாராளுமன்றம் என்பது, முதலாளித்துவ பிரதிநிகளால் அமைந்த, தொழிலாளர் மற்றும் ஏழைகளுக்கு எதிரான தாக்குதல்களை நடைமுறைப்படுத்துகின்ற, ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற கொடூர சட்டங்களை நிறைவேற்றுகின்ற, போலி விவாதங்களை நடத்துகின்ற, தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான முதலாளித்துவவாதிகளின் நிறுவனம் ஆகும். நாம் முன்வைக்கும் மாநாடானது தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத உடனடி அவசியங்களை கலந்துரையடுகின்ற, இந்த எரியும் பிரச்சினைகளை வெல்வதற்கான வேலைத்திட்டத்தை பிரேரித்து கலந்துரையாடி நிறைவேற்றிக்கொள்ளப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் அதிகார கோட்டையாகும். இதைச் சூழ கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவது அவசியமாகும். இந்த மாநாட்டின் மூலம் இயக்கப்படுகின்ற தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரிசியல் போராட்டத்தில், சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகளின் அராசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரும் வேலைத் திட்டத்தை இந்த தேர்தலில் முன்வைத்து அதற்காகப் போராடுகின்றோம்.

உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் நோக்கம் மற்றும் இலக்கு எவ்வாறானதாக அமைந்திருக்கிறது? அதில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் முன்வைக்கப்பட்டுள்ளனவா?

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் நோக்கம், முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துகின்ற தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதே ஆகும். அதற்காக தொழிலாள வர்க்கத்தினதும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களினதும் நனவை அபிவிருத்தி செய்வதாகும்.

நாட்டில் இரண்டு வர்க்கங்கள் உள்ளன. ஒன்று முதலாளித்துவ வர்க்கம் மற்றையது தொழிலாள வர்க்கம். நாட்டின் பொருளாதாரம் என எல்லோரும் கூறுவது, தொழிலாள வர்க்கத்தின் செலவில், முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதையே ஆகும். அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே ஆகும்.

அதை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து பிழிந்தெடுக்கப்படும் நிதி, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவே பயன்படுத்தப்படும். தொழிலாள வர்க்கத்தின் தேவைக்காக கடன் எடுக்கப்படவில்லை. முதலாளித்துவ வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கவே கடன் வாங்கப்பட்டுள்ளது. அதனால் தொழிலாள வர்க்கமும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் அந்தக் கடனைச் சுமக்க வேண்டியதில்லை. அதனால், வெளிநாட்டுக் கடனைத் திருப்பி செலுத்துவதை நிராகரிக்குமாறு நாம் பிரேரிக்கின்றோம். அதை சர்வதேச தொழிலாள வர்கத்தின் ஒத்துழைப்புடன் செய்ய முடியும்.

கட்சித் தாவல்கள் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? உங்களுக்கு ஏதாவது அழைப்புகள் வந்துள்ளனவா? அல்லது நீங்கள் யாருக்கும் அழைப்பு விடுத்துள்ளீர்களா?

கட்சித் தாவல் என்பது அரசியல் ஸ்தாபனத்தின் ஆழமான நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும். முதலாளித்துவ தட்டினரின் அவநம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும். அதே நேரம், அந்த கட்சிகள் இடையில் எந்தவொரு மூலாபோய வேறுபாடும் கிடையாது. அனைவரும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தாயாரக உள்ளனர்.

1968 இல் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் 56 ஆண்டுகால வரலாற்றில், நாம் முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்ததில்லை. நாம் அப்படிச் சேரமாட்டோம் என்பதற்கு எமது வரலாறே சாட்சியாகும். அதனால், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை இடைவிடாது தொடர்ந்து பாதுகாக்கின்ற ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. கட்சியின் தொடக்கமே அத்தகைய கூட்டுச் சேரலுக்கு எதிரான போராட்டத்தின் விளைபயன்தான். 1964ல் லங்கா சம சமாஜக் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாளித்துவ அராசங்கத்தில் கூட்டுச் சேர்ந்தமைக்கு எதிராக நின்ற இளைஞர்கள் 1968இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அதன் கிளையாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்தனர். அப்போதிருந்து நாம் அனைத்துலகக் குழுவின் பகுதியாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் சர்வதேசவாதத்தையும் கொள்கைப் பிடிப்புடன் பாதுகாத்து வந்துள்ளோம். முதலாளித்துவ கட்சிகள் அழைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து அதை நிராகரித்திருக்கின்றோம். இது, எமக்கும் போலி இடதுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளில் ஒன்றாகும்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக் குறித்த உங்களின் கண்ணோட்டம்? அதற்காக உங்களின் கட்சியால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆட்சியமைப்பின் இப்பிரச்சினைக்காக நீங்கள் முன்வைக்கப்போகும் தீர்மானம் என்ன?

1948இல் இலங்கை ஆளும் வர்க்கம் அமைத்துக்கொண்ட சிலோன் என்பது, இப்போது ஸ்ரீலங்கா என மாற்றப்பட்டு ஒற்றை ஆட்சி வடிவமாக உள்ளது. அது, ஆரம்பத்தில் இருந்தே தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாத ஒடுக்குமுறை ஆட்சியாகும். ஆட்சியில் இருந்து வந்த கொழும்பு முதலாளித்தவ வர்க்கம், சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த, வரலாறு முழுவதும் இனவாதத்தைப் பயன்படுத்தி வந்துள்ளது. இதன் உச்ச கட்டமாகவே 1983இல் இனவாத யுத்தம் வெடித்தது.

இந்தப் போருக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே தொழிலாள வர்க்க சர்வதேசவாத நிலைப்பாட்டில் இருந்து போராடி வந்துள்ளன. போரின் ஆரம்பத்தில் இருந்தே வடக்கு கிழக்கில் இருந்து அரச இராணுவத்தை உடனடியாக நிபந்தனையின்றி வெளியேற்று என்ற கோசத்தின் கீழ் நாம் தொடர் போராட்டம் நடத்தி வந்துள்ளோம்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் விளக்கியவாறு, முதலாளித்துவப் பரட்சி காலங் கடந்த இந்தியா - இலங்கை போன்ற நாடுகளில் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கமானது, ஆரம்பத்தில் இருந்தே ஒடுக்கப்பட்ட இனத்தின் தேசிய ஜனநாயக உரிமை உட்பட ஜனநாயக உரிமைகள் எதையும் உறுதிப்படுத்த இலாயக்கற்றது. இந்த உரிமையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. அதனாலேயே நாம் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துடன் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவில், தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரப் போராடுகிறோம். அது, சர்வதேச சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் மற்றும் தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாகும். இவ்வாறு, தமிழ் பேசும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத் திட்டமாக சிங்களம் மற்றும் தமிழ் பேசும் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க நாம் போராடுகின்றோம்.

சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு வேண்டும் என்பதே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் தலைமைகளின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. இதுதொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

அதிகாரப் பரவலாக்கல் எந்த வகையிலும் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் கோரிக்கை அல்ல. அது தமிழ் பிரபுக்களின் வரப்பிரசாதங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் கோரிக்கை ஆகும். 13வது திருத்தத்தில் பிரேரிக்கப்படும் அதிகாரப் பரவலாக்கலானது, தமிழ் பிரபுக்களுக்கு சலுகைகளை கொடுத்து, அவர்களை கொழும்பு ஆளும் வர்க்கத்துடன் உடன்பாட்டுக்கு கொண்டு வருவதை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், கொழும்பில் சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தமிழர் விரோத இனவாத பண்பு காரணமாக, இந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கும் இடம் கொடுக்கவில்லை. நாம் போலி அதிகாரப் பரவலாக்கலுக்காகப் போராடவில்லை. முதலில் குறிப்பிட்டவாறு ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிக்க முடியும்.

இந்நாட்டில் 200 வருடகால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது. அடிப்படை சம்பள அதிகரிப்பு என்ற போர்வையில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் சரி, ஆட்சியிலிருக்கும் அரசாங்கமும் சரி அம்மக்களை வஞ்சித்தே தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில் இப்பிரச்சினையை நீங்கள் எவ்வாறு அணுகுகின்றீர்கள்? அம்மக்களுக்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன?

பெருந்தோட்டத் துறையில் தொழிற்சங்கங்களாக செயற்டும் கட்சிகளே, கொழும்பு முதலாளித்துவ அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக, தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை திசை திருப்பி விடுவதில் பிரதான பங்காற்றுகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவை இந்த வேலையை தொடர்ச்சியாக செய்துவந்துள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் அல்லது கட்சிகள், தொழிலாளர்களுக்கு எதிராக, முதலாளித்துவ அரசாங்கங்களதும் பெருந்தோட்டக் கம்பனிகளதும் அவசியங்களுக்காகவே செயற்படுகின்றன.

அதனால், முதலில், தொழிலாள வர்க்கமும் தோட்டத் தொழிலாளர்களும் தங்களது சம்பளப் பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளை வெல்வதற்கான போராட்டத்தை முன்கொண்டு செல்லவேண்டுமெனில், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புகளில் இருந்து சுயாதீனமாகி, ஒவ்வொரு தோட்டத்திலும் தங்களது நடவடிக்கை குழுக்களை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை குழுக்கள், சிங்களம் பேசும் நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களுடன் ஒன்றிணைந்து, மேற் குறிப்பிட்ட தொழிலாளர்களதும் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப போராட வேண்டும்.

அவ்வாறு ஆட்சிக்கு கொண்டுவரப்படும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் மூலம், பெரும் வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ஆட்சியின் கீழ் மக்கள்மயப்படுத்த முடியும். இவ்வாறு கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெருந்தோட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ஆட்சியின் கீழ் கொண்டுவருவதன் மூலம், அவர்களுக்கு ஆரோக்கியமான கண்ணியமான வாழ்க்கைய நடத்துவதற்குத் தேவையான மாத சம்பளத்தை ஸ்தாபிக்க முடியும். அவர்களின் வாழ்கை நிலைமையை தூக்கி நிறுத்த முடியும். அவர்களின் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வேகமாக அபிவிருத்தி செய்ய முடியும். வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.  

2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நீங்கள் போட்டியிட்டுள்ளீர்கள். இந்நிலையில் இம்முறைத் தேர்தலிலும் களம்காண்பதற்கான காரணம் என்ன? உங்களின் இலக்கு எவ்வாறானதாக அமைந்திருக்கிறது?

இம்முறையைப் போலவே, 2015 மற்றும் 2019ம் ஆண்டுத் தேர்தல்களிலும் எமது இலக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை கொண்டு செல்வதற்கான மேடையாகவே பயன்படுத்திக்கொண்டோம். எமது சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கொண்டு செல்வதை தீவிரமாக்குவதன் மூலம், உழைக்கும் மக்களின் நனவை அபிவிருத்தி செய்து, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியழுப்புவதும், சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவதுமே ஆகும்.

நீங்களும் ஓர் ஆசிரியர். ஆசிரிய துறையின் சாவால்கள் குறித்து நன்கறிவீர்கள். இவ்வாறான நிலையில் ஆசிரியர் துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு யோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள். ஆசிரியர் துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உங்களின் யோசனை என்ன?

ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், கல்வியில் மேற்கொண்ட வெட்டுக்களால் முழு கல்வித் துறையும் பெரும் சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அதன் ஒரு பகுதியே ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமை ஆகும். ஏனைய தொழிலாளர்களைப் போலவே அவர்களது சம்பளமும் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. வேலைச் சுமை அதிகரித்துள்ளது. அதே போல் கற்பதற்கு தேவையான வளங்களுக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள், விஞ்ஞானக் கூடங்கள் மற்றும் தளபாடங்களுக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது. அத்துடன் ஆசிரியர் பயிற்சிகளும் அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளன. வகுப்பறைகளில் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதெனில், அவசியமான வளங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஏனைய தொழிலாளர்களுக்குப் போலவே ஆசிரியர்களின் ஊதியமும் வாழ்க்கைச் செலவுப் புள்ளி அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும். வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். கட்டிடங்கள் விரிவாக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பில்லியன் கணக்கான பிரமாண்டமானளவு நிதி வேண்டும். முதலாளித்துவ முறைமையின் கீழ் பில்லியன் கணக்கான நிதி கிடைப்பதற்கு மாறாக நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. அதனால் நாம் முன்வைக்கும் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தின் கீழ் வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்களும் மக்கள்மயப்படுத்தப்படுமாயின், அந்த வங்கிகளில் இருக்கும் பில்லியனர்களின் பில்லியன் கணக்கான நிதிகளை கல்வி, சுகாதாரம் போன்ற மனித தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். ஏனைய பிரச்சினைகளைப் போலவே ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் இவ்வாறே தீர்க்க முடியும்.

Loading